சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கடந்துகொண்டிருக்கும் தொலைவு சிறுகதை குறித்து /முபீன் சாதிகா

இன்று (24.02.2023) நடைபெற்ற விருட்சம் கூட்டத்தில் பேசியது..

மணமான ஆண் பெண் பாத்திரங்கள் இடம் பெற்ற கதை. பெண் பாத்திரம், மிருணாளினி என்ற பெயருடைய பாத்திரம். அவளுக்கு மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அவள் ஆண் பாத்திரத்திடம்தஞ்சம் அடைகிறாள். ஆண் பாத்திரம் குடும்பத்தை விட்டு விலக முடியாத நிலை உள்ளது. அவனுக்கு மிருணாளினியின் உடல் மீதான ஆர்வம் உள்ளது. அதை நோக்கிச்சென்றடைய முடியாமல் பல தூரம் கடக்க வேண்டியிருக்கிறது.

தொலைபேசியில் தகவல் வருகிறது. அலைபேசி இல்லாத காலம் என்பதை பதிவு செய்ய முனைகிறது.ஆனால் ஆண் கதாபாத்திரத்திடம் மோட்டர் சைக்கிள் உள்ளது. பியுன் என கடைநிலை ஊழியரை விளிக்கும் வழக்கம் உள்ளதைக் காட்டுகிறது. மிருணாளினி என்ற பெயர் நவீனம்மாக உள்ளது. லாட்டரி சீட்டுக் கடை இருக்கும் காலகட்டம் எனக் காட்டுகிறது. பெண்ணின் முகத்தைப் பெரிய விளம்பர போர்டில் வரைவதைக் காட்டுகிறது கதை.

பெண் காரணம் தெரியாத மணமுறிவுக்கு உள்ளாகிறாள். ஆண் பாத்திரத்தின் வீட்டில் தங்க விருப்பம் காட்டுகிறாள். அது முடியாது என ஏமாற்றம் அடைகிறாள். ஆணின் மனைவி அடுப்பங்கறையில் இருப்பவளாக மட்டுமே அவனுக்குப் பதிந்திருக்கிறது. அவன் குழந்தைகள் பாசத்தால் அவனைக் கட்டிப்போட்டவை. பெண்ணின் கூந்தல் அவனை ஈர்க்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், அவள் குழந்தை எல்லாவறையும் கடந்து அவன் கூந்தல் வரைச் சென்று சேர்வது அதிகத் தொலைவாகும் போல் அவனுக்குத் தோன்றுகிறது.

இந்தக் கதை சில ஊகங்களுக்கு இடம்கொடுக்கிறது. பெண் பாத்திரம் ஆண் பாத்திரத்துடன் கொண்ட உறவால் மணமுறிவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மணமுறிவைச் செயல்படுத்த முடியாமல் போனதற்கு கடமை ஒரு காரணம். இரு பால் உறவு நிறுவனம் ஒவ்வொருவருடைய சுயத்திலும் இது போன்ற அம்சங்களைக் கொடுத்துவிடுகிறது. பெண்ணும் கடமையில் இருப்பவள்தான் அதை மீறுகையில் தண்டனைக்கு உட்படுகிறாள். மேலும் அவள் கணவனின் உடைமை. அதை மீறுகையில் அடி வாங்குகிறாள்.


இந்தக் கதையில் வரும் மூன்று பெண்களில் விளம்பர போர்டில் வரையப்படும் மிகப் பெரிய முகத்தைக் கொண்ட பெண் போல் மனைவியை விட மற்ற எல்லாப் பெண்களையும் விட பெரிதாக அந்த ஆண் நினைக்கவேண்டும் என்பதை அந்தப் பெண் பாத்திரம் வலியுறுத்துவது போல் இருக்கிறது. அது அந்தப் பெண் பாத்திரத்தை நினைவுபடுத்துவதாக இருக்கும் என்பதால் இப்படி ஒரு வர்ணனை கதைக்குள் வந்திருப்பது போல் தெரிகிறது.

கதையின் தொடக்கத்தில் அடித்த தொலைபேசி கதையின் இறுதியிலும் அடிக்கிறது. அல்லது ஒரே முறைதான் அடிக்கிறது. அது அடித்து முடிப்பதற்குள் இந்தக் கதை கடந்து செல்லும் தொலைவாக இருக்கிறது.

நேரடியாக இந்தக் கதை திருமணத்திற்கு மீறிய உறவு பற்றிப் பேசுகிறது. திருமணத்தை மீறிய உறவைக் கைக்கொள்ள முடியவில்லை என்று அந்தப் பெண் வெளிப்படையாகச் சொல்கிறாள்.அதே கருத்தை அந்த ஆண் பாத்திரமும் கொண்டிருக்கிறது. குழந்தைகள் இருப்பது சுமையாக இருவருமே நினைக்கிறார்கள்.

கடந்த காலத்தில் நடப்பது போல் காட்டி தற்காலத்தின் உளவியலை முன்வைக்கிறது கதை. கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குக் கடந்து வரும் தொலைவைக் குறிக்கிறது

கதையின் பொறுப்பு

வெறும் ஒரு திருமணத்திற்கு மீறிய தொடர்பைப் பற்றிய கதை என்று மட்டும் வாசித்து இதனை விட்டு விட முடியுமா என்றால் இல்லை. திருமணத்திற்கு மீறிய தொடர்பில் ஈடுபட இரு பாத்திரங்கள் படும் அவஸ்தை என்றுதான் இந்தக் கதை கூறியிருப்பது போல் வாசிக்க இடமளிக்கிறது.

மணமுறிவு ஏற்பட்ட பின் மற்றொரு உறவைத் தொடங்குவது குறித்து எந்தச் சிக்கலும் இல்லை என்பதுதான் இருபால் நிறுவனமயம் கொடுத்திருக்கும் சுதந்திரம். ஏன் அதை மீறுவதை இன்பமாக சித்திரிக்கவேண்டும்.

இரு பால் நிறுவனமயத்தை மீறிய கதை என்ற முற்போக்கு வாசிப்புக்கும் இடமளிக்கவில்லை. இரு பாத்திரங்களும் தங்கள் உறவுகளை விடுத்து அதே போன்ற ஓர் உறவைத்தான் உருவாக்க விரும்புகின்றன. அதனால் அதில் எந்த ஒரு புதுமையும் இல்லை. .இரு பாத்திரங்கள் தங்கள் நியாயமான நேசத்தைப் பரிமாறிக் கொள்ள இயலாமல் அவஸ்த்தைப்படுகின்றன என்ற பரிவும் ஏற்படவில்லை.

மணமுறிவுக்கான ஆசை அவனுக்கு நிராசையாகிவிடும் என்பதைப் போல் தொலைபேசி அடித்துச் சொல்கிறது. தொலைபேசி அடித்து முடிவதற்குள் திருமணம் குறித்த அவநம்பிக்கையையும் கதை உருவாக்கவில்லை. .

பல்வேறு திருமண முறிவு கதைகள், தொடர்கள் வந்து போன பின் இது மற்றும் ஒரு கதையாக மட்டுமே நிற்கிறது.

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்பதைப் போல அந்தப் பெண் மழையில் நனைந்த மலர்ச் செடி என்ற வர்ணனை வேறு வருகிறது. மரபு சார்ந்த திருமணத்தை மீறிய உறவு குறித்த அம்சத்தை எந்த ஒரு வித்தையையும் முத்திரையையும் காட்டாமல் மிகச்சாதாரணமாக எழுதப்பட்ட கதை.


……………


கதையை நான் சரியாக வாசிக்கவில்லை என்றார் எழுத்தானர். குறிப்பாக தொலைபேசி அடிப்பதை இரண்டு முறை அடிப்பதாக நான் குறிப்பிட்டது தவறு என்றார். ஒரே முறை அடித்து அதை எடுத்துப் பேசுவதற்குள் நடந்த கதைக்கும் இரண்டு முறை அடித்து எடுத்துப் பேசுவதற்குள் நிகழ்ந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. கடந்த காலத்தில் நடப்பது ஓர் காட்டினாலும் உளவியல் நிகழ்காலத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்கிறது. விளம்பர போர்டில் மிகப்பெரிய அளவில் வைப்பது அந்தக் காலத்தில்அரிதில்லை என்றார். அதன் பொருளதான் முக்கியம். இந்தக் கதை ஒரு மாயமாம். எழுத்தாளர் சொல்கிறார். கட்டுடைத்தலுககுப் பழகாதவர் இப்படித்தான் சொல்வார் . அதற்குள். எழுத்தாளர் நான் சரியாக. வாசிக்கவில்லை என்று சொன்னதை பெரிதும் பாராட்டி ஒருவர் பின்னூட்டம் வேறு இட்டுவிட்டா். வாசிப்பவரின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு எந்த எழுத்தாளருக்கும் உரிமையில்லை.