தாவோ கவிதைகள் பத்து /தமிழில் எம்.டி.முத்துக்குமாரசாமி


—-
எது ஒரு சூழலில் சரியாக இருக்கிறதோ
அது இன்னொரு சூழலில் சரியாக இருப்பதில்லை
எது ஒரு சூழலில் தவறாக இருக்கிறதோ
அது இன்னொரு சூழலில் தவறாக இருப்பதில்லை
ஹொய்னாசி
———————————————
அறிவுலகில்
தினசரி ஏதோ ஒன்று புதியதாய் சேர்கிறது
தாவோவை பின் தொடர்வதால்
ஏதோவொன்றை
தினசரி விட்டு விட வேண்டியிருக்கிறது
லாவோ ட்சூ
———————————
புகழைத் தேடாதே. திட்டங்கள் போடாதே
செயல்களில் ஆழ்ந்திருக்காதே
உனக்குத் தெரியுமென்று நினைக்காதே
எல்லாமே எல்லையின்மையில் இருக்கின்றன என்ற உணர்வுத் தெளிவு கொள்
எங்கே பாதையில்லையோ அங்கே அலைவுறு
சொர்க்கம் உனக்கு என்ன கொடுத்ததோ அதுவாக எல்லாம் இரு
ஆனால் நீ எதையுமே பெறவில்லை என்பது போல செயல்படு
காலியாக இரு,
அவ்வளவுதான்.
-சுவாங்க் ட்சூ
—-
உனது வேலை முடிந்தவுடன்
பின்வாங்கிவிடு
அதுதான்
சொர்க்கத்தின் வழி
— லாவோ ட்சூ
——
திறன்கள் இயல்பில் வாய்த்தவர்களைப் உயர்த்தாமலிருப்பது
பூசல்களைத் தவிர்க்கிறது
செல்வங்களை மதிக்காமலிருப்பது
திருட்டைத் தவிர்க்கிறது
ஆசையைத் தூண்டுபவற்றை பார்க்காமலிருப்பது
இதயத்தின் குழப்பங்களைத் தவிர்க்கிறது
—லாவோ ட்சூ
——-
ஒருவன் தனக்குத் தானே
உண்மையாக இருந்து
அதன் போதனைகளை பின்பற்றுவானே என்றால்
யார் குருவில்லாமல் இருக்கவேண்டும்?
சுவாங்க் ட்சூ
——-
எனக்கு இந்த உலகம் எதை மகிழ்ச்சி எனக் கருதுகிறதோ அது மகிழ்ச்சியானதா மகிழ்ச்சியற்றதா என என்னால் சொல்ல இயலாது
ஆனால் மகிழ்ச்சியை அடைவதற்கான அவர்களின் வழியைப் பார்க்கும்போது
எப்படி அவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள் என்பதையும்
அதிலேயே எப்படி கருத்தூன்றி இருக்கிறார்கள் என்பதையும்
மனிதக்கூட்டத்தின் அவசரத்தையும்
தங்களை எங்கே நிறுத்திக்கொள்வதென்று தெரியாமல் இருப்பதையும்
திசை மாற்றம் அறியாதிருப்பதையும்
மகிழ்ச்சியை அடைவதற்கான நெருக்கு வட்டத்தில் இருப்பதாக சொல்வதையும் பார்க்கும்போது
நான் கருதுவது என்னவென்றால்
மகிழச்சியை நீ தேடுவதை நிறுத்தும் வரை
அதை நீ அடையமுடியாது
சுவாங்க் ட்சூ
—————————————
தாவோ என்பது காலிப் பாத்திரம்
அது பயன்படுத்தப்படுவது என்றுமே தீர்ந்துபோகாதது
அது பத்தாயிரம் பொருட்களுக்கு
அடிமுடியற்ற மூலம்
—- லாவோ ட்சூ
—-
யார் நன்றாக நடக்கிறார்களோ
அவர்கள் சுவடுகளை விட்டுச் செல்வதில்லை

யார் நன்றாகப் பேசுகிறார்களோ
அவர்கள் தவறுகள் செய்வதில்லை

யாருக்கு நன்றாகக் கணக்கிடத் தெரியுமோ
அவர்களுக்கு வாடிக்கையாளர் முகப்பிடம் தேவையில்லை

யாருக்கு எதையும் நன்றாகப் பூட்டத் தெரியுமோ
அவர்களுக்குத் திறவுகோல் தேவையில்லை
என்றாலும்
அவர்கள் எதை மூடுகிறார்களோ
அதைத் திறக்க இயலாது
-லாவோ ட்சூ
———————————