துளி – 225
அழகியசிங்கர்

தமிழில் மிக முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன். அவருக்குத் தமிழில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் கவிதையைத் தவிர வேற எதுவும் சிந்திக்கவில்லை. எந்தப் பெரிய எதிர்பார்ப்பின்றி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர்.
பழந்தமிழில் பழக்கமானவர். மரபுக் கவிதையிலும் ஊறியவர். அவர் கவிதைகள் முழுவதும் மரபு கலந்த புதுக்கவி9தைகள். கிட்டத்தட்ட 700 கவிதைகள் எழுதி உள்ளார். 3 கட்டுரைத் தொகுப்புகள் கொண்டு வந்திருக்கிறார். சிறந்த பேச்சாளர். கவிதையைக் குறித்துப் பல மணி நேரம் நண்பர்களுடன் உரையாடுவார்.
பல இளங்கவிஞர்கள் அவரை நாடி அவரிடம் கவிதை குறித்து சந்தேகம் கேட்பார்கள்.
அவருக்கு என்னமோ சாகித்திய அகாதெமி விருது மட்டும் கிடைக்கவில்லை. ஆனால் இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற புத்தகம் அவர் பெயரில் வெளிவரச் சாகித்திய அகாதெமி முயற்சி செய்தது.
எழுதுவதற்கு எனக்கு அந்த வாய்ப்பு அளித்தது. இதற்காகப் பெருமைப் படுகிறேன். கடந்த ஒரு ஆண்டாக முயற்சி செய்து இந்தப் புத்தகத்தை வெற்றிகரமாக முடித்து விட்டேன்.
இந்தப் புத்தகத்திற்கான அத்தனைப் புகழும் ஞானக்கூத்தனைத்தான் சேரும்.
எனக்கு அவருடன் 30 வருடங்களுக்கு மேல் பழக்கம். விருட்சம் ஆரம்ப இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் ஞானக்கூத்தன் கவிதை வராமலிருக்காது.
புத்தகம் கொண்டு வரமுடியாத கடினமான சூழலில் அவருடைய புத்தகமான ஞானக்கூத்தன் கவிதைகள், கவிதைக்காக என்ற கட்டுரைத்தொகுதி, பென்சில் படங்கள் என்ற இன்னொரு கவிதைத் தொகுப்பும் கொண்டு வந்தேன்.
அவருடன் இணைந்து 2000ஆம் ஆண்டில் ந.பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழா நடத்தினோம். ஞானக்கூத்தனின் 682 கவிதைகளைப் படித்து முடித்தேன். மேலும் அவருடைய கட்டுரைத் தொகுதிகளையும், அவர் எழுதிய பல கட்டுரைகளையும் படித்தேன். ஆரம்பக் காலத்தில் அவர் எழுதிய கவிதைகளிலிருந்து, அவர் மரணம் அடையும் தறுவாயில் அவர் கவிதைகளை எப்படி மாற்றி எழுதி உள்ளார் என்பதைப் புத்தகத்தில் காட்டியிருக்கிறேன். என் புத்தகம் 170 பக்கங்கள் வரை வந்தது. ஆனால் சாகித்திய அக்காதெமி அறிவுரைப்படி இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற இப் புத்தகம் 128 பக்கங்களுக்குள் முடித்து விட்டேன்.
பலப்படைப்பாளிகள் ஞானக்கூத்தன் கவிதைகள் குறித்துக் கூறிய கருத்துக்களைச் சேர்க்க முடியவில்லை.
ஆனால் முக்கியமான மூன்றைச் சேர்த்தேன். 1. ஞானக்கூத்தன் வாழ்ந்த வீடு, 2. அவர் வரைந்த ஓவியம், 3அவருடைய கையெழுத்து.
இந்தப் புத்தகத்தில் நான் முக்கிய அம்சமாக நான் கருதுவது அவருடைய பேட்டி. அவருடைய புதல்வர் திவாகர் ரங்கநாதன் அவர் தந்தையின் கவிதைகளைப் பற்றிக் கூறியது.
இந்த விதத்தில் மற்ற எழுத்தாளர்களுக்காக எழுதப்படும் இந்திய இலக்கியச் சிற்பிகள் புத்தகத்திலிருந்து இது மாறுபட்டது. நான் இதற்காகப் பெருமைப் படுகிறேன்.
ஒப்பற்ற கவிஞனுக்காக நான் தொடுத்த மலரஞ்சலி.
