நாவல் : தனி இதழ் நன்கொடை ரூ 20/பானுமதி

ஆசிரியர்: அழகிய சிங்கர்

வெளியீடு: விருட்சம்

சுயசரிதையாகவும், புனைவு என்று தோன்றும் வகையிலும் மிக சிறப்பாக இந்த நாவலை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

தன் வாழ்க்கையும், அதில் சாத்தியமாக நடந்திருக்கக் கூடிய விஷயங்களையும், அப்படி நடக்காதவைகளையும், தன் உறவினர் நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும், மயக்கும் தமிழில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, நிகழ்வுகளை கோர்வையாகவும், கோர்வையற்று முன்னும் பின்னுமாகவும், எழுதுவதில் திரு லா ச ராமாமிர்தம் திறமையானவர்.

இந்த நாவலின் ஆசிரியர் அந்த மயக்க மொழியை கொண்டிருக்கவில்லையே தவிர, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தான் பார்த்த சமுதாயத்தில் நடந்த/நடக்கும் நிகழ்வுகளை எளிமையான தமிழில் அழகாக எழுதியுள்ளார்.

40 வருடங்களாக, ஒரு தனி நபராக, விருட்சம் என்னும் சிறு பத்திரிகையை, கவிதைகளின் பால் கொண்ட நேசத்தால் நடத்தி வருகிறார். காலப்போக்கில் அந்த இதழில் கதைகளும், உரையாடல்களும் இடம் பெற்றாலும், கவிதைக்கும் சிறந்த இடம் அளிக்கிறார். மேலும் மெய்நிகர் கூட்டங்களை ஒவ்வொரு வெள்ளியன்று மாலைகளில் கவிதை, கதை ஆகியவை பற்றிய உரையாடல்கள் மூலம் சிறப்பாக நடத்தி வருகிறார். ‘நவீன விருட்சம் டெய்லி’ என்ற மின்னிதழும் வெளியிடுகிறார். கதை புதிது, சொல் புதிது ஆகிய குழுமங்கள், பல கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இவர் அமைத்துத் தந்திருக்கும் அற்புதமான தளம்.

இந்த நாவலில் அருவி, பிரக்ஞை, பூர்வா போன்ற இதழ்களைப் பற்றி சிறப்பான அறிமுகம் கிடைக்கிறது. அதைப்போலவே பெயர் மாற்றப்பட்டு சொல்லி இருந்தாலும் பிரமீளை பற்றிய ஒரு முழு சித்திரம் கிடைக்கிறது. விஸ்வேஸ்வரன், பாலகிருஷ்ணன், ரூபகிரி, சுந்தரேசன், ஐராவதம், நாதன் ஆகிய நண்பர்களைப் பற்றி உள்ளது உள்ளபடி எழுதி இருக்கிறார். நாதன், இவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், இவர் முயற்சி எடுத்து பிரசுரம் செய்த நூல் அறிமுக விழாவில், முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகரிடம் இவரை ஒரு வங்கியாளராக மட்டுமே அறிமுகம் செய்வது படிக்கும் நமக்கே வலிக்கிறது.

கதாநாயகனின் வீட்டைப் பற்றிய முழு சித்திரமும் இயல்பாக வந்திருக்கிறது. நாயகனின் மூத்த தங்கை மிகத் துணிச்சலாக தன் கல்யாணத்தை நிறுத்தி, மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு நல்ல படிப்பினையை ஏற்படுத்திக் கொடுத்தது உண்மையில் மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம்.

ஆசிரியருக்கு கலப்புத் திருமணங்களில் முற்போக்கான சிந்தனை இருக்கிறது. கதாநாயகன் இந்து, அவன் மனைவி கிருத்துவர். நாயகனின் மற்றொரு தங்கை வேறொரு ஜாதியைச் சேர்ந்த இளைஞனை மணப்பது, சொந்த ஜாதியில் திருமணம் செய்து கொண்ட நாயகனின் தம்பியின் வாழ்க்கை மணமுறிவில் முடிவது எல்லாம் ஆசிரியரின் பரந்துபட்ட சிந்தனையை நன்றாக வெளிப்படுத்துகிறது

‘மரம்’ என்ற இலக்கிய பத்திரிகையை ஆரம்பித்த கதாநாயகன் இலக்கிய கூட்டங்களையும் நடத்தத் துவங்குகிறார்.

காதலித்த காலங்களில் கவிதைகளை பாராட்டிய நாயகனின் இன்றைய மனைவி, சற்று மனம் மாறுகிறாள்; கவிதை புத்தகங்கள் வெளியீடுகள் இவற்றைத் தவிர்த்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயல்கிறாள் ஆனால் பிடிவாதமாக அதை அவள் சொல்லவில்லை.

முதல் முதலாக கவிதை புத்தகம் அச்சடித்த பரவசத்தை சிறப்பாக எழுதியுள்ளார்.

ஒரு இடத்தில் இவ்வாறு எழுதுகிறார்:”வாழ்க்கை விசித்திரமான மாய வலை. மிக சாதாரணமான ஒரு வங்கி வேலையில் தொடர்ந்து இருந்து கொண்டு சிறு பத்திரிகை நடத்துவது, எழுத்தாளர்களை சந்திப்பது, கூட்டம் நடத்துவது எவ்வளவு சவாலான விஷயம் என்பதை மிகைப்படுத்தாமல் போகிற போக்கில் சொல்லிப் போகிறார்.

விவேகானந்தர், ரமணர், ஜே கிருஷ்ணமூர்த்தி, விசிறி சாமியார் ஆகியோரிடம் இவருக்கு இருந்த புரிந்துணர்வு பாராட்டத்தக்கது. அதிலும் ஜேகேயிடம் மனதளவில் நெருக்கமாக இருக்கிறார்.

ஆசிரியரே சொல்கிறார் “இதில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் நிஜமா கற்பனையா என்ற சந்தேகம் வரும். கொஞ்சம் கற்பனை கொஞ்சம் நிஜம் இரண்டும் கலந்த நாவல் தான் இது.”

படிப்பதற்கு எளிமையாகவும் சிந்திப்பதற்கு வசதியாகவும் இருக்கும் இந்த நாவல் 277 பக்கங்கள் கொண்டுள்ளது. விலை ரூபாய் 225/-

ஆசிரியரின் அலைபேசி எண்: 9444113205.