பெர்னாண்டோ பெஸோவா (Fernando Pessoa )
கவிதைகள்

மொழிப்பெயர்ப்பு ராஜேஷ் சுப்ரமணியன்

  1. சூர்யகாந்திப் பார்வை

ஒரு சூர்யகாந்திப் பூவைப் போல் எனது பார்வை
தெளிவானதாக இருக்கிறது.
சாலைகளில் நடக்கையில்
இடமும் வலமும் பார்த்தவாறு செல்வது
என் வழக்கம்.
சில சமயங்களில் பின்புறங்களிலும்
பார்ப்பதுண்டு.
ஒவ்வொரு கணமும் நான் காண்பது
முன் எப்போதும் பார்க்காதது.
எதையும் விட்டுவிடாமல் நுண்ணிப்பாகக்
காணும் திறனும் கைவரப்பெற்றிருக்கிறேன்.

புதிதாகப் பிறக்கும் ஒரு குழந்தை தனது
பிறப்பின் உண்மை அழகை உணரும்போது
கொள்ளும் உவகையையும் பெருமிதத்தையும்
என்னாலும் அடைய இயல்கிறது.
ஒவ்வொருக் கணமும் முழுவதும்
புதிதான ஒரு உலகில் பிறந்ததாய் உணர்கிறேன்.

களங்கமில்லா அமைதியழகுடன் ஒளிரும்
டெய்சி மலரைப் போல்
இவ்வுலகை நான் பார்க்கிறேன்.
ஏனெனில் நான் அதைப்பார்க்கிறேனே தவிர
அதைப்பற்றி சிந்திப்பதில்லை.
சிந்தித்தல் என்பது புரிந்துக்கொள்ளாதிருப்பது .
நாம் சிந்தித்து உணர்வதற்காக
உருவாக்கப்பட்டதில்லை இவ்வுலகு.
(சிந்தித்தல் என்பது குறையான கண்களைப்
பெற்றதற்கு சமானம்),
சரியான வழி, உலகைக் காண்பதும்
அதனுடன் ஒன்றிப்போய் கரைந்துவிடுதலே.

எனக்குத் தத்துவமென்று ஒன்றுமில்லை;
உணர்வுகள் மட்டுமே உண்டு.
இயற்கையைப் பற்றி பேசுகிறேன் என்றால்
எனக்கு அதைப்பற்றி முழுவதும்
தெரியுமென்றில்லை; நான் அதை
நேசிக்கிறேன் என்பதால் மட்டுமே.
ஏனெனில் உண்மையாய் நேசிப்போர்
எதை நேசிக்கிறோம் என்பதை
எப்போதுமறியார். ஏன் நேசிக்கிறோம் அல்லது
நேசம் என்றால் என்னவென்பதையும்.
நேசிப்பது என்பது நித்தியமான
நிர்மலத்திலுருப்பது.
நிர்மலமாக இருப்பதென்பது
சிந்தனையற்றிருப்பது.

  1. ஆடுகளின் பாதுகாவலன்

கடவுளைப் பற்றி சிந்தித்தல் என்பது
அவருக்கு அடிபணியாமல் இருப்பது.
நாம் கடவுளை அறியக்கூடாது
என்பதற்காகவே அவர்
தம்மை நம்மிடம் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

நாம் எளிமையாக அமைதியுடன்
இருப்போமாக.
மரங்களையும், ஓடைகளையும் போல.
அப்போது கடவுள் நம்மை மிகவும் விரும்புவார்.
மரங்கள் மரங்களாய் இருப்பதுபோல்,
ஓடைகள் ஓடைகளாய் இருப்பதுபோல்,
நம்மை நாமாக அவர் மாற்றுவார்.
வசந்த காலத்தில் பசுமையையும்
நம் பயணம் முடியும் பருவத்தில்
சென்று இளைப்பாற ஒரு நதியையும் தருவார்.

அதற்கு மேலதிகமாக
அவர் எதையும் தரமாட்டார்.
ஏனெனில் அவ்வாறு செய்வது
நம்மை நமது தன்மையிலிருந்து
கீழ் இறக்கிவிடுதலாய் அமைந்துவிடும்.

  1. ஆடுகளின் பாதுகாவலன் -2

நான் ஆடுகளின் பாதுகாவலன்.
ஆடுகள் எனது எண்ணங்கள்.
எனது எண்ணங்கள் அனைத்தும்
உணர்வுகள்.
நான் எனது கண்களாலும்
காதுகளாலும் சிந்திக்கிறேன்.
மற்றும் எனது கைகள், பாதங்கள் ,
மூக்கு மற்றும் வாயாலும் கூட.

சிந்திப்பது என்பது அச்சிந்தனையை
காண்பதும் முகர்வதும்.
ஒரு பழத்தை உண்பது அதன்
அர்த்தத்தை சுவைப்பது.

ஆகவேதான் ஒரு வெப்பமான நாளை
மிகவும் அனுபவித்ததன் வலியுடன்
வெதுவெதுப்பான கண்களுடன்
புல்வெளியில் என் உடல்
படர்கையில்
அக்கணம் முழுவதும் நீளும்
என் முழு உடலையும் உணர்கிறேன்.
உண்மையை உணர்கிறேன்
அதனால் மகிழ்கிறேன்.