லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

15
பழங்காலத் தத்துவஞானிகள்
——
பழங்காலத் தத்துவஞானிகளின்
மெய்ஞான அறிவு
நுட்பமானது, ஆழமானது
ஆகையால் அறியமுடியாதது
அறியமுடியததாக இருப்பதால்
அவர்களின் மேல் அவர்களின் தோற்றம் பற்றிய
விவரிப்பை சுமத்த வேண்டியுள்ளது;
தயங்கி ஐயுருகிறவர், குளிர்காலத்தில் ஆற்றைக் கடப்பவர் போல
எச்சரிக்கையானவர், சுற்றியுள்ள எல்லாவற்றையும் எல்லோரையும் பார்த்து அச்சப்படுபவர் போல
சீலத்தில் அமைதியானவர், விருந்தாளியைப் போல
இளகியவர், உருக இருக்கும் பனிக்கட்டியைப் போல
ஒப்பனையற்ற எளிமையையுடையவர், பச்சை மரத்தைப் போல
விரிவானவர், வரவேற்கக்கூடியவர், ஒரு சமவெளியைப் போல
ஊடுறுவிப்பார்க்க இயலாதவர், கலங்கிய தண்ணீரைப் போல
கலங்கிய தண்ணீரில் சகதி அடியில் படிந்து
நீர் தெளிவுறக்
காத்திருக்கும் பொறுமை உங்களுக்கு இருக்கிறதா?
சரியான செயல் தானாக எழும்பி வரும் வரையில்
உங்களால் காத்திருக்க இயலுமா?
யார் வழியைப் (தாவோ) பாதுகாக்கிறார்களோ
அவர்கள் முழுமையை உங்களிடத்தில் விரும்புவதில்லை
முழுமையாக எதையும் நிரப்பாமல் இருக்கும்போதே
அதில் களைப்படையாமல்
புதியதாய் ஒன்றைப் படைக்கமுடியும்
——
16
அதீத இன்மையை அடைதல்
——
அதீத இன்மையை அடைந்து
மனதை முற்றிலும் காலியாக்கி
அமைதி நிலைபெறுகையில்
எண்ணற்ற உயிரிருப்புகளின்
கலவரங்களைக் கவனிக்கிறேன்
ஒவ்வொரு உயிரிருப்பும் தன் மூலத்திற்குத் திரும்புகிறது
மூலத்திற்குத் திரும்புதல் ஆழ்ந்த அமைதி
அமைதி, கட்டளைப்பணி முடிந்து திரும்புதல்
திரும்ப வருதல், இயல்பு நிலை
இயல்புநிலையை அறிதல், தெளிவு
இயல்புநிலையை நீ அறியாதிருந்தால்
நீ சீரற்ற சிக்கல்களை உண்டாக்குவாய்
இயல்புநிலையை நீ அறிந்தால்
நீ ஒப்புக்கொள்வாய்
ஒப்புக்கொள்ளுதல் நடுநிலையானது
நடுநிலை ராஜகம்பீரமுடையது
அந்த ராஜகம்பீரம் விண்ணுலகத்திற்குரியது
விண்ணுலக்கத்திற்குரியதுதான் வழி (தாவோ)
தாவோ என்றும் நிலைபேறுடையது-
-அதனால் உன் வாழ்வின் இறுதிவரை
மரபற்று அழிந்துவிடும் ஆபத்தில்லாமல்
இருப்பாய்