இழப்பு/ராம் ஆனந்த்

(3-3-23-இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை)

தண்டவாள ஓரங்களில் புதர்களின் அடர்த்தி
மழைக்காலமோ வெயில் காலமோ
நீர் இருக்கும் சிறு குட்டை
நிரம்பி வழிந்து ஓடியதும் இல்லை
வற்றி காய்ந்து வெடித்ததும் இல்லை
சில நேரங்களில் பார்ப்பதுண்டு
மூன்று குஞ்சுகளுடன் இரை தேடும் பறவை
தனக்குச் சொந்தமான இடத்தின் கம்பீர
தோரணையில் வளம்
மனிதர்களைக் கண்டும் காணாமலும்
நாய்களின் வருகையும் பொருட்டல்ல
கொக்கும் நாரையும் வந்து செல்லும்
பறவையின் பார்வை அடிக்கடி
வானத்தைப் பார்த்து இரை தேடும்
காலையில்
இரைதேடும் பறவையோடு குஞ்சொன்றே
குதித்து குடித்து ஓடியது
இழப்பும் தென்படவில்லை வெறுப்பும்
கண் படவில்லை
குஞ்சோடு அலட்சியமாக இரைதேடும் அது
பரிதவிக்கும் மனம்
காணாமல் போன
இரண்டு குஞ்சுகளைத் தேடி.