
(3-3-23-இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை)
அந்தக் கானகத்தின்
பரந்த முரட்டுத் தரையில்
பச்சைக் கம்பளமாய்
சில இடங்கள்;
இன்னும் கருகிப் போகாத
இள முதுமைச் சருகுகள்
பழுப்புப் போர்த்த
சில இடங்கள்.
ஓடையில் குளித்துப்
படியேறி வந்து வீற்றிருக்கும்
சில ஈரப் பாறைகள்.
தடித்த மரங்களிடையே
பின்னலிட்டு ஆடுகின்ற
பசிய இலைக் கொடிகள்.
விலங்குகள் பறவைகள்
வீதியுலாப் போல
நகர்ந்து செல்லும் சிற்றுயிர்கள்.
இலைகளின் சரசரப்பிற்கிடையே
ஒரு நாகம் நகர்ந்து நகர்ந்து
மெல்ல சில கிளையேறி
சுள்ளிக் கூட்டின் பாதுகாப்பில்
படுத்துக் கிடக்கும்
வெண்முட்டைகளை
உற்றுப் பார்த்து உவகை கொண்டது,
பிளவுபட்ட நாக்கு நெளிய
ஒரு வீச்சில்
அவற்றை விழுங்க
தலையைத் தூக்கித் தயாரானது.
முழு கவனமும்
முட்டை வேட்டையில்.
கிளைகளிடையே தலை தூக்கி நிற்கும்
பாம்பின் மேனிப் பளபளப்பை
கூரிய கண்களால்
மேலிருந்து பார்க்கும்
கழுகின் ஆவலையும்
அதன் சிறகுகள் விரியப்போகும்
தருணத்தையும்
அறியாத பாம்பு
இன்னும் முட்டை வேட்டையில்.
03/03/2023
