அவ்வழியா? இவ்வழியா?/கோ.முத்துசுவாமி

‘விருட்சம் ‘ கவிதை நேசிப்புக் கூட்டத்தில் வாசித்தது :

அவ்வழியா இவ்வழியா அறியேன்; இந்த
‘ஆனந்தம் ‘ என்பதன்உட் பொருளும் தேறேன்!
“எவ்வழியாய் இருந்தாலென்? எல்லாம் ஒன்றே;
ஏனிந்த மனவுளைச்சல்? ” என்றான் நண்பன்!
செவ்வழியே செல்வழியாய்ச் சொல்லிச் சென்ற
சான்றோரின் றிருந்தாலும் சஞ்சலம் தான்!
“இவ்வழியே அவ்வழியாய் இருக்க லாம்தான்
யாரறிவார்? வழிநடப்போம்! ” என்றான் நண்பன்!

ஒருவழியாய் ஒருவழியைத் தேர்ந்த பின்பும்
ஒவ்வொருபின் னடியிலும்ஓர் ஐயம் தோன்றும்!
இருவழிகள் சந்திப்பின் மீண்டும் மீண்டும்
இரட்டிப்பில் முத்தப்பாய் இழுக்கும் ஐயம்!
“தெரிவழிதான் நடக்கின்றாய், தெறித்த எட்டில்
தெரியும்முன் வழி!நட, வா! ” என்றான் நண்பன்!
விரிவழிமுன் வரவேற்க, விளங்கா உள்ளம்
விவாதிக்க விழிவழிமேல் விதைத்துச் சென்றேன்!

“வழிவிளங்க விளக்கொன்றை ஏந்திக் கொண்டால்
வடியும்உள் பயமெல்லாம்” என்றான் நண்பன்!
கழியுவகை கொண்டாலும் ஒளிவி ளக்கம்
காட்டுமொரு விளக்கிற்காய் காக்க லானேன்!
“விழிதிறந்தால் விளங்குவதே விளக்காம்! ஏனோ
வீண்காவல் புரிகின்றாய்? ” எனவும் கேட்டான்!
அழல்மேலே நடப்பதுபோல் உணர்ந்தேன்; இந்த
அல்லலிலா ஒருவழியை அடைதல் எங்ஙன்?
*