ஒரு வினாடிக் கதைகள்

26.10.2021

அழகியசிங்கர்

 8. போன் 

பத்மநாபன் மோகனுக்குப் போன் செய்தான்.  என்ன என்று கேட்டான்.  வேறு எதோ பேசியபடியே எப்படி அவனுக்கு ஞாபகப்படுத்துவது என்று யோசித்தான் பத்மநாபன்.   மோகன் ரூ.5000 தர வேண்டும்.  ***


  9. பசி 


 அந்தப் பிச்சைக்காரன் தனக்குள் பேசியபடி போய்க் கொண்டிருக்கிறான்.  அன்று ஒன்றும் கிடைக்கவில்லை.  பசி வாட்டியெடுத்தது அவனை. பெரிதாகச் சத்தம் போட்டு அழுதான். ஒருவர் இரக்கப்பட்டு 50 ரூபாய் கொடுத்தார்.  இது என்ன அதிசயம் என்று தோன்றியது.  பின் பெரிதாகச் சத்தம்போட்டுச் சிரித்தான்.  இன்னொருவரும் இரக்கப்பட்டு 50 ரூபாய் கொடுத்தார்.  அன்று அவன் பசி மாயமாய் மறைந்து விட்டது.


10. பரிகாசம் 

 அந்தப் பெரியவர் பால்கனியிலிருந்து தெருவைப் பார்த்தார்.  தெருவில் பலர் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் தங்களுக்குள் சிரித்துக்கொண்டே போனார்கள்.  இவர் அவர்களைப் பார்த்துக் கையசைத்தார்.  அவர்களும் கையசைத்தபடி இந்தக் கிழவனுக்கு என்ன ஆயிற்று என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு போனார்கள்.   

11. சினிமா 


 எந்த மாற்றமும் இல்லை.  சினிமாவில்.  வயதான கதாநாயகன் மிகவும் வயது குறைந்த கதாநாயகியை காதலிக்கிறாள். நெருங்கி நெருங்கி காதல் காட்சியில் நடிக்கும் போது அவள் பயந்து பயந்து நடிப்பதுபோல் தோன்றியது.  அவளுடைய நடிப்பு பிரமாதம் என்று எல்லாப் பத்திரிகைகளும் புகழ்ந்து தள்ளி விட்டன.

12. மருத்துவமனை

யாரும் இல்லாமல் அந்தக் கிழவர் மருத்துவ மனை கட்டிலில்  படுத்துக்கிடந்தார். அவருக்குத் துணையாகச் சத்தம் போட்டபடியே ஆஸ்பத்திரி பேன், கட்டில், டெட்டால் ,, தவறிப்போய் எட்டிப் பார்க்கிற நர்ஸ்.  அவர் முருகா என்று முணுமுணுத்தார்.