
ப.மதியழகன்
“மாப்ளே இதைப் போயி பெருசா எடுத்துக்கலாமா எம் பொண்ணை நான் அப்படி வளக்கலை ஏதோ ஆபிஸ் விஷயமா லேட்டா ஆகியிருக்கும்” என்றார் கலாவின் அப்பா நாகு.
“கிளிக்கு றெக்கையை வெட்டி இருக்கணும் பறக்கவிட்டது இப்ப தப்பாப் போச்சி, தாலியை கழட்டி வைக்குறவ புருஷனுக்கு எப்படி மரியாதை கொடுப்பா” எனச் சீறினான் கலாவின் கணவன் வைத்தி.
“எதையும் தீர விசாரிக்கிறதுல தான் எல்லாம் இருக்கு. எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணிடாதீங்க” என்று கெஞ்சினார் நாகு.
“கல்யாணத்துல அக்னியை வலம் வர்றதே ஒருவனுக்கு ஒருத்திங்கிறத்துக்குத்தானே. வீட்டுக்கு அடங்கலைன்னா நாலு பேர் என்னப் பாத்துதானே நாக்கு மேல பல்லு போட்டு பேசுவாங்க. எனக்கு இது தேவையா?” என்றான் வைத்தி.
“ராமர் கூட சீதையை சந்தேகப்பட்டது தப்பா போச்சி. கண்ணாடிப் பாத்திரத்தை உடைச்சிட்டா திரும்ப ஒட்ட வைக்க முடியாதுல்ல. இப்படி எலியும் பூனையுமா இருந்தா எப்படி?” என்றார் நாகு.
“இத உங்க பொண்ணுகிட்ட போய்ச் சொல்லுங்க புருஷங்கிறவன் பொண்டாட்டிக்கு அடிமை கிடையாது. வெறும் உடம்பு சுகத்துக்காக அலையறது ஒன்னும் வாழ்க்கை கிடையாதுன்னு!” என்றான் வைத்தி.
“ஐயோ மாப்ள! நீங்க நாலுபேர் கூட பழகுறீ்ங்க உங்களுக்கு நல்லது கெட்டது தெரியும் அவ போக்குக்கே போயி புரிய வைக்கலாமே?” என்றார் நாகு.
“தான் வைச்சது தான் சட்டம்னு நினைக்கிறவ எம் பேச்சிக்கு மதிப்பு கொடுப்பாளா?” என்றான் வைத்தி.
“சின்னப்புள்ளையே அப்படி வளர்ந்துட்டா ஆனா தப்பெல்லாம் பண்றதுக்கு தைரியம் வராது அவளுக்கு!” என்றார் நாகு பல்லைக் கடித்துக் கொண்டு.
“வெறுமனே சம்பாதிச்சி போடறது மட்டும் ஒரு அப்பனோட வேலையில்லை மிஸ்டர் நாகு புள்ளைங்கல வளக்கத் தெரிஞ்சி இருக்கணும். புருஷங்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் கொடுத்து இருக்கணும். புருஷனை முந்தானையில முடிஞ்சி வைச்சிக்கோன்னு சொல்லி அனுப்பக்கூடாது. அவ தலையணை மந்திரத்துக்கெல்லாம் என்னால சாமியாட முடியாது அதுக்கு வேற ஆளப் பாருங்க!” என்றான் வைத்தி.
“வீரப்பா பேசுவாலே ஒழிய அவ வெகுளி நல்லது கெட்டது தெரியாது. சாதாரண மிஸ் அண்டர்ஸ்டான்டிங் இதுக்குப் போய் அத்து உட்டுடுங்கன்னா எப்படி?” என்றார் நாகு.
“எதையும் ஆராயாம பேசலை. எல்லாம் எல்லை மீறிப் போயாச்சி. மயிலே மயிலேன்னா இறகு போடாதுன்னு தெரிஞ்சிப் போச்சி. கீரியும் பாம்புமா ஒரே வீட்டில குடித்தனம் நடத்த முடியாது இதான் என் முடிவு!” என்றான் வைத்தி முடிவாக.
“எடுத்தோம் கவிழ்த்தோம்னா எப்படி? உறவே வேண்டாம்னா திடீர்ன்னு உடம்புக்கு நோவுன்னா யாரு வந்து பாத்துப்பா. வென்னித்தண்ணிக் கூட யாரும் வைச்சிக் கொடுக்க மாட்டாங்க. அவங்கவங்களுக்கு அவங்க குடும்பம் குட்டி பெருசு. வீடு வரை உறவு, வீதி வரை மனைவின்னு கண்ணதாசன் பாடல. அடடே சம்பந்தியே வந்துட்டாரு வணக்கம் சம்பந்தி!” என்றார் நாகு.
“வணக்கம் இருக்கட்டும், என்ன முடிவு பண்ணியிருக்கான் எம்புள்ள தாம் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு ஒத்தக் கால்ல நிப்பானே!” என்றார் வைத்தியின் அப்பா தாமு.
“நான் எவ்வளவோ தயந்து சொல்லிப் பாத்துட்டேன் மாப்ள அவரு முடிவுல விடாப்பிடியா இருக்காரு” என்றார் நாகு.
“இது ஒண்ணும் கிளிப்பிள்ளை விளையாட்டில்ல வைத்தி. நாலு எழுத்து தெரிஞ்சதும் பெரிய கொம்பன்னு நினைக்கிறியே. உன்னை படிக்க அனுப்பிச்ச அப்பனே நான் தான். நீ படிச்சது வெறும் ஏட்டுப்படிப்பு செத்த புத்தகம் தான் அது. இந்த அப்பங்காரன் வாழ்க்கையை படிச்சேன். உன் பெயருக்கு பின்னால மூணு எழுத்து போட்டுக்கிறியே அது நான் போட்ட பிச்சை!” என்றார் தாமு.
“அவளோட வாழப்போறது நான் இதுல நீங்க யார் முடிவெடுக்க?” என்று பாய்ந்தான் வைத்தி.
“நீங்க நான்னு பிரிச்சிப் பேசறியே என் தகுதிக்கு மீறி கடன் வாங்கி உன்னைய படிக்க அனுப்புனனே அப்ப மட்டும் நான் அப்பன் இப்ப சுப்பனா. உனக்கு பறக்க கத்துத்தந்தவன்ட்டயே பேரம் பேசுற பாத்தியா. வாழ்க்கை இப்போது நவநாகரிகமா மாறிட்டு வரலாம் ஆனா பெத்தவ பத்து மாசந்தானே சுமக்கறா? இல்ல பாரமா இருக்குன்னு ஏழெட்டு மாசத்துல இறக்கி வைச்சிடுறாளா?” என்றார் தாமு.
“நான் கைநிறைய சம்பாதிக்கிறவன். எனக்கு லைஃப் பார்ட்னரா யாரு வரணும்னு முடிவெடுக்கிற உரிமை எனக்கில்லையா?” என்றான் வைத்தி.
“என்னடா பெரிய உரிமையைக் கண்ட நீ அடிபட்டு ஆஸ்பத்திரில இழுத்துகிட்டு கிடக்கிறப்ப எல்லாரும் கைவிரிச்சிட்டாங்களே பண்டம்பாத்திரத்த வித்து இரத்தம் கொடுத்து உன்னைய காப்பாத்துனேன்னே அந்த இரத்தம் தானே உன் உடம்புல ஓடுது பெருசா உரிமையைக் கண்டுட்டான்” என்று கொதித்தார் தாமு.
“தன் புள்ளைங்களுக்கு செஞ்சதையே கணக்குப்பாக்குற அப்பனுக்கு பொறந்தவன் இப்படித்தான் இருப்பேன்” என்றான் வைத்தி.
“நான் வெயில்ல நிக்குறத பொருட்படுத்தாம தம் பிள்ளைங்க நிழல்ல நின்னா போதும்னு, மழையோ பனியோ எதுவானாலும் புள்ளைங்களுக்கு நம்ப தரித்திரம் தெரிஞ்சிடக் கூடாதுன்னு நைட்ல ரயில்வே போர்ட்டர் வேலை பாத்து கடனை அடச்ச இந்த அப்பன் பாத்து வைச்ச பொண்ணைத்தான் டைவர்ஸ் பண்ணுவன்னு ஒத்தன் கால்ல நிக்கறேங்கிறது உனக்கு தெரியுதா இல்லையா?” என்றார் தாமு.
“உங்களுக்கு அப்படித்தான்னு தலைல எழுதி இருந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்” எனறான் வைத்தி.
“மாப்ள வாழ்க்கையில என்ன சாதிச்சி என்ன புண்ணியம். ஆயி அப்பன் மனசு கோணாம நடந்துக்குங்களேன்” என்றார் நாகு.
“பத்து மாசத்துக்கு அப்புறம் அவ தொப்புள்கொடி அறுத்தோன்ன இருபத்தஞ்சி முப்பது வயசு வரைக்கும் பாரம்னு கருதாம உன்னை தோல்ல தூக்கி சுமந்தேன் இல்லையா அதுக்கு நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ. நீ மேனேஜர்ன்னு பின்னடி போட்டுக்க காரணமா இருந்தவனே நான்தான் அத மறந்துடாத” என்றார் தாமு.
“வீட்டுக்கு உழைச்சிக் கொட்ட நான் என்ன இளிச்சவாயனா? வேலைவெட்டி இல்லாத தம்பி, கல்யாணமான ரெண்டு மாசத்துலயே பொட்டியோட வாழாவெட்டியா வீடுவந்து சேர்ந்த அருமை தங்கச்சி இவங்களுக்கும் சேத்து சோறு போடணும்னு எந் தலையெழுத்தா? நாளைக்கு ஒன்னுன்னா இவங்களா என்னை வந்து பாப்பாங்க கம்பி நீட்டிட மாட்டாங்க. நாமம் போட்டுக்க பெருமாள் ஆயிடுவேன்னு சொல்ல வர்றீங்களா? நீங்க பாட்டுக்கு வாய பிளந்துட்டு போயிட்டீங்கன்னா இவங்கள யாரு சுமக்கறது. அதான் இப்பவே உஷார் ஆயிட்டேன்!” என்றான் வைத்தி.
“ஆயி அப்பனையும் கூடப்பொறந்தவங்களையும் காசுக்காக பாசங்காட்டுறவங்களா நினைக்கற இல்ல நினைச்சுட்டுப்போ. இந்த தாமு எல்லாத்துலயும் தோத்துட்டான் ஆனா வாழ்க்கையில ஜெயிச்சாட்டுன்னு நெஞ்சை நிமித்தி வாழ்ந்துகிட்டு இருந்தேன் அதுக்கு உன் மூலமா மேல இருக்கறவங்கிட்டேந்து பதில் வந்திருக்கு சபாஷ்டா அப்பனுக்கு புத்தி சொல்லிட்ட இல்ல. வாம்மா கலா மிஸ்டர் வைத்தி எங்களை நீங்க வெட்டிவிட்டுடலாம் ஊரை கூட்டிவைச்சி தாலி கட்டினிங்களே இவளுக்கு ஒரு பதில் சொல்லுங்க?” என்றார் தாமு.
“மாப்ள எம்பொண்ணு தங்கம் எவ்வளவு தான் நீங்க உரசிப் பாத்தாலும் சரி தரம் மாறுமா என்ன?” என்றார் நாகு.
“அவரு என்னை விரட்டிவிடணும்னு நினைக்கிறாரு. வேற சால்ஜாப்பு சொல்ல முடியலை என்னைப் பத்தி. அதான் என் கேரக்டர் மேல சந்தேகப்படறாரு!” என்றாள் வைத்தியின் மனைவி கலா.
“இது கெட்டூகெதர் இல்ல குடும்பம். எப்ப வேணாலும் வரலாம்ங்கிறதுக்கு இது லாட்ஜ் இல்ல குடித்தனம் நடத்தற வீடு. கட்டுணவன் ஊமையாய் இருந்தாவனும்னா அவன் ஷோகேஸ்ல இருக்கற நீ வாங்கி வச்ச பொம்மை இல்ல மனுசன். உன் ராங்கித்தனத்துக்கு காரணம் என்னன்னு எனக்குத் தெரியும் சொந்தக் கால்ல நிக்கிறோம் சம்பாதிக்கிறோம்ங்கிற திமிரு வேறொன்னுமில்ல” என்றான் வைத்தி.
“கண்ணா உனக்கு மேன்னோட வேல்யூ என்னன்னு இன்னும் தெரியலை. நான் அப்படியே வளத்துட்டேன் உன்னை. உனக்கு இருபத்தைஞ்சி வயசு ஆகுறவரைக்கும் கடன்காரன் கல்லெறிஞ்சா எங்க மேலதான் விழும் நாங்க தான் அடிபடுவோம். உன்னை பொத்தி பொத்தி வளர்த்தோம் பாரு. நீ என்ட்ட நன்றி காட்டுற நாய் நானில்லை, கடிச்சிக் குதர்ற நரின்னு புரூவ் பண்ணிட்ட இல்ல சாபஷ் வெல்டன்!” என்றார் தாமு.
“மாப்ள நாம என்ன நிலைமைல இருந்தாலும் அப்பா அம்மா ஆசிர்வாதம் வேணும் அவங்க வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க. எவ்வளவோ நாகரிகமா உடை உடுத்தறீங்க பெண்கள் விஷயத்துல மட்டும் ஏன் பழைய பஞ்சாங்கமாவே இருக்கீங்க. உங்களுக்கும் ஒரு பொண்ணு பொறந்து அவளுக்கு இந்த நிலைமை வந்தா உங்களுக்கு என்னோட அவஸ்தை புரியும். எல்லாம் விதிவிட்ட என்ன செய்யிறது?” என நொந்து கொண்டார் நாகு.
அடுத்த நாள் வீக்எண்டு என்பதால் வைத்தி தன் நண்பன் ரமேஷ்வுடன் மகாபலிபுரம் காரில் சென்று கொண்டிருந்தான். காரை வைத்தி டிரைவ் செய்தபடி ரமேசுடன் பேசியபடி வந்தான்.
“ஒரு முக்கியமான விஷயம் வைத்தி!” என்றான் ரமேஷ்
“என்ன சொல்லு சைட் டிஷ் ஒண்ணும் கிடைக்கலயா?” என்றான் வைத்தி
“அன்னிக்கு போதைல ஒரு ஆக்ஸிடெண்ட் பண்ணினோமே மளிகைக்கடைக்காரரை அவங்க வீட்ல உன் வொய்ஃபை பார்த்தேன்!” என்றான் ரமேஷ்.
வைத்தி பிரேக் அழுத்தினான். வண்டி டயர் ரோட்டில் உராய்ந்து கிரீச்சிட்டு நின்றது.
“என்னடா சொல்ற அவ எப்படி அங்கே?” என்றான் வைத்தி.
“அவங்க வீட்ல போய் விசாரிச்சேன். கடைஓனருக்கு ரொம்ப சீரியஸாம் ரெண்டு ஆபரேசன் நடந்திச்சாம். செலவெல்லாம் உன் வொய்ஃவோடதாம். ரெண்டு மூணு நாளா ஆஸ்பத்திரிலேயே கண்முழிச்சி கவனிச்சிக்கிட்டாங்களா ரொம்ப நல்லமாதிரின்னு சொன்னாங்க!” என்றான் ரமேஷ்.
“எதுக்குன்னு கேட்க வேண்டியதுதானே?” என்றான் வைத்தி.
“நீதான் ஆக்ஸிடெண்ட் பண்ணினேன்னு கலாவுக்கு தெரிஞ்சிருச்சி. அதை வெளியே சொல்ல முடியுமா? தொண்டு நிறுவனம்னு தன்னை சொல்லிக்கிட்டாங்களாம்!” என்றான் ரமேஷ்.
‘அதான் மூணுநாலு நாளா மிட்நைட்ல வந்தாளா? நான் கூட சந்தேகப்பட்டுட்டேனே. என்ட்ட சொன்னா ரொம்ப டிப்ரஸ் ஆகிடுவேன்னு மறைச்சிட்டாளா? ஆண்டவா’ என்று வைத்தி தனக்குள் முனகினான்.
“வெளியே விஷயம் லீக் ஆகியிருந்திச்சின்னு வை உனக்கு வேலை போயிருக்கும். ஜெயில்ல கம்பிதான் எண்ண வேண்டியிருந்திருக்கும் கடவுள் நம்பல காப்பாத்துல வைத்தி உங்க வீட்டுக்காரம்மா கலாதான் காப்பாத்தி இருக்காங்க முதல்ல அவங்க கால்ல விழுந்து கும்பிடுவோம்!” என்றான் ரமேஷ்.
“எங்கிட்ட ஏன் மறைக்கணும்?” என்றான் வைத்தி.
“ஆமா, போதையில எங்கயாவது உளறிவச்சேன்னா அப்புறம் பிரச்சனை பெருசாயிடாது அதான் காரணமா இருக்கும்!” என்றான் ரமேஷ்.
‘அவள என் வாழ்க்கையிலேந்து விரட்டணும்னு குறியாய் இருந்தேன். என் வாழ்க்கையே இப்போது அவள் போட்ட பிச்சைன்னு ஆகிடிச்சி. இதுக்காக அவள கோயில் கட்டித்தான் கும்பிடணும்னு என்று யோசனை செய்தபடியே காரை செலுத்தினான் வைத்தி.
வைகறை கரை காற்றே நில்லு
வஞ்சிதனை பார்த்தா சொல்லு
மன்னன் மனம் மாறுதுன்னு
மங்கை தனை தேடுதுன்னு
-என பண்பலையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

சுந்தரகாண்டம் என்று பெயர் வைத்து அப்பெயரின் புனிதத்தைக் கெடுத்திருக்க வேண்டாம்.
பார்க்க: ஜெயகாந்தன் சுந்தரகாண்டம் என ஒரு நாவல் எழுதி உள்ளார்.