கவிதையைப் பற்றிய சில சிந்தனைகள்…1

அழகியசிங்கர்

  1. எப்படி கவிதையைப் புரிந்து கொள்வது?
    மனதால்தான் புரிந்துகொள்ள முடியும்
  2. ஒரு கவிதையை கவிதையா என்பது எப்படித் தெரிந்து கொள்வது?
    கவிதையைப் படித்துப் புரிந்துகொள்வதுதான் ஒரே வழி. கவிதையைப் படிக்கப் படிக்க மனம் பக்குவம் அடையும். மனம் பக்கவமடைந்தால் கவிதையும் புரியும்.
  3. ஒரு கவிதை சரியில்லை அல்லது சரி என்று எளிதாக சொல்லிவிடலாமா?
    சொல்லி விடலாம்.
  4. ஆனால் சரியில்லாத கவிதை என்று எதுவுமில்லை இல்லையா?
    சரியில்லாத கவிதை என்று எதுவும் இல்லை. படிக்கிற மனதிற்கு கவிதை எப்படி ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பதுதான் முக்கியம்.
  5. கவிதை நூலிற்குப் பரிசு கொடுப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
    ஒரே ஒரு புத்தகத்திற்குத்தான் பரிசு கொடுக்க முடியும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற புத்தகம் எந்த அளவிற்கு மற்ற கவிதைப் புத்தகங்களை விட சிறப்பாக இருக்க முடியும் என்று கண்டுபிடிப்பது சிரமம்.
  6. ஏன் கவிதைப் புத்தகங்கள் விற்க முடியவில்லை?
    ஏகப்பட்ட கவிதை புத்தகங்கள் வெளிவருவதால், எந்தப் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
  7. கவிதையைப் படிப்பதால் படிப்பவருக்கு என்ன கிடைக்கிறது
    கவிதைப் படிப்பதால் மனம் தெளிவடையும். சஞ்சலம் நிறைந்த மனநிலையில் கவிதையை வாசித்தால், சஞ்சலம் நீங்கி குதூகலம் ஏற்படும்.
  8. பலர் கவிதைகளில் சோகம் அதிகமாக இருக்கிறதே?
    சோகத்திலிருந்து விடுபட சோகக் கவிதைகள் அவர்களுக்குப் பயன்படும். ஆனால் படிப்பவர்களுக்கு அந்தச் சோகக் கவிதைகள் மேலும் சோகத்தை ஏற்படுத்தும்.
  9. கவிதைக்குள் இருப்பவன் யார்? கவிதையிலிருந்து வெளிவருபவன் யார்?
    கவிதைக்குள் இருப்பவன் உன்னதமான மனிதன். கவிதையிலிருந்து வெளியே வருபவன் சாதாரண மனிதன்.
  10. நீங்கள் தேடுவது கவிதை மூலம் கிடைக்குமா?
    நிச்சயமாகக் கிடைக்கும்.
  11. கவிதையின் லட்சணம் என்ன?
    உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல்தான் கவிதையின் லட்சணமும் உங்களுக்குத் தெரியும்.
  12. கவிதையைப் படித்த உடன் என்ன தோன்றுகிறது?
    இன்னொரு முறை படிக்க வேண்டுமென்று தோன்ற வேண்டும்.
  13. இல்லாவிட்டால்
    இன்னொரு கவிதையைப் படித்துப் பார்க்க வேண்டும்.
  14. ஒரு முறை கவிதைப் புத்தகம் முழுவதும் படித்தப்பின் என்ன செய்வது?
    தூரப் போட்டு விடாதீர்கள். இன்னொரு முறை படிக்க வேண்டுமென்று தோன்றும்.
  15. நீங்கள் ரசித்தக் கவிதையை சொல்ல முடியுமா?
    ஒன்றல்ல பல சொல்ல முடியும். ஆனால் இப்போது சாம்பிளுக்கு ஒன்று தருகிறேன்.
    வெளிக் கதவு திறந்து வெளிக் கதவு திறந்து
    உள்கதவைத் திறந்து
    அறைக்கதவைத் திறந்து
    பீரோ திறந்து
    ரசகியச் சிற்றறை திறந்து
    பெட்டியை எடுத்தேன்
    மணம் வீசிக்கொண்டிருக்கிறது
    கருநாவல் பழம் ஒன்று
    பிசுபிசுவென்று.
    கபாடபுரத்தின்
    சுடுகாட்டு மரத்தில்
    பறிக்கையில்
    ஒட்டிய
    தூசு தும்பட்டையுடன்
    – தேவதச்சன்
    (மர்ம நபர் புத்தகத்திலிருந்து)
  16. சரி இத்துடன் போதுமா?
    போதும். ஆனால் கவிதையைப் பற்றிய சிந்தனையைத் திரும்பவும் தொடர்வோம்.