கதவு இலக்கம் 3/10/வாசுதேவன் ஸ்ரீனிவாசன்

மாதம் : நவம்பர்
வருடம் :2020
முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்
தானாய்ச் சேர்ந்திருந்தது பண்டிகைக் கால கூட்டம்.

தீபாவளிக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் மனைவி மஞ்சுவையும்மகள் சஞ்சுவையும் தேவையான துணிமணிகளை ‘செலெக்ட்’ பண்ணச் சொல்லிவிட்டு கடைக்கு வெளியே வந்த ஈஸ்வர் முகப்பில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றைத் தேர்வுசெய்து அமர்ந்தான். அவன் தனக்குப் பிடித்த உடுப்புகளைத் தானே செலெக்ட் செய்து வருடக் கணக்காகி விட்டது.

கை விரல்கள் செல்போனின் மேல் இருக்க ‘யூ-டியூப்’ சானலில் ‘விவாத மேடை’ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தவனின் கவனம் சட்டென்று கலைந்து, பிடிவாதம் பிடித்து அழும் அச் சிறுவன் மீதும் அவனைக் கையில் பிடித்துக் கொண்டு கடையை விட்டு வேகமாய் வெளியே சென்ற அந்தப் பெண்ணின் மீதும் விழுந்தது.

ஈஸ்வருக்கு அப்பெண் முகத்தைப் பார்த்தவுடன் பளிச்சென அவளுடன் நன்கு பழகிய ஒரு உணர்வு …சில வருடங்கள் ஒரே வீட்டில் பேசி நட்பு பாராட்டி வந்த ஒரு நெருங்கின பரிச்சயம்.

யார் அவள்? … மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைக்கும் வண்ணம் அந்த பெண்ணே திரும்ப வந்து கடைக்குள் செல்ல முற்பட்டாள்..அவளுடன் இருந்த பையன் இம்முறை அழவில்லை ..மாறாக அவன் கையில் இருந்த குச்சி-ஐஸ் மெல்ல உருகி அழுதுகொண்டிருந்தது.

இப்பொழுதும் ஈஸ்வருக்கு அவள் யாரென்று பிடிபட வில்லை ….ஆனால் நன்கு பழக்கப் பட்ட முகம் …அந்தப் பெண்ணிடமே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்து தன் இருக்கையை விட்டு எழுந்து அவளைத் துரத்தாத குறையாய் அருகே சென்று

” ஹாய் …..என் பேர் ஈஸ்வர். உங்களை எங்கேயோ பாத்தாப் போல இருக்கு …ஆனா நினைவுக்கு வர மாட்டேங்குது… நீங்க …… ? “

மெல்ல விஷயத்தை ஆரம்பித்தான்.

” சாரி .. உங்களை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை ..

அஸ்வின் …ஓடாதே …விழப் போற …ஒரு இடத்தில நில்லு …”

இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்த அச் சிறுவனை அதட்டியபடியே ஈஸ்வருக்கு அலட்சியமாய் பதில் அளித்தாள்.

என்ன இது? …முகத்தில் அடித்தாற்போல் மறுத்து விட்டாளே என்று நினைத்தான் ஈஸ்வர் … பிறகு அவன் தன் மூளையை மேலும் கசக்கிய மறு கணம் ….

“ஆ …இப்போ நியாபகம் வந்துடிச்சு …நீங்க……நீ …. உமாதானே ?

“இல்ல …நான் உமா இல்ல …ஆனா உங்க ஊகம் பாதி சரி “

அவளிடமிருந்து பளிச்சென பதில் வந்தது.

அமெரிக்காவை நெருங்கி விட்ட கொலம்பசின் சந்தோஷம் ஈஸ்வர் முகத்தில் தெரிந்தது .

“புரியலை …எப்படின்னு .கொஞ்சம் வெவரமாச் சொல்லேன் பிளீஸ் ..சஸ்பென்ஸ் வேண்டாமே ! “

விட்டால் காலில் விழுந்து விடுவான் போல் இருந்தது..

“நீங்க நெனைக்கற உமா நான் இல்ல ..அது என் அம்மா”

மீண்டும் ஒரு “பளிச்” பதில்.

ஈஸ்வருக்கு மற்றும் ஓர் ஆச்சர்யம். …அச்சில் வார்த்தாப்போல் அவனின் சினேகிதி உமா என்கிற உமாகுட்டியின் அதே வட்ட முகம், அகண்ட கண்கள், எடுப்பான நாசி, நேர்-வகிடு எடுத்துப் பின்னிய தலைமுடி, காதுகள் இரண்டிலும் காதணி என்ற பெயரில் பெரிய சைஸ் வளையங்கள், ஃபிட்டான உடை, தெளிவான கணீர் குரல்… எல்லாம் இவளிடமும் இருந்தது … காலைச் சற்று சாய்த்து நடக்கும் சிறு ஊனம் ஒன்றைத் தவிற…….

என்னடா இது? உமாவிற்கு கல்யாணமாகி பேரக் குழந்தையா ? நாம் அப்பா-அம்மாவுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறி அத்தனை வருடங்களா ஓடி விட்டன ? கேள்விகள் அவன் மனதை ஆக்கிரமிக்க … மெல்ல கடந்தகால நிகழ்வுகள் கண்ணில் திரையின் படமாய் ஓடின ….

“அப்படியா ? …உமா நல்லா இருக்காளா ? …இது உன் பையனா? உன் ஹஸ்பண்ட் என்ன பண்றார் ? ஐ டி கம்பனியா இல்ல பிஸினஸ்சா ? நீங்க எல்லாம் இன்னும் அதே 3/10ஆம் நம்பர் வீட்லதான் இருக்கீங்களா?”

ஈஸ்வர் இருக்கும் இடம் பொருள் ஏவல் மறந்து கேள்விகளைப் படபட வென்று கேட்டாலும் அந்தப் பெண் நிதானமாக …

“ஆமாம் ஸார் …நாங்க அதே 3/10 ஆம் நம்பர் வீட்ல தான் இருக்கோம் ….என்னை இவ்வளவு அக்கறையா விசாரிக்கற நீங்க யாருன்னு இன்னும் சொல்லவே இல்லையே?”

“நானா? …..சொல்றேன் ……நானும் உமாவும் …..”

பதில் சொல்ல முற்பட்டபோது பர்ச்சேசை முடித்து
வந்துகொண்டிருக்கும் மஞ்சுவும் சஞ்சுவும் அவன் கண்ணில் பட்டதால் அப்படியே பேச்சை நிறுத்தினான்.

மஞ்சு, “இதோ பாருங்க …உங்க அம்மாவுக்கான புடவை உள்பட எல்லாருக்கும் டிரெஸ் வாங்கியாச்சுங்க .. எங்க எல்லாருக்கும் திருப்தி.
உங்கஷர்ட்சைஸ்தான்கொஞ்சம் முன்னபின்னஇருக்கும்னுநெனைக்கறேன் …உங்களுக்குப் போன்போட்டு கேக்கலாம்னு பாத்தா என் மொபைல வீட்டுலயே விட்டுட்டேன்.. உங்களுக்கு ஒரு வேளை ஷர்ட் ஃபிட்டா இல்லன்னா…பிரச்னை இல்ல … மாத்திக்கலாம் ….நாம கெளம்புவோமா ? எனக்கு உடனே ஒரு ஸ்ட்ராங்க் காப்பி சாப்பிடணும் …லேசா தலை வலி …ரொம்ப நேரமா நின்னு கிட்டிருந்தது கால்வேற வலிக்குது ” என்றாள் மஞ்சு .

மனைவியின் அவசரத்தை புரிந்து கொண்ட ஈஸ்வர் அந்தப் பெண்ணிடம் ஒரு சிறு கை-சைகை காட்டிவிட்டு அவர்களுடன் இணைந்து வீடு போய்ச் சேர்ந்தான் ..

2

வருடங்கள் 1960 – 1969…

கதவு இலக்கம் 3/10, வேதகிரி தெரு…. சிந்தாதிரிப்பேட்டை

வாசல் முகப்பில் ஆரம்பித்து நீள-வாக்கில் சுமார் 50 மீட்டர் செல்லும் அவ் வீட்டில் எதிரெதிர் பகுதி களாய் வாடகைக்குக் குடியிருந்த குடும்பங்கள் எட்டு . அந்த எட்டில் ஈஸ்வர், அவன் அம்மா-அப்பா மூவரும் சேர்ந்த குடும்பமும் அடக்கம் .

வீட்டின் பின்புறம் இருந்த தோட்டம் சரியாகப் பராமரிக்கப்படாததால் சுற்றுப் புறம் குப்பைமேடாய் மாறி … பெரிய மரக்கதவுடன் பெயருக்கு என்று இருந்தது..தோட்டத்துக்கு நடுவே வேர்கள் தண்ணீர் கண்டு வெகு நாளாகிப் பட்டுப் போன ஓர் அரச மரம்.

வீட்டின் முன் பக்கம் வீட்டுக்காரர் மற்றும் அவர் இளைய சகோதர குடும்பம் இரண்டையும் சேர்த்து அந்த பெரிய வீட்டில் குடியிருந்த மொத்த குடும்பங்கள் பத்து.

அதைக் கருத்தில் கொண்டு கார்ப்பரேஷனில் கொடுத்த கதவு எண்தான் இந்த மூன்றின் கீழ் பத்து .

மாடியில் சாலையைப் பார்த்த பால்கனியுடன் இருந்த அந்த வீட்டுக்காரருக்கு உமாகுட்டி என்ற ஒரே மகள்.

பள்ளி வகுப்பைப் பொறுத்த வரை உமா, ஈஸ்வருக்கு ஓர் ஆண்டு ஜூனியர். அவளும் அவனும் சிறுவர்-சிறுமியர் சேர்ந்து படிக்கும் பள்ளியில் ஒன்றாய் படித்து வந்தனர் ….உமா படிப்பில் மட்டும் அல்லாது பள்ளியின் சார்பில் நடக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி இவற்றில் பங்கு கொண்டு முதல் பரிசைத் தட்டிச் செல்லும் படு சுட்டிப்பெண்.இளம்பிள்ளை-வாத விளைவால் ஓடி-ஆடும் போட்டிகள் மட்டும் அவளுக்கு ‘செட்’ ஆகாது. இதை நினைத்து எத்தனையோமுறை அவள் கடவுளிடம் கோபப்பட்டிருக்கிறாள்.

உமா-ஈஸ்வர் இருவர் இடையே பள்ளி மதிய இடைவேளையின்போது, கொண்டு வந்த உணவை சேர்ந்து அமர்ந்து பகிர்ந்து உண்பது முதல், மாலை நேரத்தில் , வகுப்பின் அனறாட நிகழ்வுகளை ஒரு முறை மீண்டும் அசை போடுவது மற்றும் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகளை விமர்சனம் செய்வது வரை ஒளிவு மறைவு இல்லாத நெருங்கிய நட்பு நிலவியது.

பல நாட்கள் ஈஸ்வர், இரண்டு-பேர் வீட்டாருக்கும் தெரியாமல் அவளைத் தெருமுனையிலிருந்து அவனதுசைக்கிளில் தன்னுடன் ஏற்றிச் சென்றிருக்கிறான்.

இப்படி இருந்த இருவரின் நெருங்கிய நட்பு ஒரு காலப் புள்ளியில் இன்னும் சற்றுத் தீவிரமாகி ஈஸ்வர் மனதில் காதலாய் மலர்ந்தது.

உமாவிற்கும் ஈஸ்வர் மீது அவனுடைய நல்- மனங்கருதி ஒரு ஈர்ப்பு இருந்த போதும் தன் கால் ஊனத்தை மனதில் கொண்டு காதல், திருமண வாழ்க்கை இவைகளைப் பற்றியெல்லாம் கற்பனை செய்யவும், கனவு காணவும் துணிவு பிறந்ததில்லை.

ஈஸ்வருக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிந்து விடுமுறை விட்ட நேரம் .. ஒரு நாள்…

உமா-வீட்டில் எவரும் இல்லாத சூழலில் , அவளிடம் தன் காதலைப் பற்றி சொல்லத் தயாரானான் ஈஸ்வர். அவன் கையில் “என் ஆசை நிறைவேறுமா? என்ற தலைப்பு கொண்ட புத்தகம் வைத்திருந்தான்.

உமா வீட்டுக் கதவைத் தட்டினான் .
கதவைத் திறந்தாள் உமா.

“ஹாய் உமா! இந்த புடைவை உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு … ….புதுசா ? ஆமாம் ….என்ன பண்ணிகிட்டு இருக்க…பிஸியா ? “

“தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்பிளி மெண்ட்ஸ் ஈஸ்வர் …பிசியெல்லாம் இல்ல .. சும்மாதான் இருக்கேன் .அம்மாவும் அப்பாவும் பக்கத்தில ஒரு கல்யாணத்துக்கு போய் இருக்காங்க “

அது எனக்குத் தெரியாதா? …அவங்க வெளியே போறத பாத்துட்டு தானே உன்னை பாக்கவே வர்றேன்னு மனசுக்குள்ள நினைத்துக் கொண்டான் ..

“ஏன் ..நீ அவங்க கூட கல்யாணத்துக்கு போகலயா?”

“போகலாம்னுதான் புது புடவை எடுத்து கட்டிகிட்டேன்.. …அதுக்குள்ளே என் முடிவில ஒரு மாற்றம் …அதனால போகல …உனக்கு என்னைப் பத்தி தெரியாதா? அங்கே போனாலும் நான் ஒரு இடத்தில் நாற்காலியைப் போட்டுகிட்டு ஒக்காந்து இருக்கணும்… …பெரியவங்க சின்னவங்கன்னு யாராய் இருந்தாலும் அவங்கதான் என்கிட்ட வந்து பேசணும் … இப்படி என் கால் ஊனத்தை நினைவு படுத்துற எந்த ஒரு சூழலையும் நான் வெறுக்கிறேன். இதையெல்லாம் மனசுல வச்சுகிட்டுதான் கடைசி நேரத்தில அம்மா கிட்ட நான்வரலேன்னுட்டேன் .. அவங்க ரெண்டு பேரும் கிளம்பி
போய்ட்டாங்க “

“உமா ..நீ வாழக்கைய சரியாப் புரிஞ்சுக்கல …உன் கால் இப்படி இருக்கிறது ஒரு ‘டிசெபிலிடி’ தானே தவிற ‘டிசீஸ்’ இல்ல ..இந்த தாழ்வு மனப்பான்மை என்னிக்கு உன்னை விட்டுப் போகுமோ? சரி … இன்னிக்கு நீ அவங்க கூட போகாததும் ஒரு விதத்துல நல்லதா போச்சு “

” என்ன நல்லதா போச்சு ? …புரியலை …”

“இல்ல …ஒண்ணும் இல்ல ..நாம கொஞ்ச நேரம் ஃபிரியா பேசிகிட்டு இருக்கலாம்னு சொன்னேன் ! “

“ஈஸ்வர்… என்கிட்ட நீ ஏதோ சொல்ல வந்துட்டு நான் என்னன்னு கேட்ட உடனே ஏன்
மறைக்கற? “

“நான் மறைக்கறதுக்கு என்ன இருக்கு ? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல … உமா …”

“ம்ம் ஹூம்… ஏதோ விஷயம் இருக்கு …நான் நம்ப மாட்டேன். உண்மையச் சொல்லு “

“சரி ….சொல்றேன் …..நீ என்ன பத்தி என்ன நெனைக்கிறே? “

“இதென்ன புதுசா கேள்வி ? இன்னிக்கு உன் பேச்சும் செயலும் ஒரு தினுசா இருக்கு …என்னதான் விஷயம்? நீ சொல்றேன்னுட்டு இப்போ எனனை கேள்வி கேக்கறயே ? “

” நான் கேட்டதுக்கு பதில் சொல்லு “

“ம்ம்ம் … ..நீ ரொம்ப நல்லவன்..புத்திசாலி … ….எல்லார்க்கும் உதவற குணம் உள்ளவன்..அதிலும் குறிப்பா எனக்கு பல விதத்துல உதவற பெஸ்ட் ஃபிரண்ட்…போதுமா ? “

” பெஸ்ட் ஃபிரண்ட் மட்டும் தானா ? “

“இன்னும் வேற என்ன சொல்லணும்னு எதிர்பாக்கற …? “

” சரி ..இப்படியெல்லாம் கேட்டா உன் கிட்டேயிருந்து பதில் வராது …நான் நேராவே விஷயத்துக்கு வர்றேன் …என்னை உனக்குப் பிடிச்சிருக்கா ?

உமா இந்த திடீர் கேள்வியை அந்த நேரத்தில் அவனிடமிருந்து எதிர் பார்க்கவில்லை. அவள் முகம் சட்டென்று வியர்த்தது …இருந்தாலும் சமாளித்தாள்.

“பிடிச்சிருக்கு…ஆமாம் ….உன் கையில அதென்ன புத்தகம் ? “

“எக்ஸாம் முடிந்து வீட்டில சும்மா இருக்கோமேன்னு நேத்து வாங்கிண்டு வந்தேன்”

என்று கையில் இருந்த புத்தகத்தை நீட்டினான்.

புத்தகத்தை கையில் வாங்கியவள் கதையின் தலைப்பை வாய் விட்டுப் படித்தாள்.

“என் ஆசை நிறைவேறுமா ? “

“டைட்டில் எப்படி இருக்கு? ..நீ என்ன நினைக்கிற ? ” என்று கேட்டான் ஈஸ்வர்.

“இதோ பார் ஈஸ்வர் …நீ ‘சிம்பாலிக்கா’ என்ன கேக்க வர்றேன்னு புரியுது ..நீ நெனைக்கறா மாதிரியெல்லாம் ஒரு பொண்ணு என்னால நெனைச்சு சட்டுன்னு முடிவெடுக்க முடியாது…உனக்கு என் அப்பாவைப் பத்தி தெரியாது … அவருக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது. வெளியிலேர்ந்து பாக்கும்போதுதான் நான் அவருக்கு செல்லப் பொண்ணு ….வீட்ல என் நிலமையே வேற…இதெல்லாம் சரியா வராது … …புரிஞ்சு நடந்துக்க …”

நிதானமாய் தெளிவாய் யோசிக்கும் ஒரு பெண்ணாய்
பேசினாள் உமா …இவளா வாழ்க்கையை சரியா புரிஞ்சிக்க கல… ?

“இதுதான் உன் முடிவா ?”

“அப்படின்னு இல்ல …. …”

“நல்லா யோசிச்சு சொல்லு …அவசரம் இல்ல …”

“உனக்கு தைரியம் இருந்தா எங்க அப்பா கிட்ட வந்து பேசு “

என்று அவள் சொல்லி முடிக்கவும் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

“இரு நானே திறக்கிறேன் ” என்று உமா கதவைத் திறந்தாள்.

கல்யாணத்துக்கு போன உமாவின் அப்பாவும் அம்மாவும் .

உள்ளே நுழைந்த உமாவின் அப்பா ஈஸ்வரைப் பார்த்து “அடடே …ஈஸ்வர் ….நீ எங்கப்பா இங்க ?” என்று கேட்டார்.

“இல்ல அங்கிள் …எஸ் எஸ் எல் சி முடிச்சிட்டு ‘ஐஐடி என்டிரன்ஸ்’ எழுதலாம்னு …அதுக்கு கோச்சிங் கிளாஸ்ல சேர்றதுக்கு இன்னைய பேப்பர்ல விவரம் வந்திருக்குன்னு சொன்னாங்க…அதான் உங்க வீட்டி ல இருந்து இந்து பேப்பர் வாங்கிட்டு போலாம்னு வந்தேன் “

காதல் வந்தாலே பொய் சரளமாக வருங்கறது சரியாத்தான் இருக்கு …அவனுக்கும் பொய் ரொம்ப சரளமாக வந்தது ..

“பொய் சொல்லாத! யார் கிட்ட காது குத்தற? பிச்சு பிடுவேன் பிச்சு … வழியில உங்க அப்பாவ பாத்து பேசிட்டுதான் வர்றேன் …அவர் அடுத்த வருஷம் ரிட்டயர் ஆராராம்.
அதுக்கப்புறம் நீதான் குடும்பத்தையே தாங்கப்போறேன்னு நம்பிகிட்டி ருக்காறார் …உன்னை பத்தி நெறைய கனவு கண்டுகிட்டு இருக்கார் … நீ என்னடான்னா இங்க வந்து என் பொண்ணோட அனாவசியமா பேசி உன் டயத்தை வேஸ்ட் பண்ணி கிட்டு இருக்க ….

இதுக்கு ஐ ஐ டி என்டிரன்ஸ் ஒரு சாக்கு ..இந்தா… பிடி இந்த பேப்பர…நீ கெளம்பு …..ம்ம் . ..அப்புறம் இன்னொரு விஷயம்… இனிமே உமாவைப் பாக்க இங்கே வராதே …”

தலையை குனிந்த வண்ணம் இந்து பேப்பரை கையில் வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ..

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமாவை அவன் சந்திக்கவே இல்லை……

ஈஸ்வரின் அப்பாவுக்கு ஆபீசில் திடீர் இடமாற்றம்…
அடுத்த வாரமே ‘டிஸ்டர்பன்ஸ் அலவன்ஸ்’ குடுத்து பெங்களூர்ல
ஜாயின் பண்ண சொல்லி ஆபீஸ் உத்தரவு .. வீட்டை காலி செய்துவிட்டு குடும்பமே பெங்களுர் விஜயம்… தொடர்ந்து பெங்களூர் கல்லூரியில் ஈஸ்வர்
பி எஸ் சி டிகிரி படிப்புக்கு சேர்க்கை …. அதன் பின் ஈஸ்வர் அப்பா பணி ஓய்வைத் தொடர்ந்து ஒரு இரண்டு வருடம் பெங்களூர் காலேஜ் வாழ்க்கை… மீண்டும் ஈஸ்வரின் வேலை நிமித்தமாக குடும்பமே சென்னை தாம்பரத்தில் ஜாகை ……ஈஸ்வர்-மஞ்சு கல்யாணம், குழந்தை சஞ்சு பிறந்தது இப்படியெல்லாம் நிகழ்ந்து பல வருடங்கள் ஓடிவிட்டன.

3

இரவெல்லாம் ஈஸ்வருக்கு தூக்கமே இல்லை … மறுநாள் காலை …முதல் வேலையாய் உமாவைச் நேரில் சந்தித்து அவளுடன் பேச….அவர்கள் வசித்த 3/10ஆம் நம்பர் வீட்டிற்குச் செல்ல தயார் ஆனான்.

மஞ்சுவிடம், “நேத்து வாங்கின ஷர்ட் சரியில்லை… அடுத்த சைஸ் வேணும் என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு ஷர்ட்டையும் கடை பில்லையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான் ஈஸ்வர் ..

முன்ன மாதிரி என்றால் சுலபம் .
டிரெய்னில் பார்க் ஸ்டேஷன் போய் சிந்தாதிரிப்பேட்டை போய்விடலாம்.

இன்று லாக் டவுன் வேளையில் லோக்கல் டிரெயின் ஓடாததால் 21G பஸ் பிடித்து கிண்டி போய் அங்கிருந்து இன்னோர் பஸ் பிடித்து எக்மோரில் இறங்கி கூவம் ரிவர் பிரிட்ஜ் வழியாக சிந்தாதிரி பேட்டைக்கு நடந்தே சென்றான் ஈஸ்வர் ..

அவர்கள் வாழ்ந்த அந்த வேதகிரி தெரு அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருந்தது ..குடியிருந்த வீடு, பெரிய கட்டிடமாக உயர்ந்திருந்தது.

வாசலில் பெரிய இரும்பு கேட் ..கார் பார்க்கிங், சுவற்றில் பதித்த ‘பிஜன்’ ஷெல்ஃப் வைத்த பெரிய லெட்டர் டிரே, மேற்பார்வைக்கு வாச்மேன் இவைகள் கொண்ட மூன்று – அடுக்கு மாடிக் குடியிருப்பாய் மாறி இருந்தது .

இதில் நான் எங்கே உமா வீட்டை தேடுவேன் …? என்று நினைத்தாலும் ஈஸ்வர் வாச்மேனை மெல்ல விசாரித்தான்..

“வணக்கம் ஸார் ..இங்கே உமாங்கறவங்க குடியிருக்காங்களே .அவங்க போர்ஷன் எத்தனாவது மாடின்னு சொல்ல முடியுமா ? “

“உமாவா ? …அப்படி யாரும் இங்கே கிடையாது…. நீங்க …? “

“இல்ல ஸார் …நல்லா நியாபகம் இருக்கு .இந்தத் தெரு, 3/10ஆம் நம்பர் வீடுதான் சொன்னாங்க …அவங்களுக்குக் கூட கால் கொஞ்சம் ஊனம் ..
அவங்கள மாதிரியே அசல் அச்சா இருப்பாங்க அவங்க பொண்ணு. அஸ்வின்னு ஒரு பேரப் பையன் கூட அவங்களுக்கு உண்டு “…

“சாரி ஸார் …அந்தப் பேர்ல, நீங்க சொல்ற அடையாளத்துல இங்க யாரும் இல்ல .. ஆமாம் …நீங்க யாரு?

“நான் அவங்களுடைய அந்நாளைய சினேகிதன் …நீங்க கோவிச்சுக்கலன்னா ஒண்ணு கேக்கலாமா ? நீங்க இங்க புதுசா வேலைல சேர்ந்திருக்கற வாச்மேனா ? “

“ஸார் இந்த பில்டிங் கட்ட ஆரம்பிச்சதலே இருந்து நான்தான் இங்க வாச்மேனா இருக்கேன்.. நீங்க கேக்கறவங்க இங்க இல்ல …
ஒண்ணு பண்ணுங்க உங்க கிட்ட அவங்க போன் நம்பர் இருந்தா பேசிப் பாருங்களேன்… “

” மன்னிக்கணும் …நேத்து அவங்க மகளை நான் துணிக் கடையில் பாத்தேன் …அவங்கதான்.. உமா இங்க குடியிருப்பதா சொன்னாங்க ….”
“இல்ல ஸார் …நீங்க யாரையோ மனசுல வச்ச கிட்டு இங்க வந்து தேடரீங்க…டைம் வேஸ்ட் பண்ணாம கெளம்புங்கஸார்..அஸோசியேஷன் செகரட்ரி கீழே வர்ர நேரம் ..அனாவசியமா யாரை நிக்க வச்சு பேசினாலும் சத்தம் போடுவார் ஸார் “

ஒரு இரண்டு நிமிடம் மவுனம் சாதித்து பின்னர்

” ஸார் …அட் லீஸ்ட் உங்க கிட்ட அந்த உமா வோட போன் நம்பர் இருக்குமா ? ?

ஈஸ்வருக்குக் கொடுக்கப்பட்டு வந்த மரியாதை இப்போது சற்று குறைந்தது…

“ஏம்ப்பா …நீ படிச்சவன் தானே? …ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு? …உமாவே இங்க இல்லங்கறேன் …அவங்க போன் நம்பர கேட்டு கழுத்தறுக்கறயே! … அவங்க இங்க இல்லேன்னா கிளம்பிப் போவியா? …மல்லு கட்டிகிட்டு நிக்கற! “

கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையா வெளியில் தள்ளினான்.

வெளியே வந்த ஈஸ்வர் மேலே செய்வது அறியாது நின்றான்… அவனுக்கு உமாவைப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு போகவே மனதில்லை.

அந்த பெரிய இரும்புக் கதவில் பொறிக்கப் பட்ட கதவிலக்கம் 3/10 அவனைப் பார்த்து புன்னகைத்தது.

4.

“அண்ணே …சொல்லிக் கொடுத்தா போலயே அருமையா நடிச்சு அவனை அப்படியே திருப்பி அனுப்பிட்டிங்களே … ரொம்ப தேங்க்ஸ்.. இத வாங்கிக்கங்க…”

என்று ஒரு 500 ரூபாய் தாளை வாச்மேனிடம் நீட்டினாள் உமா !

“இல்லம்மா வேண்டாம் …இந்த சின்ன உதவிகூட உனக்கு நான் செய்யல்லன்னா நான் மனுஷனே இல்ல ! ! என் பயமெல்லாம் உங்க ஹஸ்பண்ட் கண்ணுல அவன் படாம இருக்கணுமேங்கறதுதான்”

“ஆமாமாம் ..நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி ..
ஈஸ்வர் அவர் கண்ல பட்டு, அவர் யார்னு விசாரிக்கப் போய் ஈஸ்வர் உண்மையை சொல்லி …ஏற்கனவே தொட்டதுக்கெல்லாம் சந்தேக படற மனுஷன் வீட்டையே ரெண்டாக்கிடுவார் …சும்மாவே ஆடற காலுக்கு நாம சலங்கை கட்டிவிட்டா ? யாரால் தாங்க முடியும்? நேத்து என் பொண்ணு துணிக் கடையில அவரை ப்பாத்து பேசினேன்னு என் கிட்ட சொன்னவுடனே அவர் இன்னிக்கு இங்க வருவார்னு எதிர் பார்த்த நான், உஷாராகி உங்களையும் அதுக்கு தகுந்தாற்போல் தயார் செய்தேன் ..நீங்க வயசுல பெரியவர்தான்…இருந்தாலும் சொல்றேன்… இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் என் ஹஸ்பன்ட் போல சந்தேக பேர்வழிகள் ஆண் வர்க்கத்தில் .இருந்து கிட்டேதான் இருப்பாங்க …அவங்கள திருத்தவே முடியாது …. பிரச்னை வராமல் இருக்க என்னைப் போல பெண்கள்தான் ஜாக்கிறதையா இருக்கணும் …வாங்கிக்கங்க இந்த பணத்த…உங்க தங்கச்சி குடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா ? “
என்று அந்த 500 ரூபாய் தாளை வாச்மேன் கையில் வலுக் கட்டாயமாய் திணித்தாள்.

‘கார் பார்க்கிங்கைத்’ தாண்டி கேட்டுக்கு வெளியே நின்று உமாவுக்கும் வாச்மேனுக்கும் இடையே நடந்த இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வர்
அதிர்ச் சியில் சிலையானான்…

பெரிய வடிவில் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்ட கதவு இலக்கம் 3/10 அவனைப் பார்த்து மீண்டும் ஒரு முறை புன்னகைத்தது.