மனிதனுக்கான ஒரு கேள்வி/ மீ.விசுவநாதன்

ஆயிரம் கோடிப் பறவையினம் – எனை
ஆசையாய்த் தேடி வருகிறது
வாய்மொழி குக்கூ எனக்கூவி – குயில்
வம்சமும் வாழ்ந்து வருகிறது

பச்சையாம் வண்ணக் கிளிகளுமே – அன்பு
பழகிட என்னை அடைகிறது
உச்சியாம் வெள்ளை வெயிலுமே – என்
உச்சியைத் தொட்டு மகிழ்கிறது

மாமழை பூவாய்ப் பொழிந்தபடி – புது
வாசனை தந்து சிரிக்கிறது
ஆநிரை கூடி நிழலுக்காய் – என்
அருகிலே மெல்ல அமர்கிறது

பாம்புடன் பூச்சி புழுவெல்லாம் – என்
பட்டுடல் மீது நடக்கிறது
வீம்புடன் இந்த மனிதயினம் – எனை
வெட்டியே கொள்ளை அடிக்கிறது

சுத்தமாய்க் காற்றைத் தருவித்து – புவி
மொத்தமும் இன்பம் கொடுக்கின்றேன்
எத்தனை செய்தும் மனிதமனம் – ஏன்
ஈரமி லாமல் இருக்கிறது
(05.03.2020 23.46 pm)