மனுஷ்ய புத்திரன் கவிதை

எல்லோரும் வேர்களைத் தேடிப்போவதாகச்
சொல்கிறார்கள்
எனக்கு மிகவும் தனிமையாக இருந்தது
முகமற்ற நகரங்களில் இருப்பது குறித்து
முகமற்ற நகரங்களில் இறப்பது குறித்து
அச்சமாக இருந்தது
நானும் என் வேர்களைத் தேடிச் சென்றேன்
நான் பிறந்த ஊரிலோ
வளர்ந்த ஊரிலோ
வாழும் ஊரிலோ
எங்கும் நான்
எந்த வேரையும் கண்டதில்லை
நான் திரும்பிவரும் பாதையில்
ஒரு புல்கூட முளைப்பதில்லை
எனக்கு பூர்வீக நட்சத்திரங்கள் எதுவும்
வழி காட்டுவதில்லை
என் காலடியில்
எந்த மண்ணும் ஒட்டுவதில்லை

வேர்களைத் தேடிக்
கண்டடைபவர்களைக் கண்டால்
பொறாமையாகக்கூட இருக்கிறது
நான் ஒரு காற்றைபோல இருக்கிறேன்
எங்கும் நான் படிவதில்லை
எனக்கு தடயங்கள் ஏதுமில்லை
என்னைப் போகாதே என
எவரும் தடுப்பதில்லை
திரும்பி வா என
யாரும் அழைப்பதில்லை
எனக்கு பழங்கதைகள் இல்லை
நாட்டுப்புறக் கனவுகள் இல்லை
மண் வாசனைகளில்லை
தண்ணீரின் விஷேச ருசிகளில்லை
இந்த ஊரில்
இந்தப் பண்டம் சிறந்ததெனத் தருகிறார்கள்
நான் ஒரு விஷேச ருசியைக்
கற்பனை செய்துகொள்கிறேன்
அப்படி எதுவும் உண்மையில் இருக்கவில்லை

நான் ஒரு சரியான நகர்ப்புற உதிரி
எல்லா விடுதியறைகளிலும்
எனக்கு ஒரேமாதிரிதான் உறக்கம் வருகிறது
எங்கிருந்து போகும்போதும்
எனக்கு பிரிவின் வலிகள் இல்லை
சும்மா இருக்கிறேன்
சும்மா அங்கிருந்து சென்று விடுகிறேன்
யாரோ சிலர் வழியில்
இறுக அணைக்கிறார்கள்
அப்புறம் அங்கிருந்து
சடாரென சென்று விடுகிறார்கள்
நானும் அவ்வாறே சென்றுவிடுகிறேன்

என் மனம் வறண்டிருக்கிறது
அற்பத்தனங்களைக்கண்டு
வெறுமனே புன்னகைக்கிறேன்
அவர்களிடம் கைகுலுக்கிறேன்
வாழ்நாள் முழுக்க
இதெல்லாம் இப்படித்தான்
இருக்கப்போகிறது
தகுதியற்றவை மேல்
அதிக விலையுள்ள சீட்டுகள் ஒட்டப்பட்டுள்ளன
நான் அவற்றை தவிர்க்க முற்படுகிறேன்
பிறகு அவற்றை பயன்படுத்துகிறேன்

எல்லா ஊர்களும்
ஒரேமாதிரிதான் இருக்கின்றன
கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடின்றி
கேவலமாக இருக்கின்றன
ஒரு நேர்மையான வணிகத்தை
ஒரு நேர்மையான் காதலைக் காண்பது
அரிதாக இருக்கிறது

இப்படி வாழ்வது
சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது
ஆனால்
அதில் நான் ஒரு விடுதலையை உணர்கிறேன்
அந்த விடுதலையும் சலிப்பாக இருக்கிறது

எனக்கு வேர்கள் இல்லை
திரும்பிச் செல்ல பாலங்கள் இல்லை
ஆனால் சில நினைவுகள் உள்ளன
உதாரணமாக
என் பால்யம் என்றால்
என் நடைவண்டி உடைந்தது நினைவிருக்கிறது

மற்றபடி
நான் எல்லாவற்றிலிருந்தும்
இடையறாது உதிர்ந்துகொண்டேயிருக்கிறேன்

6.3.2023
மாலை 5.02