தெரியாது/வளவ.துரையன்

தோட்டத்தில் குடிக்கத் தண்ணீர்
ஒரு மடக்கில் வைக்கிறேன்
மடக்கு தெரியுமா?
பெரிய அரை அடி
விட்டம் உள்ள அகல்

காலயிலேயே அலுவலகம்
செல்வதைப் போல்
இரண்டு மைனாக்கள்
வந்து குளித்து விட்டுச் செல்லும்

ஒன்று குளித்து முடிக்கும்வரைக்
காத்திருந்துதான் அடுத்தது குளிக்கும்.
உடனே போய்த்
தண்ணீரை மாற்ற வேண்டும்

இல்லையேல் அடுத்துவரும்
தவிட்டுக்குருவிகள்
குளிக்க மறுக்கும்.

பத்து மணிக்குத்
தலையில் அழகாய்க்
கொண்டை உள்ள
குருவி வந்து குளிக்கும்

அதன் பின்னர் உடல்
முழுதும் கருப்பாய் அடிப்பாகத்தில்
ஒரு மெல்லிய கோடாகவும்
வாலிலும் வெள்ளைகொண்ட
ஒரு சிறு குருவி வரும்

மாலையில் முழுதும் பழுப்பாய்த்
தலைமுடி மட்டும் கருப்பாய்
ஒன்று வந்து குளிக்கும்
இதுபோல வரும் சில
குருவிகள் பெயர்
தெரியவே இல்லை யாருக்கும்
ஆனால் ஆஸ்திரேலியாவில்இருக்கும்
ஈமு, கங்காரு பெயர் தெரியும்