
11 3 2023 அன்று மாலை விருட்சம் நடத்தும் கதைகளை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் எழுத்தாளர்
ஆன்டன்செக்காவின் “பந்தயம் “என்ற சிறுகதை குறித்து நான் பேசியதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஆன்டன் செக்காவின் இந்த சிறுகதை சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த 100 கதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது .
சிறந்த தமிழ் எழுத்தாளர்களும் மற்றும் உலகின் பல இலக்கியவாதிகளும் தங்களின் மனதை கவர்ந்த கதையாக இந்த கதையை குறிப்பிடுகிறார்கள் .
சரி !இனி கதையை பற்றி பார்ப்போம்.
பந்தயம்
இந்தக் கதையில் பிரதானமாக இரண்டு கதாபாத்திரங்கள் தான் .ஒருவர் வங்கி காரர் . மிகப்பெரிய பணக்காரர். மற்றொருவர் 25 வயதான ஒரு இளம் வக்கீல்.
வங்கிக்காரர்
15 வருடங்களுக்கு முன்னால் தான் அளித்த விருந்தை நினைத்துப் பார்க்கிறார் .
பல புத்திசாலிகளும்,அறிவாளிகளும் கலந்து கொண்ட அந்த விருந்தில் பல விஷயங்களை பேசினார்கள் . அவற்றில் மரண தண்டனையும் ஒன்று . அறிவாளிகளும் பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் மரண தண்டனையை யாரும் ஏற்கவில்லை . ஆனால் வங்கிக்காரர் மரண தண்டனையானது ஆயுள் தண்டனையைக் காட்டிலும் மனிதாபிமானது , அறம் சார்ந்தது என்று வாதிட்டார் . .மரண தண்டனை யில் ஒரு நொடியில் உயிர் போய்விடும் .
ஆயுள் தண்டனையோ கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் .ஒரு சில நொடிகளில் உன்னை கொல்பவன் மனிதாபிமானியா ? பல ஆண்டுக்கு தொடர்ந்து வைத்து உன் ஆவியை போக்கு பவர் மனிதாபிமானியா ? என்று கேட்டான் . கூட்டத்தில் இருந்த 25 வயதான வக்கீல், இருவருமே அறநெறி சார்ந்தவர்கள் அல்ல . இருவருக்குமே உயிரைப் பறிப்பது தான் குறிக்கோள் . அரசாங்கம் என்ன கடவுளா ?
திருப்பி அளிக்க முடியாத ஒன்றை அரசாங்கம் எடுத்துக் கொள்ள எந்த உரிமையும் கிடையாது ,என்று பேசினான் ,
இரண்டுமே அறநெறிக்கு எதிரானவை . ஆனாலும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவேண்டியிருந்தால் நான் ஆயுள் தண்டனையே தேர்ந்தெடுப்பேன் . சாவதை விட உயிரோடு இருப்பது மேல் அல்லவா . தண்டனை முடிந்து நமக்கான வாழ்வு காத்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு வாழலாம் அல்லவா ? என்றான் .
விவாதம் மிகவும் சூடி பிடித்தது .
தீவிரமான விவாதத்தின் நடுவில் வங்கிக்காரர், தன் நிலையை இழந்து மேதையில் ஓங்கி அடித்தார் .
அந்த இளம் வயது வக்கீலை நோக்கி நீ சொல்லுவது பொய் . நான் இரண்டு மில்லியன் பணம் பந்தயம் கட்டுகிறேன் , உன்னாள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தனி அறையில் அடைந்து கிடக்க முடியாது .
வழக்கறிஞரும் உண்மையிலேயே நீங்கள் அப்படி ஒரு பந்தயத்திற்குத் தயார் என்றால் ஐந்து ஆண்டுகள் என்ன நான் 15 ஆண்டுகள் இருக்க தயார் . என்றான் . வங்கிக்காரர் இரண்டு மில்லியன் பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டார் .
ஒப்புக்கொள்கிறேன்என் விடுதலை எனக்கான பிணையம் . உங்களுக்கோ இரண்டு மில்லியன் . இப்படியாக இந்த
நகைப்புக் குறிய பந்தயம் முடிவானது.
வீட்டில் குறுக்கும் நடுக்கமாக நடந்து கொண்டு இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து , தனக்குத்தானே வங்கிக்காரர் பேச ஆரம்பித்தார் .
நான் ஏன் இப்படி பந்தயம் கட்டினேன் . இதனால் எனக்கு என்ன பயன் .
அந்த வக்கீல் தனது வாழ்க்கையில் 15 ஆண்டுகளை இழக்கப் போகிறான் . நான் பறி கொடுப்பது இரண்டு மில்லியன் . ஆயுள் தண்டனையை விட மரண தண்டனை நல்லதா ? கெட்டதா ? என்பதை இந்த பந்தயம் எப்படி மக்களுக்கு புரிய வைக்கும் .புரிய வைக்காது . எல்லாமே வெறும் குப்பை . இது வசதி படைத்த ஒருவனின் ஷனப்பித்தம்.
அந்த வக்கீலுக்கு பணத்தின் மீது பேராசை ஒப்பந்தப்படி வங்கிக்காரர் வீட்டு தோட்டத்தில் ஒரு பகுதியில் கடும் கண்காணிப்பில் சிறைப்பட்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது . இந்த சிறைவாச காலத்தில் வக்கீலுக்கு
அந்த வீட்டின் வாசல் படியை கடந்து வெளியே செல்லும் உரிமை கிடையாது . மனிதர்களை பார்க்க கூடாது .
மனித குரலோசை கேட்கக் கூடாது . கடிதமோ பத்திரிகைகளோ பெற முடியாது .
இசை கருவியை வைத்திருக்கலாம் . புத்தகம் படிக்க அனுமதி உண்டு. கடிதம் எழுதலாம். புகைக்கலாம் . உலகத்தோடு தொடர்பு கொள்ள ஜன்னல் ஒன்று அமைக்கப்படும் . மௌனமே அவரது தொடர்பு மொழி. ஜன்னல் வழியாக ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்து தேவையான ஒயின், புத்தகங்கள் , அனைத்தையும் அளவின்றி பெற்றுக் கொள்ளலாம் . தெளிவாக தனிமையை கடுமையாக்குவதற்கான எல்லா நுண்ணிய அம்சங்களும் இடம்பெற்றிருந்தன .
அதன்படி வக்கீல் ஆனவர் 1870 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி 12 மணியிலிருந்து 1985 நவம்பர் 14ஆம் தேதி 12 மணி வரை சரியாக 15 ஆண்டுகள் தனிமையில் இருக்க வேண்டும். உடன்படிக்கையின் படி,
தப்பிக்க எடுக்கப்படும் குறைந்தபட்ச முயற்சியும் , குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு இரண்டு நிமிடம் முன் நிகழ்ந்தாலும் வங்கி காரர் இரண்டு மில்லியன் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை .
முதலாம் ஆண்டு வக்கீலை தனிமையும், வெறுமையும் வதைத்தது . ஓயினையும் , இசையையும் தவிர்த்து விட்டார் . அவை ஆசையை தூண்டுகின்றன . ஒயின் தனியாக அருந்துவதுமகிழ்ச்சி மகிழ்ச்சியை தராது . புகைப்பது அறையை மேலும் பாழ்படுத்துகிறது . முதலாம் ஆண்டு வாசிப்பதற்கு சாதாரண புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. சிக்கலான காதல் கூறுகள் கொண்ட கதைகள்,துப்பறியும் நாவல்கள் , நகைச்சுவை நூல்கள், மாயக்கதைகள் இதில் அடங்கும் . இரண்டு வருடத்தில் பியானோ வாசிப்பது நின்று போனது . வக்கீல் செவ்விலக்கிய நூல்கள் வேண்டும் என்றார் .
ஐந்தாவது ஆண்டில் இசை ஒலி மீண்டும் கேட்க தொடங்கியது . ஒயினும் கேட்க ஆரம்பித்தார் .
அந்த ஆண்டு முழுவதும் குடிப்பது , சாப்பிடுவது ,கட்டிலில் படுப்பதுமாக இருந்தான் . தனக்குத்தானே கோபமாக பேசிக் கொள்வான். புத்தகங்கள் படிப்பதில்லை .
இரவு நேரங்களில் ஏதாவது எழுதுவான் . சிலவேலைகளில் பின்னரை கிழித்து எறிந்து விடுவார் .
சில தடவை அழுது கொண்டிருந்திருக்கிறான். ஆறாவது ஆண்டின் பின்பகுதியில் தத்துவம் ,வரலாறு சார்ந்த நூல்களை ஆரத்துடன் கற்றார் . பல மொழிகளை கற்க துவங்கினார் . பேரார்வம் பெருகியது . போதுமான அளவு புத்தகங்களை அவருக்கு அளிக்க வங்கிக்காரருக்கு நேரமில்லை .
நான்காண்டு காலத்தில் ஏறக்குறைய 600 புத்தகங்களை படித்து விட்டார். வங்கிக்காரருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் . நான் இந்த கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதி இருக்கிறேன் . தேர்ச்சி பெற்ற நபர்களிடம் இவற்றைக் காட்டவும் .
எனது எழுத்தில் ஒரு பிழை கூட அவர்களால் காட்ட முடியவில்லை என்றால்,தோட்டத்தில் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டு முழங்கச் செய்யவும். எல்லா காலத்து ஞானிகளும், எல்லா தேசத்து ஞானிகளும் , வெவ்வேறு மொழிகளில் எழுதுவது ஒரே ஞானத்தை தான் . எனது பேரின்பத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் . இப்போது என்னால் அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது . பத்தாண்டுகள் கடந்த பிறகு வக்கீல் தனது மேசையின் முன்னமர்ந்து ஆடாமல் அசையாமல் புதிய வேதாகமத்தை மட்டுமே படித்துக் கொண்டிருந்தார். ஓராண்டு முழுவதும் எளியதான சிறிய ஒரு புத்தகத்தையே படித்துக் கொண்டிருந்தார்.
பிறகு
இயற்கை அறிவியல் நூல்களை வாசிப்பது , திடீரென்று பைரனுக்கோ , ஷேக்ஸ்பியருக்கோ தாவி விடுவது
ஒரே நேரத்தில் வேதியல் ,மருத்துவ நூல் , நாவல் , தத்துவம் , இறையியல் என பலதரப்பட்ட நூல்களை கேட்டுப் பெற்று படிப்பது வழக்கமாயிற்று . கடலில் உடைந்த கலன்களின் சிதறிப்போன மரத்தூண்டுகளை , உயிர் பிழைக்க வேண்டி நீந்துபவன் எப்படிப் பிடிப்பானோ , அதுபோல எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருந்தான்.
நாளையோடு 15 ஆண்டுகள் முடிய போகிறது . வங்கிக்காரர் அவனுக்கு கொடுக்க வேண்டியது இரண்டு மில்லியன் .
ஆனால் வங்கிக் காரன் இப்பொழுது பணக்காரர் இல்லை . சூதாட்டத்தில் , ,பங்குச் சந்தையில், வர்த்தகத்தில் பேராசையில் அனைத்து பணத்தையும் தொலைத்து விட்டான் .
அவன் ஏன் இன்னும் சாகவில்லை . என்னிடம் இருக்கும் சொற்ப பணத்தையும் அவன் பெற்று கொண்டு விடுவான் . நான் பரம ஏழையாகி விடுவேன் .
அவன் திருமணம் செய்து கொள்வான் . எனக்கே பணம் வேண்டுமா ? என்று கேட்பான். பிச்சைக்காரனைப் போல நான் அவனை பார்த்திருப்பேன். இந்த சிறுமையிலிருந்தும் , திவால் நிலைமையிலிருந்தும் தப்பிக்க ஒரே வழி தான் உண்டு .
அவன் சாக வேண்டும் . கடிகாரம் மூன்று அடித்தது .
எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர் .
15 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கும் வந்த அறையின் சாவியை எடுத்துக்கொண்டு
அறையை நோக்கிச் சென்றான். காவல்காரனோ கடும் குளிரின் காரணமாக அவனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தான்.
எனது நோக்கத்தை தைரியமாக நிறைவேற்றி விட்டால் ,சந்தேகம் காவல்காரன் மீதுதான் விழும் , என்று யோசித்தான் .
ஜன்னல் வழியாக அறையைப் பார்த்தான்.
கைதி அசைவில்லாமல் அப்படியே மேஜையின் மீது படுத்திருந்தான் . மிகுந்த எச்சரிக்கையோடு கதவில் இருந்த முத்திரையை நீக்கி, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் .
அறைக்குள் அமைதியே நிலவியது . மேஜைக்கு முன்பாக ஒரு சாதாரண மனிதனைப் போல இல்லாமல் ,
இறுகப் பற்றிய தோலுடன் கூடிய எலும்புக்கூட்டை போர்த்தியிருந்த நீண்ட தலை முடி , குறுகிப்போன முதுகு ,
பார்க்கவே வேதனையான தோற்றம் .
பொலிவிழந்த அந்த முகத்தைக் காணும் அவன்க்கு வயது 40 என்றால் நம்ப மாட்டார்கள் .
வளைந்த அவன் தலைக்கு முன்பு ஒரு காகிதத்தில் சிறிய குறிப்பு எழுதப்பட்டு இருந்தது .
பாதி உயிரிழந்த ஜந்துவை எடுத்து படிக்கையில் கிடைத்து தலையணையால் லேசாக அழுத்தி முடிக்க வேண்டியது தான் ,என் வேலை . எத்தகைய தீவிர பரிசோதனைகளும் அது ” இயற்கை சாவல்ல “என்று சொல்வதற்கான எந்த தடையமும் இருக்காது .
முதலில் அவர் என்னை எழுதி இருக்கிறார் என்று படிப்போம் .
காகிதத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார் .
நாளை இரவு 12 மணிக்கு எனக்கு விடுதலை கிடைத்து விடும் . மனிதர்களோடு கலந்து கொள்ளும் உரிமையை பெறுவேன். ஆனால் இந்த அறையை விட்டு நான் வெளியேறி சூரியனை பார்ப்பதற்கு முன் உங்களுக்கு ஒரு சில வார்த்தைகளை சொல்ல வேண்டியது அவசியம் . என்னுடைய தெளிவான மனசாட்சியாலும் , என்னை காணும் கடவுள் முன்பாக நின்றும் , நான் உங்களுக்கு அறிவிப்பதாவது , எனது விடுதலை , வாழ்க்கை , உடல்நலம் ,
உமது நூல்கள் அ ழைக்கும் இந்த உலகத்தின் ஆசிகள் , அனைத்தையும் நான் வெறுக்கிறேன் . ஏனெனில் நான் 15 ஆண்டுகாலக உலக வாழ்க்கையை மிக கவனமாக ஆராய்ந்து விட்டேன் . உண்மையில் நான் இந்த உலகத்தையோ , மக்களையோ , பார்க்கவில்லை . உமது நூல்கள் மூலம் மனமுள்ள ஓயினை அருந்தியிருக்கிறேன் . பாடல்களை பாடி இருக்கிறேன் . மானையும் , காட்டுப்பன்றியும் , காடுகளில் வேட்டையாடி இருக்கிறேன் . பெண்களை காதலித்திருக்கிறேன் .
கவிஞர்கள் உருவாக்கிய மேகங்களைப் போன்ற அழகிய பெண்கள் இரவும் பகலும் என்னை நாடி வந்து அற்புதக் கதைகளை மெல்லிய குரலில் சொல்லி இருக்கிறார்கள் . நான் எல்டி ரூஸ் ,மான்ட்பிளாங், சிகரங்களில் ஏறி இருக்கிறேன் . அங்கிருந்து சூரியனே எழுவதையும் , மாலையில் வானவெளி , சமுத்திரம் , மழை ஆகியவற்றின் மீது ஊதா பொன் நிறத்தை அது வாரி இறைத்திருப்பதையும் பார்த்தேன் . மின்னல் பளிச்சிடுவதை கண்டேன் .
காடுகள், வயல்கள், நதிகள் ,ஏரிகள் நகரங்கள் அனைத்தையும் கண்டேன் .கடவுளைப் பற்றி பேச வந்த சைத்தான்களின் சிறகுகளை தொட்டு உமது நூல்களின் அகல பாதாளங்களில் என்னை இறக்கி வைத்தேன் . நூல்களில் அற்புதங்கள் புரிந்தேன் . நகரங்களை எரித்து தரைமட்டமாக்கினேன்.
புதிய மதங்களை போதித்தேன். பெரும் நாடுகளை வென்றேன் .
உன் நூல்கள் எனக்கு ஞானம் .அளித்தன . கடந்த நூற்றாண்டுகளின் உருவான சலிக்காத மனித சிந்தனை அனைத்தும் எனது மூளையின் ஒரு சிறு பகுதியில் அடக்கி வைக்கப்பட்டுள்ளன . உங்களைவிட நான் புத்திசாலி என்று அறிவேன் . இருந்தும் உமது நூல்களை வெறுக்கிறேன் .
உமது உலகத்தின் ஆசைகளையும் , அறிவையும் வெறுக்கிறேன் . எல்லாம்
வெற்றுவெளி ,
வலுவற்றவை , காட்சி பொருள்கள் , மாயக்காணல் நீர் . நீங்கள் அறிவும் அழகும் கொண்டு கர்வியாக இருக்கலாம் . நிலத்தின் கீழே இருக்கும் சுண்டலியை போல மரணம் பூமியிலிருந்து உம்மை முற்றிலும் நீக்கி அழித்து விடும் . உமது வருங்கால தலைமுறையும் உமது வரலாறும் உமது அறிவார்ந்தவர்களின் அமரத் தன்மையையும் , உறைந்து போகும் . பூமி பந்துடன் அவை எரிந்து போகும் . நீங்கள் பித்தன் ஆகி தவறான வழியில் சென்றீர்கள் . பொய்யை உண்மை என்றீர்கள் . அழகற்றதே அழகு என்றீர்கள் . ரோஜாப்பூவிடமிருந்து வியர்க்கும் குதிரையின் நாற்றம் வந்தால் வியந்து போவீர்கள் . அப்படித்தான் உங்களைக் கண்டும் நான் வியந்து போகிறேன் . பூமிக்கு பதிலாக சொர்க்கத்தை பண்டம் மாற்றி தந்திருக்கிறீர் நீங்கள் . உன்னை புரிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை . நீங்கள் எதனால் வாழ்கிறீர்களோ ,
அதன் மீது என் வெறுப்பை உங்களுக்கு காட்ட விழைகிறேன் . முன்பு எதை சொர்க்கம் என்று கனவு கண்டேனோ, அந்த இரண்டு மில்லியன்களை நான் விட்டுக் கொடுக்கிறேன் . தற்போது நான் அதை வெறுக்கிறேன் .
அதன் மீதான என் உரிமையை என்னிடமிருந்து நானே பறித்துக் கொள்கிறேன் . உடன்படிக்கையில் கண்டுள்ள கால அளவுக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே இங்கிருந்து வெளியேறி விடுவேன் .
அதனால் உடன்படிக்கையை மீறினவாகி விடுவேன் .
ஆகவே என் உரிமை பறிபோய்விடும் .
வங்கிக்காரர்
படித்து முடித்ததும் மேடையின் மீது காகிதத்தை வைத்தார் .
அந்த வினோதப் பிறவியின் தலையில் முத்தமிட்டு அழத் தொடங்கினார் பெரும் நஷ்டத்தை சந்தித்தபோது கூட ஒருபோதும் தன்னைத்தானே அவர் வெறுத்தது இல்லை . படுக்கையில் விழுந்தார் . மனக்கலக்கமும் , கண்ணீரும் அவரை தூங்க விடவில்லை . மறுநாள் காலை காவல்காரன் அவரிடம் வந்து தோட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தவன் ஜன்னல் வழியாக வெளியேறி விட்டான் என்று சொன்னான் , வங்கிக்காரர் தனது பணியாட்களுடன் தோட்டத்திற்குச் சென்று ,
அந்த கைதி எல்லாவற்றையும் துறப்பதாக எழுதிய அந்த காகிதத்தை பத்திரமாக எடுத்துச் சென்று , தவறான வதந்திகளை தவிர்ப்பதற்காக , தனது பெட்டகத்தில் வைத்து பூட்டினார் .
இலக்கியத்தின் மேன்மையை,வாசிப்பின் மகோனதத்தை,அழகாக சொல்லும் கதை . இலக்கியத்தின் மூலமாகவே,
நாம் கடந்த காலத்திற்கும் செல்ல முடியும் . எதிர்காலத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும் .
வாழ்வின் அருமையை புரிந்து கொள்ள முடியும் . மிக அழகான கதை . அருமையான இந்த கதையை படிக்காதவர்கள் ,
கட்டாயம் படித்து மகிழவும்.இந்த அருமையான கதையை பற்றி பேசுவதற்கு வாய்ப்பளித்த அழகியசிங்கருக்கும் ,
கேட்டு ரசித்த அன்பர்களுக்கும் என் நன்றியும், பாராட்டுதல்களும் .
