வீடு மாற்றம்/பானுமதி ந

திரு த நா குமாரசுவாமி எழுதிய சிறுகதை. மிகச் சரளமான நடையில், தர்மமிகு சென்னையில், வாடகை வீட்டிற்கு அலையும் ஒரு நடுத்தர வயதுக்காரரின் அல்லாட்டங்கள் போலத் தோற்றமளிக்கும் கதை. ஆனால் இதில் பொதிந்துள்ள சுவாரசியங்கள், மனோ தத்துவங்கள் அருமையாக இருக்கின்றன.

கதையின் தொடக்கத்திலேயே திருக்குறளைச் சொல்கிறார். “புக்கில் அமைந்தென்று கொல்லோ, உடம்பினுள் குச்சியில் இருந்த உயிர்க்கு.” மோக்ஷம் கிடைக்காமல் அல்லல் படும் ஆன்மா, அந்த வீட்டை அடைவதற்கு எத்தனை போராட்டங்களை மேற்கொள்கிறதோ, அதைப் போன்றே வாடகைக்கு வீடு கண்டடைவதும் என்ற நகைச்சுவை அடியோட்டமாக இருக்கிறது. முத்தியால்பேட்டை, மயிலாப்பூர், ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் என்று விரிகிறது வீடு தேடும் படலம். விரிஞ்சிபுரத்தில் கடல் போன்ற வீடு இருந்தென்ன, 15 ரூபாய் கூட வாடகை அங்கிருந்து வருவதில்லை. வருடத்திற்கு ஒரு முறை போனாலும் ஒரு வாரத்திற்கு மேல் அங்கு அவர் மனைவிக்கு இருப்புக் கொள்ளவில்லை இவர் பெயிண்ட் ஏஜென்சி கமிஷன் எடுத்திருப்பதால் சென்னையில் வேலை. உண்மையாக உழைத்தால் மாதம் 300 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று போகிற போக்கில் ஒரு அழுத்தம் கொடுக்கிறார் உண்மையான உழைப்பிற்கு. அவர் மகன் பாம்பேயில் வேலை செய்து பணமும் இவர்களுக்கு அனுப்புகிறான். கஷ்டப்பட வேண்டியது இல்லை ஆனால் வாடகை ஒன்று அதிகமாக இருக்கிறது அல்லது இடம் நன்றாக இல்லை.

லிங்கி செட்டித் தெருவில் பார்த்த வீட்டைப் பற்றிய வர்ணனை ரணகளம். வெளிச்சமும் காற்றும் இல்லாத ஒரு வசிப்பிடம். மனிதர்களின் பணத்தாசையை இங்கு எள்ளி நகையாடுகிறார். பணக்கார தெரு, புதுத்தெரு, ராமசாமி தெரு என்று தெருத்தெருவாக அலைந்தாலும் ஒன்றும் அமையவில்லை.

பின் மைத்துனர் மூலம் தாமோதரப் பெருமாள் சன்னதி தெருவில் மயிலையில் புறாக் கூண்டுகள் போன்ற வீட்டைப் பார்க்கிறார். நாலாவது போர்ஷன் காலியாக உள்ளது ஆனால் மேல் மாடிக்கு தண்ணீர் ஏற்ற இரும்பு மூடியிட்ட பள்ளம் ஒன்று அறையினுள் இருக்கிறது. அதன் மீதுதான் குடித்தனமே நடத்த வேண்டும். 12 குடும்பத்திற்கு மொத்தமாக மூன்றே பாத்ரூம்கள். வாடகை ரூபாய் 80/- என்றெல்லாம் சொல்லிக் கொண்டே வருபவர் அந்தப் புறாக் கூண்டுகளின் வாயிலில் உள்ள கிழவர். வீட்டின் ஓனர் முஸ்தபா பஜாரில் கடை வைத்துள்ளார் என்றும் சொல்கிறார். இங்கே இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஒன்று, பெண்ணிற்கு கல்யாணம் செய்ய வேண்டிய காரணத்தால் சொந்த வீட்டை அதிக விலைக்கு ஒரு முஸ்லிமிடம் விற்ற ஐயங்கார். அங்கே மசூதி கட்டினால் பிரச்சனை வரலாம் என்று புறாக் கூண்டு போல் இருப்பிடங்கள் கட்டி வாடகை வசூல் செய்யும் முஸ்தபா. அன்றும் இன்றும் இதுதான் சமுதாயச் சூழல்.

ஆரிய கவுடா ரோடில் 100 ரூபாய் வாடகையில் குடித்தனம் வருகிறார்கள். நல்ல மனிதர்கள். கல்யாணமாகி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான பிறகும், பிஏ படித்த ஊர் சுற்றும் ஊதாரி மூர்த்தி, அவரது தந்தை தாய் அவரது மனைவி எல்லோருமே இவரிடமும் இவர் மனைவியிடமும் தன்மையாகப் பழகுகிறார்கள். மூர்த்தியின் அப்பா எத்தனைக்கெத்தனை பணத்தில் கெட்டியோ, அத்தனைக்கத்தனை மூர்த்தி ஊதாரி. ஒருமுறை மூர்த்தியிடம் இவர் கைமாற்றாக ஐம்பது ரூபாய் வாங்குகிறார். அதை மூர்த்தியும் திருப்பி கேட்கவில்லை. இவருக்கும் நினைவில்லையாம்! எழுதும் போது வரும் நினைவு பணத்தை திருப்பிக் கொடுப்பதில் அவருக்கு இல்லை என்பது மனித குணத்தை எப்படிக் காட்டுகிறது பாருங்கள்?

வாடகை வீட்டில் சுமுகமாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை மாறிப்போகிறது. வீட்டுக்காரர் வாடகையை 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கு ஏற்றித் தருமாறு கேட்கிறார். இவர் அடாவடிக்காரர் இல்லை. வீட்டு சொந்தக்காரர்கள், கண்ணீர் மல்க குடித்தனம் இருப்பவர்களை கெஞ்சிக் கூத்தாடி காலி செய்ய வைப்பதை பார்த்திருப்பவர். இரண்டு விதமும் உலகத்தில் உண்டு அல்லவா? ஒன்றில் வீட்டுக்காரரின் கை ஓங்கி இருக்கும், மற்றொரு விதத்திலோ குடித்தனக்காரர் கை ஓங்கி இருக்கும்.

நம் சாமி, சாது பாவம். கோடம்பாக்கத்தில் ஒரு பங்களா அவுட் ஹவுஸ் 80 ரூபாய் வாடகையில் கிடைக்கிறது. வீட்டுக்கு சொந்தக்காரர்கள் ஒரு அம்மாவும் காலேஜில் படிக்கும் அவரது மகளும். அப்பா இல்லை. தோட்டம், மகிழ மரம், வாசனையான காற்று, கண்களில் தென்படாத சாக்கடை என்று ரம்யமாக இருக்கிறது. ஆரிய கவுடா ரோட்டில் இருந்து கிளம்பி வரும் அழகை மிகக் கூர்மையாக எழுதியிருக்கிறார். தள்ளுவண்டியில் சின்ன கோத்ரேஜ் பீரோ, நான்கு நாற்காலிகள், நடுத்தரமான மேஜை, கட்டில் மெத்தை இத்யாதிகள்.

மாமியார் ஊரிலிருந்து அனுப்பிய ஊறுகாய் ஜாடிகள், வடாம், அப்பளம் இருக்கக்கூடிய பிஸ்கட் டின்கள் இவற்றை மட்டும் இவர் மனைவி தானாகவே எடுத்து வண்டியில் வைக்கிறார். இங்கே எழுத்தாளர் நன்றாகக் கிண்டல் அடிக்கிறார், வண்டிக்காரன் தொட்டுவிட்டால் இந்த சாமான்களை உபயோகப்படுத்த முடியாமல் போய்விடுமே என்று. பிறகு சமாளிக்கும் விதமாக அவள் ஆசாரங்களில் நான் தலையிடுவதில்லை என்று வேறு சொல்கிறார்.

மேற்கு மாம்பலத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு கிளம்பும்போது அனைத்து பெண்களும் அதாவது பழகிய அனைவரும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். அடுத்த மாதம் கல்யாணமாக இருக்கும் பக்கத்து வீட்டுப் பெண் சரசு, ஒரு எம்பிராய்டரி டிசைனை காண்பித்து இதைப்போல் எனக்கு நீங்கள் போட்டு தர வேண்டும் மாமி என்று இவர் மனைவியிடம் கேட்கிறாள். இவர் நினைக்கிறார், பெண்கள் எப்படி எல்லாம் நட்பும் அன்பும் கொண்டு குறுகிய காலத்திற்குள் நெருங்கி விடுகிறார்கள், பிரியும் போது கண்ணீர் சிந்துகிறார்கள், ஆனால் ஆண்கள் அப்படி இல்லை  அல்லவா?

புது வீட்டில் எல்லா சாமான்களையும் அதனதன் இடத்தில் வைத்து சரி செய்ய ஒரு வாரம் ஆகிறது.

ஒரு சனிக்கிழமை அன்று நான்கு தினுசு காய்கறிகள், இரண்டு சீப்பு மலைப்பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்புவதாக நினைத்து மேற்கு மாம்பல வீட்டிற்கு வந்து விடுகிறார். தன்னிச்சையாக தன் அறைக்குள்ளும் நுழைகிறார். அங்கே ஒரு பெண்ணைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போகிறார், தான் பெரிய தவறு செய்து விட்டோமோ என்று கலங்கிப் போய் ஏதோ உளறி விட்டு வந்து விடுகிறார். ரயில் பாதை ஓரமாக நடந்து கோடம்பாக்கம் வீட்டிற்கு வந்து விடுகிறார். மனைவியிடம் தன் அசட்டுத்தனத்தைச் சொல்ல தயக்கமாக இருக்கிறது.

அவருக்குப் பிடித்த இரண்டு தினுசில், அவர் மனைவி சமைத்திருக்கிறார். பிறகு நல்ல காற்று வரும் அறையில் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நள்ளிரவு செல்லும் மின்சார வண்டியும் கடந்து விட்டது. அவர் முந்தைய வீட்டுக்காரர்களைப் பற்றி சொல்லும்போது அவரது மனைவி சொல்கிறார்:”நாம் வாடகை வீட்டில் வாழ்நாளைக் கடத்துபவர்கள். அவர்களைப் பற்றி நினைத்து என்ன பயன்? இன்று இங்கே.” மனைவி தூங்கி விடுகிறார். இவர் நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறார்.

நோ ப்ரோக்கர் டாட் காம் யுகத்திலும் பல நடுத்தர வர்க்கத்தினர் இந்த வீடு தேடும் படலத்தில் பலவித அனுபவங்களை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பணத்தாசை, அந்த இருப்பிடங்கள் மனிதர்களின் வாழ்விற்கு ஏற்றதா என்ற சிந்தனையே இல்லாமல் இருப்பது, சொத்து வரி ஏற்றி விட்டார்கள் என்று பொய் சொல்லி வாடகையை ஏற்றுவது, வாங்கும் வாடகையில் பாதித் தொகைக்கு மட்டுமே ரசீது கொடுப்பது, இருப்பவனுக்கு இடம் சொந்தம் என்று வழக்காடும் குடித்தனக்காரர்கள், அன்னையும் பிள்ளையுமாய் பாச மழை பொழிந்து பழகக் கூடிய பெண்கள், வசிப்பிடம் மாறுகையில் மனதை அன்றைய இருப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும் தன்மை, அனைத்தையும் ஒரு அழகிய ஓவியமாக சிறுகதையில் காட்டிவிடுகிறார் எழுத்தாளர். அவலச் சுவை இல்லை, சற்று நகைச்சுவையான எழுத்து கதையை நெருங்க வைக்கிறது. பழைய வீட்டு நினைவுகளின் சுவடேயில்லாமல் இருக்கும் பெண்களைப் பற்றிய ஆணின் சிந்தனையையும் இந்தக் கதையில் இவர் யதார்த்தமாகச் சொல்கிறார்; மனித குணத்தை மனோ தத்துவத்தை சரளமாகக் காட்டுகிறார்.