
வங்க மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து சாதனை படைத்த த நா குமாரசாமி அவர்கள் தத்துவம் உளவியல் இவற்றைப் படித்து பட்டம் பெற்றவர் என்பதற்கு உதாரணமாக திகழும் கதை இந்தக் கதை .’கதைக்குக் கிடைத்த விஷயம்’ என்ற இந்தக் கதைக்குக் கிடைத்த விஷயத்தை ஒரு எழுத்தாளனின் உளவியல் சமாதானமாகக் காட்டி எழுதி இருக்கும் விதத்தில் த நா குமாரசாமி அவர்கள் மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து மாறுபடுகிறார்.
சிக்மன்ட் ஃப்ரைடின் ஒடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் .அதேபோன்று இது ஒரு எழுத்தாளனின் வைஃப் காம்ப்ளக்ஸ் என்று இந்தக் கதையை எடுத்துக் கொள்ளலாம் பணத்திலும் புகழிலும் உச்சத்தை அடைந்த ஒரு எழுத்தாளர் கற்பனை வறண்டு போன நிலையில் அடுத்து எழுதும் கதைக்கு விஷயம் தேடி அலைந்து கொண்டிருக்கும் பொழுது அவரது மனைவியால் ஏற்படும் ஒரு அனுபவத்தில் மூழ்கி அதையே கதையாக வடிக்க நினைக்கும் கதை தான் இந்த கதை.மகளிர் மனதைக் குடைந்து பார்த்து எழுதுபவர். இரு பொருள் பட எழுதுபவர் . காலத்திற்கு ஏற்ப, பத்திரிகைகளின் தரத்திற்கு ஏற்ப தன் எழுத்தை மாற்றி காசு பார்ப்பதில் குறியாக உள்ளவர் என்று அந்த எழுத்தாளர் சதானந்தனைப் பற்றி பல உதாரணங்களோடு விளக்கி உள்ளார். அப்படியே அவரது மனைவி ஆனந்தாவையும் இங்கே அறிமுகப்படுத்துகிறார்.
ஆலங்காத்தால் சந்தில் இருந்து அடையாறு காந்தி நகரில் ஒரு பங்களாவில் இடம் தந்தவள் எவள் .இரண்டே வேளை தண்ணீர்க் காப்பி அருந்தி இருந்த ஏழை எழுத்தாளனுக்கு அரை மணிக்கொரு தரும் போர்ன் வீட்டா தந்து மூன்று வேளை களில் ஹார்லிக்ஸ் தந்து , எழுதி அலுத்துப் போய் மஞ்சத்தில் சாயும் சமயம் காய் ச்சின பசும்பாலும் பாதாம் பருப்பும் தந்து ஒரு மனிதனாக்கியவள் . இந்த சந்தர்ப்பத்திற்கு எந்த உடை அணியத் தருவது, சிதறி கிடக்கும் புத்தகங்களை எந்த முறையில் ஒழுங்காக வைப்பது , புறப்படும் போது பர்ஸில் பணம் இருக்கிறதா என்று கவனிப்பது, எந்த பேங்கில் எந்த செக்கை கட்டுவது, எந்தக் காலில் எந்தச் செப்பலை போட்டுக் கொள்வது இதைப் போன்ற அற்ப விஷயங்களை கூட அவருக்கு ஞாபகப்படுத்தும் அவள் என்று அவரது மனைவி ஆனந்தாவின் பெருமைகளைப் பற்றி சொல்கிறார் .
அவள் தன்னிடம் வந்து சேர்ந்த நினைவுகளையும் பகிர்கிறார் சதானந்தன். ‘ஒரு காலத்திலே அவரது ஒரு கதை பலவிதமான கருத்துப் பரிமாற்றங்களை உருவாக்கி அந்தக் கதையின் மூலம் வந்து சேர்ந்தவள் தான் இந்த ஆனந்தா’ என்று சொல்லிவிட்டு அந்தக் கதையைப் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது.
.அந்தக் கதையின் பெயர் ‘மனத்திரை’. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது வலதுசாரி எழுத்து விமர்சனங்கள் ‘இது போன்ற ஒரு கதையை வரைந்தவர் தம் மனதின் அழுகி இருக்கும் ஒரு பகுதியை வெளிக்காட்டுகிறார் ‘ என்று புறக்கணித்து ‘ அது ஒரு அருவருப்பைப் தரும் விகார சிருஷ்டி ‘என்று தாக்க இடதுசாரி ஆய்நர்களோ ‘ அது மிக உயர்ந்த இலக்கிய படைப்பு. நம் சமூகத்தில் காணக்கூடியது. இதுபோன்ற சமூகப் பிரச்சனைகளை பற்றி அவர் மேலும் எழுத வேண்டும்’ என்று பாராட்ட அதன் மூலம் அவர் நாடறிந்தவர் ஆகிவிட்டார்.
எத்தனையோ பெண்ணுள்ளங்கள் காதல் புயலில் சிக்கி திசை தடுமாறி இறகு முறிந்த பெண் பறவைகளாக அந்த ‘மனத்திரை ‘ என்ற கதையை தன் கட்சிக்காக வாதாடும் சிறந்த நண்பனாகக் கண்டுபிடித்தனர் . அதுபோன்ற பறவைகளில் ஒன்று தான் அவரது வாழ்க்கை துணையாக வந்த ஆனந்தா’ என்று அவர் மனைவியைப் பற்றி ஒரு அறிமுகம் சொல்கிறார். இவரது பெண்ணியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெண்ணாக அவளைத் தெரிய வருகிறது. .
இது பின்பு வரும் நிகழ்வுகளுக்கு ஒரு அடித்தளமாக அமைகிறது
‘அவருக்கு எது எப்போது தேவை என்பது ஆனந்தாவுக்கு விரல் நுனிப் பாடம் .அவருடைய நாடித்துடிப்பின் அளவு எந்த சமயத்தில் மாறும் என்பதெல்லாம் அவளுக்குத்தான் தெரியும் என்று அவளின் மன நலன்களைப் பற்றியும் ஒரு கோடி காட்டப்படுகிறது.
இப்படிப்பட்ட அவளை அவர் நெருங்கிக் கொஞ்சியதெல்லாம் ஒரு ஆறு மாத காலமே .அதற்குப் பின் எழுத்தில் மூழ்கி இவளைப் புறக்கணிக்கிறார்.
ஒரு முறை அவள் மேலே வந்து அவரிடம் பேச விழைய , சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அவரைத் திருப்ப , விளக்கு பட்டனை அணைத்தவுடன் அவர் நிமிர்ந்து திருவாய் மலர்ந்து ‘இருட்டில் யார் ஆனந்தாவா . மணி ஆகிறது தூங்க வில்லையா ‘ பேதை பயங்கரமாகச் சிரித்து ‘வெளியே தெரிகிறதே அது என்ன’ ‘ஏன் பால் நிலா’ ‘எதற்காக’ ‘காதலில் களிப்பதற்காக ‘ ‘நாம் யார் ‘ ‘கணவனும் மனைவியும் ‘ ‘காதலின் வலி’ ‘காதல் போய் கவலை வந்து விட்டது ‘
இதற்கு மேல் பேச்சு இல்லை. அவள் எழுந்து போய் விட்டாள் . அவருக்கு தாகூரின் ‘கச்ச தேவயானி’ கவிதை நினைவுக்கு வந்தது. தம்முன் சிறிது நேரத்துக்கு முன் வந்து நின்ற ரத்தமும் மாமிசமும் ஆன கையால் அள்ளக்கூடிய கவிதை போன்ற ஒரு வஸ்து அவர் வரைக்கும் சிந்தனை ஆலையில் ஒரு சிறு குமிழி என மாறி மறைந்து போய் விட்ட து. காலையில் எழுப்புகிறாள் . வழக்கம் போல் தனது பணிவிடைகளைத் தொடர்கிறாள் , உள்ளே பொங்கும் காதல் தவிப்பை அடக்கிக் கொண்டு .
இப்பொழுது சிறிது காலமாக எழுத விஷயம் இல்லாமல் கைத்துடிப்பு அதிகம் ஆகி விட்டது என்று அவரது தற்சமய நிலை சுட்டிக் காட்டப்படுகிறது . கதை எழுத விஷயம் தேடி அவர் மனம் அலை பாய்ந்து கொண்டு இருக்கிறது . தன்னையே ‘ நீ யார் ‘ என்று கேட்கும் நிலைக்கு அவர் ஆளாகி விடுவாரோ என்ற அச்சத்தில் ஆனந்தா ஒரு விசித்ரச் சூழ்நிலையை உருவாக்கி வந்தாள் . அவரது நாடித் துடிப்பைத் தெரிந்தவள் அல்லவா.
இப்பொழுது ஒரு காட்சி அவர் படியேறி மாடிக்கு அவரது ‘தந்த கோபுரம்’ என்று அவர் தனியறை செல்லும் பொழுது கீழறையில் அவர் இமைக்கும் நேரம் கண்டது . ஆனந்தா வுடன் ஒரு இளைஞன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி . அவன் இவரிடம் அவர்களுடைய கல்லூரி ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை கேட்டு வந்திருக்கும் இளைஞன். இவரோ என்ன கட்டுரை கதை எழுதினாலும் அதற்கு பணம் வாங்காமல் எழுதுவதில்லை அதுவும் பிரபல வார இதழ்களுக்குத் தான் எழுதுபவர் . இப்படிப்பட்ட அவரிடம் அவன் கட்டுரை வாங்குவதற்கு அவர து மனைவியான ஆனந்தாவை வளைய வருகிறான். . இவரை நெருங்குவதற்கு அவளுக்கு பிடித்த ஸ்நோவோ சினிமா டிக்கெட்டோ புது பிளவுஸ் பீசோ இப்படி அவள் விரும்பியவற்றை என்ன விலையானாலும் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
ஆனந்தாவும் அந்த இளைஞன் மதனகோபாலுக்கு உறுதி அளித்திருக்கிறாள்
ஆனந்தா , ஒரு முறை இவர் தனது அறையில் அமர்ந்திருக்கும் பொழுது திடீரென்று அவனை மேலே அனுப்பி விடுகிறாள் . ‘ உனக்கு எழுதுவதால் என்னுடைய படைப்பும் அழிந்து போய்விடும்’ என்று சொற்பொழிவை எடுத்து விட்டு அவனை வெளியே அனுப்பி விட ஆனந்தா மேலே வந்து ‘அந்தப் பிள்ளையாண்டான் தினமும் கெஞ்சுகிறான் ஏதாவது எழுதிக் கொடுக்கக் கூடாதா’ என்று கேட்கிறாள் .
இனி வரும் பேச்சுக்களும் காட்சி களும் கதையின் கிளைமாக்ஸை நோக்கி சதானந்தன் , ஆனந்தா இருவரின் உணர்வுகளையும் ஒரு உளவியல் ரீதியாக வெளிப்படுத்தும் த நா குமாரசாமி அவர்களின் எழுத்து .
‘அவன் தினசரி வந்து நச்சரிக்கிறான் என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கிறான்’ என்கிற அவளுக்கு அவர் பதில் ‘ அதனால் என்ன உனக்கு பொழுது போனாற் போல் இருந்திருக்கும்’ என்று சொல்கிறார் .இரு பொருள் பட சதானந்தத்தின் பேச்சின் தோரணை சென்றது. ஆனந்தாவு க்கு எதனாலோ மார்பு தித்திக் கெ ன்று அடித்துக் கொண்டது . என்னவோ தப்பு செய்து கையும் களவுமாக தான் அகப்பட்டுக் கொண்டது போன்ற ஒரு விதிர்ப்பு தோன்றியது.
‘உனக்கேன் அந்த குறை .எழுதிக் கொடுத்து விடுகிறேன். எனக்குஒரு தீவிர உணர்வு ஏற்படும் போதுதான் எழுதவரும்’ என்று சொல்லும் அவருக்கு அந்த தீவிர உணர்வு ஒரு நாள் ஏற்படுகிறது. ஒரு நாள் மாலை மாடிக்குச் செல்லுகையில் அவர் கண்ணில் பட்ட அந்தக் காட்சி . உடலோடு உடல் உரச அவர்கள் நெருங்கிப் பழகுவது அவர் மனதை உறு த்துகிறது.
அவரது மனம் பேசுகிறது . ‘ ஆனந்தா ஐந்து வருஷத்துக்கு முன் அவரை உள்ளூரக் காதலித்தவள் . அவருடைய இலக்கிய ரசனைக்குப் பரிசாகத் தன்னையே தந்தவள். இப்போது தனியாகத் தவிப்பவள். அதனால் என்ன அவளும் அவ்விளைஞனும் பழகுவதில் என்ன தவறு .மனித உள்ளங்கள் தானே அவற்றின் ஆழத்தை யாராலும் அறிய முடியாது . அதன் போக்கு விசித்திரமானது அதைத் தடுக்கக்கூடாது ‘என்ற சிந்தனை அவரிடம். இப்படி நினைக்க நினைக்க அவர் முன் ஒரு புது உலகம் விரிந்தது .
ஆனந்தா அவர் கற்பனையைக் கலைத்து ‘ என்ன உங்களுக்கு இப்போதெல்லாம் உங்களுக்குள்ளே பேசிக்கொள்கிறீர்கள் ‘ என்று கூந்தலின் ஒரு கால் மார்பிடை அழகாக அவிழ்ந்து புரள கணவனின் முக வாயைத் தடவி அவரை ஊடுருவப் பார்த்தாள் . ஏழு எட்டு மாதங்களாக ஒரு புதிய மனோ தத்துவத்தை வைத்து அபூர்வமான கதை ஒன்று உருவாக்க வேண்டும் என்ற திணறிய சதானந்தத்தின் மனதில் எண்ணம் ஊறிக் கொண்டிருந்த து. மாடிப்படி ஏறும்போது கண்ட காட்சி அவருக்கு ஒரு கருப்பொருள் தந்தது. இதை அவரால் எப்படி அணுக முடியும் .அவரது பேனா முனை துடித்தது. ‘எழுத்தாளன் தனது வாழ்க்கையில் இருந்தவாறே வாழ்க்கையில் பற்றற்று இருப்பவன் ‘ என்று தனது எண்ணத்திற்குச் சமாதானமும் செய்து கொள்கிறார் சதானந்தன்.
ஆனந்தா அவரை வெகு நேரம் வியப்புடன் நோக்கினாள். சிரித்தாள் . அந்த சிரிப்பில் ஆசிரியர் சொல்வது என்ன. முன்பே அவரின் நாடித்துடிப்பை அறிந்தவள் அவள் என்று ஆசிரியர் நமக்கு கோடி காட்டி உள்ளாரே. இது சதானந்தத்தின் கற்பனை வறட்சியைப் போக்க ஆனந்தாவும் சேர்ந்து செய்யும் ஒரு நாடகமா அல்லது புகழிலும் பணத்திலும் மூழ்கிய மயக்கத்தில் ஒரு எழுத்தாளனின் மனக் கோளாறுகள் இது போன்ற விபரீதக் கற்பனைகளை உருவாக்குகின்றனவா ‘ என்று நம்மைச் சிந்திக்க வைத்து கதையை இவ்வாறு முடிக்கிறார் த நா குமாரசாமி.
. அவள் சிரித்தாள். அந்த அலையோசை அவருக்கு ஒரு வேதனையைத் தந்தது ஆனால் அது உடனே அவரை ஒரு மையலுக்கு ஆழ்த்தியது. அவர் எழுத்தில் மூழ்கிப் போனார்.
அவருக்குக் கதை எழுத ஒரு விஷயம் கிடைத்தது நமக்குப் புரிகிறது .

நல்ல கதை . அதை நாகேந்திரபாரதி சொல்லிய விதமும் /எழுதியதும் சிறப்பு .
Thank you Ji
Nagendra Bharathi