
மெய்மைத் தொலைக்காட்சி (Reality TV ) உண்மையிலேயே அதில் கலந்துக்கொள்ளும் மக்களின் இயல்பான நடவடிக்கைகளையும், குணாதிசயங்களையும் வெளிப்படுத்துகிறதா ? இல்லையென்றே சொல்ல வேண்டும்.
அவை முதன்முதலில் வெளிவந்தபோது, அவைகளின் புதுமையான வடிவத்தினால் (format ), ஒரு புதிய வகை கதை சொல்லல் போன்ற நிகழ்ச்சி நகர்வுகளால் பெரும் கவர்ச்சியுடன் காண்போரைக் கட்டி இழுத்தன. பழகிப் போன சினிமாக்களுக்கும் , புளித்துப் போன மெகா தொடர்களுக்கும் ( soap operas ) ஒரு மாற்றுப் போல தோற்றம் தந்தன.
மெய்மை நிகழ்ச்சிகள் எதுவுமே, இயல்பான, நடைமுறை வாழ்வில் அமைந்த சுற்றுச் சூழலில் ( natural environment ) நடைபெறுவதில்லை. அவை அனைத்துமே, ஒரு “கட்டுப்படுத்தப்பட்ட” (controlled , fabricated environment ) சூழலுள்ளேயே நடைபெறுகின்றன. உதாரணமாக, தனியாக அமைக்கப்பட்ட ஓர் தீவு, ஒரு பெரும் பங்களா அல்லது மாளிகை, செயற்கையாக அமைக்கப்பட்ட ஒரு ஸ்டூடியோ போன்ற இடங்களிலேயே பங்கேற்பவர்கள் ” நடிக்க சொல்லப்படுகிறார்கள் “.
பங்கேற்பாளர்கள் எப்படி ஒவ்வொரு புதிய சூழலையும் ” பரபரப்பாக்கவேண்டும் ” என்று தொடர்ந்து பின்னணிக் குரல்களால் (இயக்குனர் குழு ) வழிநடத்தப்படுகின்றனர். அவர்கள் விரும்பிய ஆடைகளை அவர்கள் அணிய முடிவதில்லை; பெரும்பாலான சமயங்களில் கேமரா படப்பிடிப்பிற்குத் தகுந்த “பளிச்சென்ற
” உடைகளை தயாரிப்பாளர்களே முடிவு செய்து அளிக்கின்றனர். தங்களின் நடவடிக்கைகள் மூலம் எவ்வாறு “டிராமா ” உருவாக்க வேண்டும் என்று தூண்டப்படுகின்றனர் . அமெரிக்காவிலும், பிரிட்டன் போன்ற நாடுகளிலும் புகழ்பெற்ற மெய்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தவர்கள், மேற்சொன்ன விஷயங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒரு இயல்பான சமூக சூழலில் வாழ்வதற்கும், ஒரு செயற்கையான சூழலில் “நாம் தேர்ந்தெடுக்காத ” ஒரு மிகச் சிறிய சமூகத்தின் மனிதர்களுடன் (நிகழ்ச்சியில் ) வாழ்வதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன. நிஜ வாழ்வில், எனது பக்கத்து வீட்டுக்காரரை எனக்குப் பிடிக்கவில்லை என்றால் , நான் ஒதுங்கி விட இயலும், வேறு இடத்திற்குக் கூட மாறி விட இயலும். ஆனால், “மெய்மை” சூழலில், அவ்வாறு ஒருவர் வெளியேற இயலா சூழலில், அவரது எதிர்வினைகளும், நடவடிக்கைகளும் நிகழ்ச்சியில் தொடர்ந்துப் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலாலேயே இயக்கப்படுவதால், செயற்கையான எதிர்வினைகளே சாத்தியப்பட வாய்ய்புண்டு.
ரியாலிட்டி டீவியை ” Shame TV ” என்று ஒரு உளவியல் அறிஞர் குறிப்பிட்டார் . ஏனெனில், பங்கேற்பாளர்கள் மற்ற பங்கேற்பாளர்களை அவமானப்படுத்தும், உதாசீனப்படுத்தும் காட்சிகள் அதிகம். அது, பார்வையாளர்களுக்கு ஒரு குரூர (அல்ப )சந்தோஷத்தை அளிக்கிறது. உளவியல்ரீதியாக, அவர்களின் ஆழ்மன குரூரத்தைத் திருப்திப்படுத்துகிறது (schadenfreude).
பிரபலமான Big Brother நிகழ்ச்சியில், பாலுறவு சம்பந்தமான காட்சிகள், வசனங்கள், இனரீதியான தாக்குதல்கள், பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் தூக்கிக்கொண்டு (நிஜ ) போலீஸ் வந்து நடவடிக்கை எடுப்பது எல்லாம் நடந்தேறியது.
சில நாட்களுக்கு முன்னர் முடிந்த ” Love Island ” நிகழ்ச்சியின் மூன்றாவது வரிசை (third series ), பிரிட்டனின் ITV2 சேனலில் ஒளிப்பரப்பானபோது, நாடே ஏதோ கட்டுண்டது போல நிகழ்ச்சியை மெய்மறந்துக் கண்டது. இது வரை வெளியான மெய்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிகப் பிரபலமானதாகவும், வருமானத்தை ஈட்டியதாகவும் இந்நிகழ்ச்சிக் கருதப்படுகிறது.
இதுப் போன்ற நிகழ்ச்சிகளின் பெரும் தாக்கம், சிந்தனையாளர்களை மிகவும் கவலைக் கொள்ள செய்கிறது. கோடிக்கணக்கான மக்களின் ஆழ்மனங்களை மிக நுண்ணிய அளவில் பாதித்து , அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மறைமுகமாகத் தீர்மானிக்கும் உளவியல் சக்தி கொண்டிருப்பதால், சமூகப் போக்குகளை விரும்பத் தகாத திசைகளில் செலுத்தும் இந்நிகழ்ச்சிகளின் தேவைக் குறித்த அரசியல் மிகவும் ஆழமானது.
நிகழ்ச்சி நிகழ்வுகள் அவை நடக்கும் கால வரிசையிலேயே காட்டப்படுவதில்லை. தயாரிப்பாளர் /இயக்குனரின் திட்டத்திற்கு ஏற்ப, வெட்டி ஒட்டி எடிட் செய்யப்படுகின்றன. நாடகத்தன்மையை கூட்டும் ஒலிகள் நுழைக்கப்படுகின்றன. Prompting எனப்படும் வசனத் தூண்டுதல்கள் வழிநடத்துகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னணியில் தமிழ்ச் சூழலில் சில சமூக வலைத்தளங்களில் நிகழும் அறிவுஜீவி உரையாடல்கள் – அதாவது, அந்த நிகழ்ச்சி மேட்டுக்குடி வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறதா, இடதுசாரி/வலதுசாரி, அறிவு சார்ந்ததா /இல்லையா போன்ற வாதங்கள் எல்லாம் பொருளற்றவை. அத்தகைய நிகழ்ச்சிகளின் ஒரே நோக்கம் முடிந்த அளவு லாபம் அள்ளிக் காட்டுவதுதான். ஆழ்ந்த சிந்தனைகளுக்கோ , சமூக அக்கறைகளுக்கோ அத்தகைய நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் மனதில் இடம் இல்லை. இதில் நாம் அக்கறைக் கொண்டு கவலைப்படவேண்டியது எல்லாம், இத்தகைய மெய்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த வகையில் அதைக் காண்போரின் மனதையும் வாழ்வையும் பாதிக்கிறது, எத்தகைய சமூக மதீப்பீடுகளை ரகசியமாக நம் மேல் திணிக்கிறது என்பதுதான்.
பொய்யான கட்டமைப்புகள். பொய்மையான நிகழ்வுகள். பொய்மையான நடிகர்களின் பொய்மையான எதிர்வினைகள். யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்காத சூழ்நிலைகள். மெய்மைத் தொலைக்காட்சியில் என்னன்னவோ இருக்கின்றன. மெய்மையைத் தவிர.
