நானும் நீயும்/ ஜெயா சேகர்

மழைத் தூறலில் தேன் சிந்துதே வானம் என்று பரவசமாய்ப் பாடி ஆடும் நான்

காய்ந்த துணிகளை பத்திரமாய்ப் பாதுகாக்கும் நீ

எண்ணிலடங்கா நண்பர்கள் எனக்கு

எண்ணி இருவர் உனக்கு

அழகை ஆராதிக்கும் நான்

பயன்பாடே அளவுகோல் எனும் நீ

உறவுகளைக் கொணடாடும் உள்ளம் எனக்கு

அதை சலித்துச் சேர்க்கும் பக்குவம் உனக்கு

பறவைகளின் அசைவை அழகை ரசிக்கும் நான்

ஓடிச் சென்று உணவளித்து மகிழும் நீ

அசைவம் உன் உயிர்
நானோ சுத்த சைவம்

புத்தகம் படிப்பதும் ரசித்து மகிழ்வதும் நான்

அதற்கு அட்டையிட்டு கையில் தரும் நீ

காபியில் குளிப்பவள் நான்

தேநீரை சுவைப்பவன் நீ

பஜன் என் சுவாசம்
கர்மம் உன் மூச்சு

பிணக்குகள் , சீண்டல்கள் கொஞ்சல்கள்
வண்ண மயமாய்ச் சென்றது நம் பயணம்

இடையில் நீ இறங்கி விட்டாய்

நானும் இணை பிரிந்த உன் வளர்ப்புப் புறாவும்
ஒற்றையாய் பால்கனியில்

10 Comments on “நானும் நீயும்/ ஜெயா சேகர்”

Comments are closed.