லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
——-
28
ஆணை அறிந்து பெண்ணை மனதில் இருத்து
—-
ஆணை அறிந்து பெண்ணை மனதில் இருத்து
உலகின் பள்ளத்தாக்கு வழி ஓடும் சிற்றாறாய் இருப்பதற்கு
உலகின் பள்ளத்தாக்கு வழி ஓடும் சிற்றாறாய்
நிலைபேறுடைய அறம் உன்னைப் பிரியாதிருக்க
நீ குழந்தைமை நிலைக்குத் திரும்பிவிடு
வெள்ளையை அறிந்து கறுப்பை வைத்துக்கொள்
உலகின் முன் மாதிரியாய் இருப்பதற்கு
உலகின் முன் மாதிரியாய்
நிலைபேறுடைய அறம் மாறாதிருக்க
நீ முடிவின்மைக்குத் திரும்பிவிடு
கீர்த்தியை அறிந்து இழிவானதை வைத்திரு
உலகின் ஒரு பள்ளத்தாக்காக
நிலைபேறுடைய அறம் போதுமானது
தனிப்பட்டதை அறிந்து பொதுமுறையானதை வைத்திரு
உலகை அதன் இயல்பில் ஏற்றுக்கொள்
நீ உலகை அதன் இயல்பில் ஏற்றுக்கொண்டால்
தாவோ உன்னுள் ஜோதிமயமாய் ஒளிரும்
நீ உன்னுடைய ஆதி தன்னிலைக்குத் திரும்புவாய்
உலகு வெறுமையிலிருந்து உண்டாக்கப்பட்டது
மரத்திலிருந்து கடைந்தெடுத்த பாத்திரங்களைப் போல
குருவானவர் பாத்திரங்களை அறிவார்
இருப்பினும் மரத்தையும் வைத்திருப்பார்
அவ்வாறாகவே அவர் எல்லாவற்றையும் பயன்படுத்த முடியும்
29
உலகை மேம்படுத்த விரும்புகிறாயா?
——
உலகை மேம்படுத்த விரும்புகிறாயா?
அதைச் செய்ய முடியுமென நான் நினைக்கவில்லை
உலகம் புனிதமானது
அதை இன்னும் மேம்படுத்த முடியாது
நீ அதில் தலையிட்டால் அதை நீ கெடுத்துவிடுவாய்
நீ அதை ஒரு பொருளைப் போல கையாண்டால் நீ அதை இழந்துவிடுவாய்
முன்னால் இருப்பதற்கு ஒரு கால நேரம் இருக்கிறது
பின் தங்கியிருப்பதற்கு இருப்பதற்கு ஒரு கால நேரம்
இயக்கத்திலிருப்பதற்கு ஒரு கால நேரம்
ஓய்விலிருப்பதற்கு ஒரு கால நேரம்
வீரியமாயிருப்பதற்கு ஒரு கால நேரம்
களைப்படைந்திருப்பதற்கு ஒரு கால நேரம்
பாதுகாப்பாய் இருப்பதற்கு ஒரு கால நேரம்
அபாயத்திலிருப்பதற்கு ஒரு கால நேரம்
குருவானவர் அனைத்தையும் அவற்றின் இயல்பில் பார்க்கிறார்
எதையும் கட்டுப்படுத்த முயற்சி செய்யாமல்
அவர் அவற்றை அவற்றின் வழியிலிருக்க அனுமதிக்கிறார்
அவை அவற்றின் வட்டங்களின் மையத்தில் இருக்கின்றன

30
தாவோவின் வழியில் அரசாள்பவர்களுக்கு உதவுபவர்கள்
——
தாவோவின் வழியில் அரசாள்பவர்களுக்கு உதவுபவர்கள்
உலகை ஆயுதத்தால் பலவந்தத்துக்குள்ளாக்குவதில்லை
இந்த விஷயத்தில் வீட்டுக்குத் திரும்பிவிடுவது நல்லது
எங்கே ராணுவம் முகாமிடுகிறதோ அங்கே முட்புதர்கள் வளர்கின்றன
பெரிய போருக்குப் பின்
எப்போதுமே மோசமான வருடங்கள் வருகின்றன
ஆகையால் நல்லது திறன் மிக்கதாய் இருக்கட்டும் , அவ்வளவுதான்
அதை அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படுத்தாமலிருக்கட்டும்
இறுமாப்பு இல்லாதத் திறன்
கர்வம் இல்லாதத் திறன்
கட்டற்ற நுகர்வு இல்லாதத் திறன்
அவசியப்படும்போது மட்டுமே வெளிப்படும் திறன்
அதுவே தாவோவின் வழியில் நீடித்திருக்கும்
தாவோவின் வழியில் இல்லாதது
விரைவில் நின்றுவிடும்
—-