
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் 50 ஆவது நிகழ்ச்சியில் (11.03.2023) ஆற்றிய உரையிலிருந்து ;
கதை இப்படிப் போகிறது ; ஒரு நாள் மாலைப் பொழுதில் ‘செர்வியாகோவ்’ என்கிற அரசாங்க குமாஸ்தா கிலோட்சஸ் டி கார்னிவல் என்ற நாடகத்தை ஒரு பிரபல அரங்கின் பிரதான பகுதியில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பாவம், திடீரென அவனுக்கு ஒரு தும்மல் வந்து விட்டது. ‘அச்’ என்று தும்மினான். தும்மல் எல்லாருக்கும் இயற்கையாக வரும்தானே.. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
தனது தும்மலால் யாருக்காவது இடைஞ்சல் செய்து விட்டோமோ? என்று அறிய சுற்றி ஒரு ரவுண்டு பார்த்தான். அப்போது அவனுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கனவான் தனது கையுறையைத் துடைத்துக் கொண்டு தனக்குத் தானே முணுமுணுப்பதைக் கண்டான்.
செர்வியாகோவுக்கு அவர் யாரென்று தெரிந்து விட்டது. அவர் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் பிரிஸ்ஹலோவ் என்கிற சீனியர் அதிகாரி.
அடடா.. அவர் மீது தும்மி விட்டேனே என வருந்தினான். அதே சமயம் நல்லவேளை தன்னுடைய துறையின் தலைவர் அவரில்லை என்கிற ஆறுதலும் அவனுக்கிருந்தது ; இருந்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினான்.
செர்வியாகோ தன் சீட்டிலிருந்து கொஞ்சம் முன் நகர்ந்து, செருமி அதிகாரியின் கவனத்தை ஈர்த்து, காதருகில் மெதுவாகச் சொன்னான்;
“தாங்கள் மன்னிக்க வேண்டும் தற்செயலாகத் தெறித்து விட்டது”
“பரவாயில்லை..பரவாயில்லை” என்றவரிடம்,
“தாங்கள் மன்னிக்க வேண்டும் – நான் வேண்டுமென்றே செய்யவில்லை”
“தயவு செய்து உட்காருகிறாயா? என்னைக் கொஞ்சம் (நாடகம்) பார்க்க விடுகிறாயா?”
செர்வியாகோ தொடர்ந்து நாடகத்தைப் பார்த்தான். ஆனால், முதலில் பார்த்துக் கொண்டிருந்த பரவசம் கைவசப் படவில்லை. இனம் புரியாத ஏதோ ஒன்று அவனைப் போட்டுப் படுத்தியது.
சரியென்று இடைவேளையில் தயங்கி நெருங்கி, “நான் உங்கள் மீது தும்மி விட்டேன் தயவு செய்து மன்னிக்க வேண்டும் நான் அப்படிச் செய்தது…”
“அட அதுவா? போதும் மறந்துவிட்டேன்.. நீதான் அதை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறாய்!” என்று கீழுதட்டைப் பொறுமையின்றி கடித்தபடி சொன்னார்.
அவர் மறந்துவிட்டார்.. ஆனால் கண்ணுக்கடியில் ஒரு விஷமத்தனம் இருந்தது போலத் தெரிந்தது. ஒருவேளை அவருக்குப் பேச விருப்பமில்யோ? நான் வேண்டுமென்றே செய்யவில்லைதானே? ஒருவேளை இவன் வேண்டுமென்றுதான் செய்திருப்பான் என்று பிறகு நினைப்பாரோ?
வீட்டுக்குச் சென்று தன் மனைவியிடன் நடந்ததைச் சொன்னான்.
அவள் சற்று பயந்து போய்விட்டாள். மன்னிப்பு கேட்டதையும் பேசச் சரியான நேரம் கிடைக்கவில்லையும் என்பதை அறிந்து,
“நீங்கள் நேரில் போய் சமயம் பார்த்து மன்னிப்பு கேட்டுவிடுவதுதான் நல்லது. இல்லையென்றால் பொது இடங்களில் உங்களுக்கு எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை என்று நினைத்துக் கொள்வார்”
மறுநாள் ஹேர்கட் செய்து ட்ரிம் ஆகச் சீருடை அணிந்து கொண்டு அந்த அதிகாரியைப் பார்க்கச் சென்றான் செர்வியாகோ.
அதிகாரியின் வரவேற்பு அறையில் பலர் மனு கொடுப்பதற்காகக் காத்திருந்தார்கள். அவர் ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே வந்தார். பிறகு செர்வியாகோவைப் பார்த்தார்,
“நேற்று அர்காடியாவில் பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் தற்செயலாகத் தும்மி விட்டேன் மன்னிக்க…”
“என்ன முட்டாள்தனம் இது? அளவில்லாமல் போகிறதே.. உனக்கு என்ன வேண்டும்?” என்று சொல்லிவிட்டு, அடுத்த மனுதாரரைப் பார்க்கப் போய்விட்டார்
அவர் தொடர்ந்து பேசாததால், இன்னும் கோபமாக இருக்கிறார் என்று அறிந்த செர்வியாகோவுக்கு முகம் வெளுத்துப் போய்விட்டது. இப்படியே விட்டு விட முடியாது.. அவருக்கு விளக்கம் தந்தே தீர வேண்டும் என்று எண்ணி மனுதாரர் அனைவரும் முடிந்து, அவர் திரும்பும் வரை காத்திருந்தான்.
அறைக்கு வந்தவுடன் திரும்பவும் அவரிடம் சென்று “தங்களைத் தொந்தரவு செய்ய முயல்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், உண்மையாகவே எனக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தைத் துடைத்துக் கொள்ளத்தான்.. தாங்கள் கருணையை நம்பி…”
அந்த அதிகாரி, “என்னை கேலி செய்கிறாயா?” – என்று சொல்லிவிட்டு கதவை அடித்துச் சாத்திவிட்டுச் சென்றார்.
இதில் கேலி செய்ய என்ன இருக்கிறது.. என்று யோசித்தான்.
சரி, ஒரு கடிதம் விரிவாக எழுதி தன் மன்னிப்பைக் கோரலாம், என்று எண்ணி நிறைய யோசித்தான். காகிதங்கள்தான் தீர்ந்ததே தவிரக் கடிதம் சரியாக வரவில்லை.
மறுநாள் அவன் விளக்கம் தர நேரில் மீண்டும் போக வேண்டியதாயிற்று.
“அதிகாரி அவர்களே தங்களை நான் நேற்று தொந்தரவு செய்ய முனைந்தேன்
நீங்கள் சொல்வது போல உங்களை கேலி செய்ய அல்ல நான் தும்பிய போது உங்கள் மீது தெறித்து விட்டதால் நான் மன்னிப்பு கேட்டேன். உங்களைக் கேலி செய்யக் கனவில் கூட நினைக்க மாட்டேன் ; அந்த அளவுக்கு எனக்குத் தைரியம் உண்டா?”
அதிகாரி முகம் சிவந்து உடல் படபடக்கக் கத்தினார்.
“இங்கிருந்து போய் விடு”
அவன் நடுங்கி “என்ன..” என்று வினவ,
காலை ஓங்கி உதைத்துச் சொன்னார் ; “போய்விடு”
செர்வியாகோக்வுக்கு வயிறு கலக்கியது. ஏதும் கேட்காமல் கதவை நோக்கி விரைந்து வெளியே வந்து, தெருவில் தள்ளாடித் தள்ளாடி நடந்து ஒரு இயந்திரம் போல வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். சீருடை கூட கழட்டாமல் சோபா மீது சாய்ந்தபடி இறந்து போனான்.
நன்றி – ஆன்டன் செகாவ் சிறுகதைகள் – தமிழாக்கம் திருமதி.சந்தியா நடராஜன் ; கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டிய தொகுப்பு.
ஆண்டன் செகாவ் சிறுகதை இலக்கியத்தில் கோலோச்சியவர். இன்னொரு புகழ் பெற்ற நாவலாசிரியர் டால்ஸ்டாய்ஸ்’க்கு பிடித்தமான எழுத்தாளர் இவர்.
சம்பவங்களைக் கோர்ப்பதற்குப் பதில் உரையாடலாகக் கதையை நகர்த்திச் செல்வதில் வல்லவர்.
மரபாகச் சொல்லப்படும் கதைகளுக்கு அன்றே மாற்று கண்டவர்.
ஒத்துக்கொள்ளக் கூடிய தீர்வுகளைக் கதையில் சொல்லும் போது எந்தவித அலட்டல் இல்லாமல் சாதாரணமாகச் சொல்பவர்.
‘இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்’ என்ற பாரதியின் வரிகளுக்கான சிறுகதையாக நான் இதைப் பார்க்கிறேன்.
செகாவ் இருந்த காலத்தில் தனது நாட்டிலிருந்த நிலையைக் கதை வாயிலாக subtle ஆகச் சொல்லும் திறன், வியக்க வைக்கிறது. ஒரு சாதாரண விஷயத்திற்கே இத்தனை பயம் இருந்தால்..? என்ற கேள்வியின் மூலம் நிலைமையைத் தெளிவாகக் கதை மூலம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இந்த கதை 1880 – 87 கால கட்டத்தில் எழுதிய இந்த கதை 130 வருடங்கள் கடந்து, இன்றும் படிப்பதற்கு இரண்டு முக்கிய காரணம் ; ஒன்று ஆன்டன் செக்காவ் ரசிகர்கள்! மற்றொன்று கதைகளைக் கொண்டாடும் அழகிய சிங்கர் !!

அருமை