
என் ஆற்றைக்
குளிப்பாட்டிக் கொண்டிருந்தது
இரைச்சலற்ற ஒரு பெருமழை…
அழுக்குகள்
போய்க்கொண்டே இருந்தன…
மழை தன்னை
நிறுத்திக் கொள்ளவே இல்லை…
ஆறும் தன் குளித்தலை
நிறுத்தியபாடில்லை…
தீடிரென வானம்
கருப்பு நிறக் குடையாய் மாற…
வாடைக்காற்று
சட்டென என்னாற்றின்
தலைத் துவட்ட…
தன் குளித்தல் நின்று போன
ஆறு வானைப் பார்த்தது…
நான் இரவாகியதால்
இருளானேன் என்றது வானம்!
சிறுவயசில் கரகரவென
அழுக்கு நீக்கி
என்னை குளிப்பாட்டிய
அப்பா என் பெருமழையே…
குளித்து முடிந்ததும்
உடனே ஓடிவந்து தலைத்துவட்டும்
அம்மா என் தென்றலே…
பிறகு வேறு யாராக
நான் இருந்திருக்க முடியும்?
உங்களுக்குப் பிடித்த
அழுக்கற்று ஓடிய
அழகான சிற்றாறே நான்!
