
“கண்டிப்பா போயிட்டுதான் வரணுமா?”
“ஆமாங்க; ஒரே தெருவு, அதுவும் நம்ம வீட்லேந்து நாலாவது வீடு; போயிட்டுதாங்க வரணும்”.—இது என் மனைவியின் பதில்.
“அவங்க வீட்ல எனக்கு யாரையுமே தெரியாதும்மா. நான் அவரோட பேசினதே இல்ல”
“சரிங்க; இனிமேயும் அவருகிட்டப் பேச முடியாது, தெரியும்ல” என்றாள் சிரித்துக் கொண்டே.
“ஒனக்குச் சிரிப்பா இருக்கு; எனக்குதான் அங்க யாரையும் தெரியாதுன்னு சொல்றேன்ல” என்றேன் பதிலுக்கு.
“ஒங்களுக்கு யாரையும் தெரியாது. நீங்க உண்டு ஒங்க எழுத்து உண்டுன்னு இருப்பீங்க. ஆனா ஒங்கள எல்லாருக்கும் தெரியும். எழுந்திருங்க, சட்டையை மாட்டிக்கிட்டுப் போயிட்டு வாங்க” என்று இறுதியாகச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள்.
விஷயம் இதுதான். நான்காவது வீட்டில் இருந்த ஒருவர் காலமாகிவிட்டார். திடீரென்று மாரடைப்பாம். அவரைத் தெரு வழியாகப் போகும்போது நான் பார்த்திருக்கிறேன். அவரும் பேசமாட்டார். அவருடன் நானும் பேச மாட்டேன். அவ்வளவுதான். அவர் ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். ஒரே பையன். பெங்களுரில் வேலையில் இருக்கிறான். நேற்றிரவு செய்தி அறிந்ததுமே காரில் கிளம்பி வந்துவிட்டான்.
உள்ளே சென்று கேட்டேன். “நீ போயிட்டு வந்திட்டியா? நீ போனாப் போறாதா?
“வீணா விதண்டா வாதம் பேசாதிங்க. நாங்க பொம்பளங்கல்லாம் அப்பறம் போயிக்குவோம். நீங்க போயிட்டு வாங்க.” என்றாள் அவள்.
“நீ சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கற? நான் அங்க யாருகிட்டப் பேசுவேன்? எனக்குதான் அங்க யாரையும் தெரியாதுன்னு திருப்பித் திருப்பிச் சொல்றேன்ல” என்றேன்.
“இதோ பாருங்க; இதெல்லாம் ஒரு கடமைக்கு செய்யறது. தெரியுதோ இல்ல தெரியலயோ போயிட்டுதான் வரணும். தெருவுல யார் யார் வந்தாங்கன்னு நாளக்கிப் பேச்சு வரும். நீங்க சும்மாப் போயி அங்க நின்னுட்டு வாங்க?” என்றாள் அவள் விட்டுக் கொடுக்காமல்.
இந்த சாவு வீட்டுக்குப் போயித் துக்கம் கேக்கறதுன்றது எனக்குச் சுத்தமாப் புடிக்காத ஒண்ணு. அங்க யாரும் பேசாத ஒரு அதீத மௌனம் இருக்கும். நாமும் நம் முகத்தைக் கொஞ்சம் சோகமா வச்சுக்கணும். எல்லாமே நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் “எப்படி ஆச்சு? எப்ப எடுக்கப் போறாங்க? எல்லாரும் வந்தாச்சா?” போன்ற வழக்காம கேக்கற கேள்விங்களக் கேக்கணும். அவங்களுக்கும் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருந்தாலும் மறுபடியும் சொல்லித்தான் ஆகணும்.
கல்யாண வீட்டுக்குப் போயிட்டு வரதுன்றது ரொம்பவும் சுலபமான ஒண்ணு.. முன்னப் பின்னத் தெரியாத வீடல் கூட எப்படியும் பேசறதுக்கு ஒரு ஆளு கெடச்சிடுவான். அவன் கூட ஒக்காந்துக்கிட்டு இருக்கவே இருக்குல்ல; சினிமா அரசியலுன்னு. அப்படி இப்படிப் பேசிக்கிட்டே இருக்கலாம். தாலி கட்டிய உடனே சாப்பிட்டு வந்திடணும். அதுக்கப்பறம் கூட்டமாயிடும். சாப்பிட்டு வந்துட்டா மொய் வைக்கறதுக்கும் கூட்டமில்லாம இருக்கும்.
மேடையில் ஏறி போட்டோ புடிச்சிக்கணும். அதுதான் நாம வந்ததுக்கு அடையாளம். செயற்கையா சிரிச்சுட்டுத் தாம்பூலம் வாங்கிட்டு வந்துக்கிட்டே இருக்கலாம். இதுவும் கூட அழைப்பை வச்சிட்டாங்களேன்ற ஒரு கடமைக்காகத்தான். திருமண வரவேற்பா இருந்தா இன்னும் நல்லது. அங்க போனா ஒருமணி நேரத்துல வந்துடலாம்.
“சரி, போயிட்டே வந்திடுவோம்” என நினைத்துக் கொண்டு சட்டை எடுக்கப் போனேன். மனைவியின் குரல் கேட்டது. ”பழைய சட்டை வச்சிருக்கேன் பாருங்க. அதத் தோய்க்கணும். அதைப் போட்டுக்கிட்டுப் போங்க. போயிட்டு அப்படியே நேரா உள்ள வந்திராதிங்க. பக்கத்து வழியாத் தோட்டத்துக்கு வந்திடுங்க. குளிக்கத் தண்ணிப் புடிச்சு வச்சிடுவேன்” என்றாள்.
வெளியில் வந்து பார்த்தேன். அவர் வீட்டிலிருந்து என் வீடு வரையில் இரு சக்கர வாகனங்கள் நின்றிருந்தன. சற்றுத் தள்ளி தெருக் கடைசியில் நான்கைந்து கார்கள் இருந்தன. பக்கத்து வீட்டு நாகப்பன் வாசலில் நின்றிருந்தார். அவரிடம் கேட்டேன். ”நீங்கப் போயிட்டு வந்திட்டிங்களா?”
அவர், “நான் காலையிலயே போயிட்டு வந்துட்டேங்க. அவசரமா இப்ப கெளம்பிக்கிட்டிருக்கேன். கடலூர் வரைப் போகணும். அதாலத்தான் போயிக் கொஞ்ச நேரம் நின்னுகிட்டு இருந்துட்டு வந்துட்டேன்” என்றார் அவர்.
”என்னாங்க இவ்ளோ கூட்டம் வந்திருக்கு” என்றதற்கு அவர், “செத்துப் போன ஏழுமலை ஜாதகம்லாம் பாப்பாராம். நமக்குதான் ஒண்ணும் தெரியல. எல்லாம் வெளியூர்லேந்து வந்து ஜாதகம் பாக்கறவங்க போல இருக்கு” என்றார்.
அத்துடன் “போங்க, போயித் தலையைக் காட்டிட்டு வந்திடுங்க” என்று கூறினார் அவர்.
“எனக்கு அங்க யாரையும் தெரியாதுங்க” என்றேன்.
அவரோ, “எனக்கு மட்டும் யாரைத் தெரியும்? அவரோட புள்ளயப் பாத்திருக்கீங்கல்ல. அவன்தான் வந்து நிப்பான். அவன்கிட்ட ”எப்படிப்பா ஆச்சு” “எப்ப எடுக்கப் போறங்க?ன்னு கேளுங்க, இல்லனா அவன் தோளை ஆறுதலாத் தட்டிக் கொடுங்க. அப்பறம் வாசலுக்கு வந்து அஞ்சு நிமிஷம் ஒக்காந்துட்டு வந்துடுங்க” என்று எனக்கு வகுப்பு எடுத்தார். அவர் செய்துவிட்டு வந்ததை எனக்குச் சொல்லித் தருகிறார் என்று நினைத்துக் கொண்டு புறப்பட்டேன்.
அந்த வீட்டிற்கே ஒரு சாவுக் களை வந்த்து போலிருந்தது. வீட்டு வாசலில் வரட்டி நெருப்பு வைக்கப்பட்டது புகைந்து கொண்டிருந்தது. இது ஒரு சிலர் மட்டும் போடுவது என்று நினைத்துக் கொண்டேன். நிறைய நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் பாதி காலியாக இருந்தன. இனிமேல்தான் அவற்றை நிரப்ப வருவார்கள் போலும். இறப்பு நிகழ்வுக்கே உரிய துணிப்பந்தல் போடப்பட்டிருந்தது.
மேளம் அடிப்பவர்கள் சற்று ஓய்ந்திருந்தார்கள். மாலையில் எடுக்கும்வரை அடிக்க வேண்டும் அல்லவா? ஒரு ஓரமாக ஒரு நாற்காலியின் மீது எவர்சில்வர் ஃபிளாஸ்க்கில் காப்பி இருந்தது. அதென்னவோ எல்லா இறப்பு வீடுகளிலும் காப்பிதான் வைத்திருக்கிறார்கள். சற்றுத் தள்ளி ஓரமாக இருந்த மற்றொரு நாற்காலியின் மேல் இறந்தவருக்குப் போடப்பட்ட மாலைகள் எடுத்துக் குவித்து வைக்கப்பாட்டிருந்தன.
இறந்தவர் நிறைவான வாழ்வு வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவித்துப் போய்ச்சேர்ந்தால் கல்யாண சாவாம். அவர் வீட்டு வாசலில் வாழை மரங்கள் கூடக் கட்டியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இவருக்கு என்ன குறையோ? வாழைமரங்கள் இல்லை. வாசலில் சில மிதியடிகள் இருந்தன. அவற்றில் கலந்துவிடாமல் என் மிதியடிகளைத் தனியே விட்டு விட்டு உள்ளே சென்றேன்.
உள்ளே கூடத்தில் குளிர்சாதனப் பெட்டியில் அவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். புது வேட்டி சட்டை அணிவித்திருந்தார்கள். மெல்லிய ஒரு பூமாலை போடப்பட்டிருந்தது. நெற்றி நிறைய வீபூதி பூசப்பட்டிருந்தது. ஊதுவத்திகள் எரிந்து கொண்டிருந்தன. அவற்றின் வாசனை குமட்டியது. இதே வத்திகளை நாம் வீட்டில் ஏற்றி வைத்தால் அதன் மணத்தை நுகர முடிகிரது. எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம் என நினைத்துக் கொண்டேன்.
கூடத்தின் மூலையில் ஒரு பெண்மணி உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றி நான்கைந்து பெண்கள் இருந்தார்கள். அப்பெண்மனி இறந்தவரின் மனைவியாக இருக்க வேண்டும். அந்தச் சூழலே தானாக மனத்திற்கு ஓர் அழுத்தத்தையும், சோகத்தையும் கொண்டுவந்து சேர்த்து விடுகிறது.
எல்லோரும் என்னையே பார்ப்பதுபோல இருந்தது. சீக்கிரம் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட வேண்டும்போல இருந்தது. பெட்டியின் கால்பக்கம் போய் நின்றேன். கையெடுத்துக் கும்பிட்டேன். வலப்பக்கமாகச் சுற்றி வந்தேன்.
பக்கத்து வீட்டு நாகப்பன் சொன்னது போல இறந்த ஏழுமலையின் மகன் அருகில் வந்து நின்றான். அவன் தோளைப் பற்றி ஆறுதலாகத் தட்டினேன். “எல்லோரும் வந்தாச்சாப்பா” என்று கேட்டேன்.
அவன் “இல்லீங்க திருப்பூர்லேந்து அத்தை வரணும்” என்றான்.
“கெளம்பிட்டாங்க இல்ல” என்று நான் கேட்டதற்கு, “ஆமா. உளுந்தூர்ப் பேட்டையைத் தாண்டிட்டாங்களாம் என்று பதில் சொன்னான்.
அடுத்த கேள்வியாக “எப்ப எடுக்கறது” என்றேன்.
அவன், “மாலை நாலு மணிக்கு” என்றான். நாகப்பன் சொன்னவற்றைக் கேட்டாகிவிட்டது. பிறகு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
வாசலுக்கு எழுந்து வந்தேன். காலியாக இருந்த நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன். இப்பொழுது நாற்காலிகள் ஓரளவுக்கு நிரம்பத் தொடங்கி இருந்தன. அமர்ந்திருந்தவர்களில் சிலர் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தனர். அது நேரத்தைக் கடத்தும் நல்ல சாதனமாக இப்பொழுது விளங்கி வருகிறது. அதற்குள் யாரோ ஒருவர் காப்பி கொண்டுவந்து கொடுத்தார். வேண்டாமென்று சைகையாலேயே மறுத்து விட்டேன்.
நாற்காலிகளில் சில தினத்தாள்களும் கிடந்தன. அவற்றை யாரும் சீண்டக் கூட இல்லை. கிளம்பலாமா என்று நினைத்தபோது ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு மாலையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றனர். மேளம் ஒலிக்க ஆரம்பித்தது. அவலச் சத்தம் தாங்கமுடியாது போலிருந்தது. சாவு வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பக் கூடாதாம். எனவே நான் மெதுவாக எழுந்து தனியாக இருந்த மிதியடியை மாட்டிக் கொண்டு கிளம்பினேன்.
ஐந்து அடிகள் நடந்து சென்ற பிறகுதான் ஒரு விடுதலை உணர்வு ஏற்பட்டது. கனமாக இருந்த மனம் லேசாகியது. காலைக் காற்றும் இதமாக இருந்தது. வீட்டின் சுற்றுச் சுவர்க் கதவைத் திறக்கும் ஒலியைக் கேட்டு என்னவள் வெளியே வந்தாள்.
”தோட்டத்துல போயி ஒரு சொம்பு தலையில ஊத்திக்கிட்டு வாங்க. மூணாவது தெருவுல ஒங்கக் கூட வேல செய்றவரு காயலாவாக் கெடந்தாரே. அவரு போயிட்டாராம். ரொம்பத் தெரிஞ்சவராச்ச; இப்பவே போயிட்டு வந்து மறுபடியும் குளிச்சிடுங்க” என்று கூறி முடித்தாள்.
“அதுவும் சரிதான். இந்தக் கடமையையும் முடிச்சிடுவோம்” என்றெண்ணிக் கொண்டு கிளம்பினேன்.
