ஏழை சோமேஸ்வரன்/கணேஷ்ராம்

கணேசன் இதை ஒரு ஆன்மீக அனுபவமாகத் தான் எடுத்துக் கொண்டான். அகஸ்மாத்தாக நடந்து இருக்கலாம். ஆனால், அது எதிர்பாராத விதமாக நடந்ததில் ஆச்சரியம் நிறைந்த சம்பவமாகி விட்டது.
ஐந்து வருடங்கள் சடுதியில் கடந்து விட்டன.
கும்பகோணத்தில் போஸ்டிங் என்பது கோயில் சுற்றிகளுக்கு பிறவிப்பயன். உறக்கம் வராத பிறிதொரு நாளில் வேலை மெனக்கெட்டு கணக்குப் போட்டதில் கிட்டத்தட்ட நூறாறைம்பது கோயில்கள் போயிருக்கிறான் அவன் அந்தக் குறுகிய கால கட்டத்தில். அநேகமாக எல்லாமே பாடல் பெற்ற ஸ்தலங்கள், இல்லை திவ்ய தேசங்கள். ஒரு சில அபிமான ஸ்தலங்கள்.
அபிமான ஸ்தலங்கள் என்பவை பிரபலமான பாரம்பரியம் மிக்க வைணவத் தலங்கள். ஆனால், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படாதவைகள் அல்லது நூற்றி எட்டு திருப்பதிகளில் என்ன காரணமோ விடுபட்டுப் போன தலங்கள்.


மன்னார்குடி, வடுவூர், ஏன் குருவாயூர் போன்ற அற்புதமான ஸ்தலங்கள் எல்லாம் அபிமான ஸ்தலங்கள்.
காவேரியின் அரசலாற்றுத் தலைப்பில் கேட்பாரற்று கேட்டவரம் தரும் ஆஞ்சநேயர் என்றொரு குறுங்கோயில் உண்டு. இது மேற்சொன்ன எந்த வகையிலும் சேராது. யாரோ ஒரு புண்ணியவான் ரசனையின் அடிப்படையில் கட்டியது.
இந்த அனுமார் அளவில் சிறியவர். ஆனால் பெரிய அதிர்ஷ்டசாலி. இவரது உயர்த்திய வலது கையின் கீழே காவிரி அரசலாற்றை சுடச்சுட பிரசவித்து விட்டு, ஷட்டர்கள் வழியே தலைதெறிக்க விரைகிறது.
அரசலாறு கேட்கவே வேண்டாம். தாயை விட அதி வேகமாக திருவலஞ்சுழி வரை காவிரிக்கு இணையாக அல்லது இன்னமும் வேகமாக ஓடி, சடாரென்று தெற்காகத் திரும்பி மறுபடியும் தாராசுரத்தில் கிழக்கில் வளைந்து நேராக ஓடுகிறது.


உண்மையில் திருவலஞ்சுழி என்பது அரசலாறு வலப்பக்கம் சுழித்து ஓடுவது தான். இதன் தென்கரையில் கோயில் கொண்டுள்ள‌ கபர்தீஸ்வரர் கோயிலின் முகப்பில் தனிக் கோயிலாகக் குடிகொண்டு உள்ள சுவேத விநாயகர் என்னும் வெள்ளை விநாயகர் சுமார் ஓரடி உயரமே கொண்டு கடல் நுரையால் ஆனவர்.
இவர் வலம்புரி விநாயகர் இல்லை. வலஞ்சூழி ஊரில் இருக்கும் சாதா இடம்புரி கணேசர் தான்.
இவரது கோயில் சிற்பக்கலைக்கு சாட்சியாக இன்றும் விளங்குவது.
இதன் கருங்கல் பலகணி, இன்றைக்கும் சிற்ப சாஸ்திரத்தில் உருவாக்க முடியாத ஆறு அதிசயங்களில் ஒன்றாக சிற்பிகளின் உறுதிமொழியில் இன்றும் கூறப்படுகின்றது.
ஆவுடையார் கோயில் கொடுங்கை, திருவலஞ்சுழி கருங்கல் பலகணி, திருவீழிமிழலை வௌவால் மண்டபம், தஞ்சைக் கோயில் விமானம், திருநனிபள்ளி கோடி விட்டம், கடாரம் கொண்டான் மதில் என்கிற‌ ஆறு அதிசயங்கள் மனிதர்களால் மறுபடியும் உருவாக்க முடியாதவை என்று நம்பப் படுகின்றன.


ஏதோ ஞாபகத்தில் அரசலாற்று அனுமாரில் ஆரம்பித்து பொடிநடையாக திருவலஞ்சுழி வந்தாகி விட்டது.
மறுபடியும் அரசலாற்றுத் தலைப்பு.
கல்லணையில் இருந்து திருவையாறு வழியாக பூம்புகார் வரை செல்லும் சாலை அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் அவரது அமைச்சர் கோவிந்த தீட்சிதர் போட்டது. இது காவிரியை ஒட்டியே அதன் வடகரையில் பிடிவாதமாகக் கூடவே வளைந்து வரும்.

இதில் திருவையாறு தாண்டி கூட்டுத்துறை ஜகத்ரட்சகப் பெருமாள் கோயிலும் தாண்டி, மகாபெரியவர் தாயார் பிறந்த ஊரான ஈச்சங்குடியைத் தாண்டி, கொஞ்ச தூரத்தில் வலது புறம் இருக்கும் குறுகிய தெரு, மேட்டுத்தெரு எனப்படும்.
இந்த மேட்டுத் தெருவின் கடைசியில் தான் காவிரி அரசலாற்றுத் தலைப்பு.
கணேசன் கும்பகோணம் சேர்ந்த உடன்‌ இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று அவன் தந்தை விருப்பப்பட்டதால் அவர்கள் மூவரையும்‌ (கணேசன், மனைவி, தந்தை) அவர்கள் டிரைவர் தட்சிணாமூர்த்தி என்னும் மூர்த்தி அழைத்து வந்தார்.
நல்ல வெய்யில். பொட்டுத் தண்ணீர் இல்லை. பல காலமாகத் தண்ணீர் வராத சூடு மணலில். கரையில் தாவரங்கள் பெருவாரியாகக் கருகி இருந்தன. மீன்களின் சடலங்கள் எலும்புத் துணுக்குகளாக சிதறிக் கிடந்தன.
ஜன நடமாட்டமே இல்லை.
அனுமார் வரம் கேட்க ஆளில்லாத நிலையில் பரிதாபமாக நின்றிருந்தார்.
கணேசனின் மனைவி அவரிடம் ஒரே ஒரு வரம் தான் கேட்டாள்.
அடுத்த முறை வரும் போது காவிரியில் தண்ணீர் இருக்க வேண்டும் என்று.
அனுமார் நிஜமாகவே வரப்ரசாதிதான் போலும்.
அடுத்த பதினைந்து நாளில் குடகில் வானம் கிழிந்து போய், மேட்டூர் முழுகிவிடாமல் இருக்கத் திறந்த தண்ணீர் பெருகி, முக்கொம்பை சொம்பை நசுக்குவது போல் நசுக்கி, கொள்ளிடத்தை உடைத்து, வழி நெடுக நடந்தாள் வாழி காவேரி.
தண்ணீர் கும்பகோணத்தை அடைந்த ஐந்து நாட்களில் மறுபடியும் மேட்டுத் தெருவிற்குப் படையெடுத்தார்கள்.
இந்த முறை கணேசனும் அப்பாவும் தான். மனைவி பெண்ணைப் பார்க்க‌ அயல்தேசம் போய் விட்டாள்.
கேட்டவரம் அருளும் ஆஞ்சநேயர் புளகாங்கிதத்தில் இருந்தார். அவர் சந்திதி வாசல் பெருக்கித் துடைக்கப்பட்டு, காரை பெயர்ந்த தரை முழுக்க கற்பூரம் ஏற்றிய சுவடுகள்.
“அடேங்கப்பா.. என்ன வேகம் பத்தியா?” என்றார் அப்பா.
மதகுகளில் இருந்து பீறிட்டு வரும் தண்ணீர் பத்துப் பதினைந்தடி எகிறி, மீன்கள் ஆயிரக் கணக்கில் எம்பி எம்பி, வெளி உலகின் உற்சாகத்தைக் காண விழைவதாகத் துள்ளிக் குதித்து ஆற்றின் ஓட்டத்தில் கலந்து விரைந்தன.
“தட்டாங்கோவில் மாதிரி நாலு மடங்கு இம்பாக்ட் இருக்கும்” என்றார் அப்பா.
தட்டாங்கோவில் என்பது மன்னார்குடி தாண்டி, திருத்துறைப்பூண்டி போகும் வழியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சிற்றூர். அதனருகில் இவர்கள் குலதெய்வம் குடிகொண்டு இருப்பதால் வருடத்திற்கொரு முறை போகும் வழக்கம்.
அங்கு கோரையாறு முள்ளியாறு சந்திக்கும். காவிரியின் உப கிளைகளில் கோரையாறு தான் அதிவேகமாகப் பாய்வது. ரஃபேல் நடால் ஆக்ரோஷமாக விளையாடுவது மாதிரி பெருத்த சத்தத்தோடு பாயும் அது.
“இதை விட வேகம் எகிறிச்சுன்னா கரையெல்லாம் உடைஞ்சிரும்” என்றார் மூர்த்தி.
கேட்டவரம் அனுமார் நீரும் நெருப்பும் எம்ஜிஆர் மாதிரி இரட்டை வேடத்தில் ஆறு காத்த ராமராகவும் துலங்கியதாகப் பட்டது.
இப்படி ஆரம்பித்த ஊர்சுற்றும் படலம், இயல்பாய் கோயில்கள் மேல் இருந்த பிரேமையால் (பக்தி அல்ல) விடுமுறை நாட்களில் முடிந்தவரை கோயில்களைப் பார்ப்பது என்று ஆகிவிட்டது.
கணேசன் குடியிருந்தது டவுன் ஹைஸ்கூலின் வடக்கு மதில் இருந்த தெருவில்.
அந்தக் குடியிருப்பின்‌ மூன்று தளங்களில் இரண்டாவது தளத்தில் ஒரு அபார்ட்மெண்ட்டில் இருந்தனர்.
ஒரு நாள் அப்பா கணேசனிடம், நம் வீட்டு மாடியில் யாரோ சுவாமிகள் இருக்கிறார் என்று சொன்னார். பக்கத்து வீட்டு மாமாவைக் கேட்டபோது அவர் “அப்படித்தான் இருக்கும் போல இருக்கு” என்று அசுவாரஸ்யமாக சொன்னார்.
அவரும் அவர் மனைவியும் அங்கு குடியிருந்தனர். அவர் சம்பந்தமே இல்லாமல் கும்பகோணத்தில் குடியிருந்தார்.
அவர் தேவகோட்டை பகுதியைச் சார்ந்தவர். நல்ல உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்று சென்னையில் மாம்பலத்தில் வீடு வாங்கி செட்டில் ஆனவர், யாரோ நண்பர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்காகக் கும்பகோணம் வந்தவருக்குக் கோயில்கள் எங்கு பார்த்தாலும் குழந்தைகள் சொப்புச் சாமான் போல இறைந்து கிடப்பதை பார்த்து நாவில் நீர் சொட்ட வாராவாரம் வந்தவர், அது சரிப்படாமல் ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்து வந்து விட்டார். இத்தனைக்கும் அவர் மகன்கள் இருவருக்கும் திருமணமாகி சென்னையிலேயே இருக்கிறார்கள்.
மூன்று மாதங்களில் திரும்பி விடலாம் என்று வந்தவர் ஆறு வருடங்களாக அங்கேயே இருக்கிறார்.
அவரும் அவர் மனைவியும் கோயில் பற்றிய ப்ரக்ஞையில் குழம்பிப் போய் இருந்தனர். போய்வந்த கோயில்களுக்கே சிலசமயம் திரும்பத் திரும்ப சென்றனர்.
அவர்களுக்கென்று ஒரு ஆட்டோக்காரரை மாத வாடகையாகப் பேசி, அந்த ஆள் இப்போது இரண்டு வண்டிகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.
பக்கத்து வீட்டுக் காரரே பழுத்த சுவாமிகளைப் போல இருக்கும் போது அவருக்கு மற்ற சுவாமிகளைப் பற்றிய சுவாரஸ்யங்கள் சுலபமாகக் கழன்று போயிருக்கலாம்.
இதற்கடுத்த இரண்டு தினங்களில் கணேசன் டிஃபன் வாங்க வெளியே வந்த போது, ஒரு கார் வந்து நின்றது.
அதில் வந்து இறங்கியவர் கணேசன் பணியாற்றும் வங்கியின் பழைய‌ ஓய்வு பெற்ற நிர்வாக இயக்குனர். அவருக்கு வண்டி ஓட்டி வந்தவர் முருகன் என்று அவர்கள் தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர். கணேசனுக்கு இயக்குநரைத் தெரியாது என்றாலும் முருகனைத் தெரியும் என்பதால் ஆச்சரியப் பட்டு,” என்ன முருகன்? இவ்வளவு தூரம்?” என்றான்.
அவரும் ஆச்சரியப் பட்டு, “சார் நீங்க இங்கியா இருக்கீங்க? நம்ம சாமிஜியும் இங்கதான் வந்திருக்காங்க.. சாரோட பொண்ணுக்கு சாமிஜிதான் வரன் ஏற்படுத்திக் கொடுத்தாரு.. அதுக்காக பாக்கணும்னு கிளம்பி வந்துருக்கோம்” என்றார்.
கணேசனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னடா நாமளும் நாலு மாசமா இருக்கோம், நமக்கு அடுத்த ஃப்ளோர்ல ஒரு ஸ்வாமிஜி இருக்காரு.. நாம ஒரு முயற்சியும் எடுக்கலை.. யார் யாரோ பெரிய ஆசாமிகள் வெளியில் இருந்தெல்லாம் வருகிறார்களே என்று.
முருகன் அதைக் குறிப்பால் உணர்ந்து, நீங்க சாமிஜியைப் பாத்தது இல்லீங்களா என்றார்.
“இல்லியே”
“அடடா.. சாமிஜி அப்பப்ப தான் இங்க வருவாரு… சாமிஜியோட வைஃப் மட்டும் இங்க இருக்காங்க.. சாமிஜி இப்போ சேலையூர்ல பெரிசா கோயில் கட்டி, அங்கியே ஒரு ஜாகை கட்டிக்கிட்டுத் தனியா இருக்காங்க.. எப்பவாச்சும் தான் இங்க வர்றது” என்றார்.
அவர் வசிக்கும் வீட்டின் அருகில்தான் மேற்சொன்ன கோயில் இருப்பதாகவும், அதனால் சாமிஜியுடன் தனக்கு நல்ல பழக்கம் என்றும் சொன்னார்.
கணேசனுக்கு எப்படியாவது ஸ்வாமிகளைப் பார்க்கும் ஆவல் எழுந்தது.
உண்மையில் அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலை உணவு முடிந்து அருகாமையில் இருக்கும் சோமேஸ்வரன் கோயிலுக்கு அப்பாவோடு போய்விட்டு வரலாம் என்று நினைத்து இருந்தான். அதனால் மூர்த்தியையும் கூப்பிடவில்லை.
ஊரெங்கும் சுற்றித் திரிந்து அலைந்து கோயில் கோயிலாகப் போனாலும் நகருக்குள் இருக்கும் நிறைய கோயில்களைப் பார்க்க முயலவில்லை.
ஊருக்கு வந்த வாரமே அந்த ஊர் வழக்கப்படி கும்பேஸ்வரனையும் சாரங்கபாணியையும் பார்த்தாலும், சாரங்கபாணியை ஒட்டியே இருக்கும் சோமேஸ்வரன் கோயிலுக்கு என்ன காரணமோ போகவில்லை. ஏதோவொரு விதத்தில் அலுப்பு.‌ அசுவாரஸ்யம்.
சோமேஸ்வரனைக் கும்பகோணத்தில் “ஏழை சோமேஸ்வரன்” என்கிறார்கள்.
கட்டப்பட்ட காலத்தில் சோமேஸ்வரன் கோயில் பெரிதாக இருந்ததாகவும், வைணவர்கள் தலையெடுத்து அவர்கள் கை ஓங்கியதில், சாரங்கபாணி கோயில் கட்டும் போது, இடம் போதாமல் சோமேஸ்வரன் கோயிலில் இருந்து பாதியைப் பிடுங்கிக் கொண்டு விட்டதால், ஏற்கெனவே பாதியை மனைவியிடம் இழந்த சோமேச்சு, மிச்சத்தில் பாதியை மைத்துனரிடமும் இழந்ததில்‌ ஏழையாகி, ஏழை சோமேஸ்வரன் ஆகி விட்டார் என்று சொன்னார்கள்.
இந்த நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் கோயில்களுக்கும் நேரம் ஒதுக்கி நாகேசுவரன், மகாமகக் கரைக் கோயில்கள், காளத்தீஸ்வரர், ராமசாமி, சக்ரபாணி, கொட்டையூர் வரை போய் கோடீஸ்வரர், ஏன் அப்படி இப்படி பொழுது போகாமல் ஒரு மைல் நடந்து பாணபுரீசுவரர் கூடப் போயாகி விட்டது.
சோமேசுவரன் வழியாகவே நூறு தடவை போனாலும், ஓரிரு முறை அதன் வாசலிலேயே முராரியில் காப்பி குடித்து இருந்தாலும், வாசலில் இருந்தே சாரங்கபாணியின் நெடிதுயர்ந்த கோபுரத்திற்கு முன்னால் மூஞ்சூறு போல துக்கிணியூண்டு இருக்கும் சோம்ஸ் கோபுரத்தைப் பார்த்துப் பாவனையாக தாவாங்கட்டையில் நாசூக்காக விரல்களால் பக்தியைக் காண்பிக்கக் கற்றுக் கொண்டாகி விட்டது.
இன்றைக்கு தட்சிணாமூர்த்தி இல்லாததில் சோமேஸ்வரன் வரை நடக்கலாம் என்று சொன்னதும் அப்பாவும் சரியென்று சொல்லி விட்டார்.
கணேசன் டிஃபன் வாங்கும் ஆசையைத் தள்ளிப் போட்டான்.
சோமேஸ்வரன் கோயிலுக்குப் போகும் வழியில் முராரியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று துரிதமாக முடிவெடுத்து, முருகனையும் காப்பி சாப்பிட வாருங்கள் என்று வீட்டிற்குக் கூட்டிப் போனான்.
தன்னால் முடிந்த அளவு, காது அவ்வளவாகக் கேட்காத அப்பாவிடம் விஷயத்தை விளக்கி, அவரை மாடிக்குத் தயார் செய்து, முருகனுக்கும் ஒரு காப்பியைக் கலந்து கொடுத்தான்.
வினை தீர்க்க முடியாத முருகன் அதற்கப்புறம் காப்பி சாப்பிடுவதை விட்டொழித்ததாகக் கேள்வி.
அவர்கள் மூவரும் மாடிக்குப் படியேறி, கணேசன் வீட்டிற்கு நேர் மேலாக இருக்கும் ஸ்விமிஜியின் இருப்பிடத்தை அடைந்தார்கள்.
ஸ்வாமிஜி படாடோபமாக இல்லாமல் எளிமையாக இருந்தார். தலையைக் கோதி பின்னால் சிறிய முடிச்சிட்டிருந்தார். முகம் நிறைய கொஞ்சம் கருப்பும் நிறைய வெளுப்புமாகத் திருத்தப்படாத நீண்ட நாள் தாடி. இந்தத் தோற்றம் பொதுவாக அவரது குள்ளமான தாட்டியான‌ ஆகிருதிக்கு பைராகியைப் போலவோ பேய் ஓட்டுகிறவர் போலவோ தான் தோற்றத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு கனிவையும் நம்பிக்கையையும் அது அளித்ததாகத் தோன்றியது கணேசனுக்கு.
அவரது உதடுகளில் சிறு கீற்றாக ஆனால் நிரந்தரமாகக் குடிகொண்டு இருக்கும் புன்னகையினால் கூட இருக்கலாம்.
வெறும் வெள்ளை வேட்டியும், பழைய கதர் ஜிப்பாவும் அணிந்து இருந்தார். நெற்றி நிறைய விபூதிப்பட்டையும், நடுவில் பெரிய சந்தனப் பொட்டும் நாசூக்காக ஒரு பொட்டு குங்குமமும் வைத்து, ஒரு மர‌ ஈஸிசேரில் சாய்ந்து இருந்தார்.
அவருக்கு எதிரில் சற்று தள்ளி ஒரு நாற்காலியில் பவ்யமாக பழைய இயக்குநர் அமர்ந்து இருக்க, சுவாமிஜி அவரிடம் ஏதோ அளவளாவிக் கொண்டு இருக்கிறார்.
முருகன் உள்ளே சுவாதீனமாக, ஆனால் பவ்யமாக நுழைந்து, குனிந்து சுவாமிஜியின் கால் பக்கம் குனிந்து வணங்கிவிட்டு, வாசலில் நின்று கொண்டு இருந்த இவர்கள் இருவரையும் காட்டி ஏதோ சொல்ல, சுவாமிஜி ஒரு பெரிய மந்தஹாஸத்தில் இவர்களைப் பார்த்து, “வாங்கோ.. வாங்கோ” என்றார்.
“நீங்கள் எங்கள் நெய்பரா” என்றார்.
கணேசன் ஆமாம் என்று புன்னகைத்தான்.
அதற்குள் அவர் மனைவி வந்து அவரிடம் அப்பாவைக் காட்டி, “நான் மாமாவை அடிக்கடி பாப்பேனே” என்றார். அப்பாவும் ஆமோதித்தார்.
என்னிடம் நீங்களும் முருகன் வேலை பார்க்கும் வங்கியில் தான் வேலை பார்க்கிறீர்களா என்று கேட்டார்.
“ஆமாம்.”
இயக்குநரைக் காட்டி இவரைத் தெரியுமில்லையா என்று கேட்டார்.
கணேசன் கொஞ்சம் பதவிசாக, “நன்றாகத் தெரியும்.. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக நான் பூனாவில் இருந்த போது அங்கு ஒரு கிளையை சார்தான் திறந்து வைத்தார். அன்றைக்கு ஒரு மகளிர் குழுவுக்கான மீட்டிங்கில் சார் இந்தியில் படு சரளமாகப் பேசியதை இன்று வரை அங்கு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றான்.
அவர் லேசாக முறுவலித்தார்.
“இங்கே வந்து எவ்வளவு நாளாச்சு “
“நாலு மாசம் முடியப் போறது… ஸ்வாமிஜி இங்கே இருக்கறது‌ எனக்குத் தெரியாது ” என்றான் மன்னிப்பு கோரும் பாவனையில்.
“அதனால என்ன? நான் கும்பகோணத்துல ஜாகைன்னுதான் பேரு.. இந்தப் பக்கம் வந்தே ஆறேழு மாசம் ஆச்சு..
ஸ்டேட்ஸ் போயிருந்தேன்.. அப்பறம் சேலையூர் கோயில்ல கொஞ்சம் மராமத்து பண்ண வேண்டி இருந்தது.. அப்படியே டைம் ஓடிப் போச்சு.. இங்கே நாளைக்கு சிவபுரம் கோயில்ல கும்பாபிஷேகம்… என் கிட்டே ஏற்கெனவே டைம் கேட்டுண்டுதான் ஆரம்பிச்சாங்க.. நான் தான் பண்ணி வைக்கணும்னு ஒரே பிடிவாதம் பிடிச்சாங்க.. அதுக்காக வரவேண்டியதாப் போச்சு ” என்றார்.
அப்பா நேற்று சாயங்காலம் சொன்னது ஞாபகம் வந்தது.
“அந்த கோயில் கும்பாபிஷேகம் போஸ்டர்ல போட்ருந்த ஒத்தர் மாதிரி ஒருத்தரைக் கீழே பார்த்தேன்”.
என்ன ஒரு கிரகிக்கும் தன்மை அந்தக் கால மனிதர்களுக்கு?
“சிவபுரம் போயிருக்கீங்களா?”
“போன மாசம் போனோம். கொஞ்சம் லேட்டானதுல நடை சாத்திட்டாங்க.. தேப்பெருமாநல்லூர் போயிட்டு அய்யாவாடி செம்பியவரம்பல்ல இருக்கற‌ ஸ்வர்ணாகர்ஷண‌ பைரவர் கோயிலைப் பாத்துட்டு வரத்துக்குள்ள கொஞ்சம் லேட்டாயிடுத்து..”
“அடடா.. சிவபுரம் கண்டிப்பா பாக்க வேண்டிய ஸ்தலம்.. நாளைக்கு முடிஞ்சா வாங்கோ.. அப்பா வேண்டாம்… கூட்டம் சமாளிக்க முடியாது.. அப்பாக்கு சதாபிஷேகம் ஆயாச்சா… “
“ஆகியே பத்து வருஷம் ஆயாச்சு”
“ஆஹா.. பரம பாக்கியம்.. நீங்க ஒண்ணு பண்ணுங்கோ… இன்னிக்கு வேற ப்ரோக்ராம் இல்லேன்னா, இப்பவே கிளம்பி சிவபுரம் போயிட்டு வந்துடுங்கோ.. அந்தக் கோயில் விசேஷம் தெரியும் இல்லையா?
பைரவஸ்தலம்..
கோயிலுக்கு வெளீல பைரவர்.. தனிக் கோயிலாவே இருக்கும்..
சில கோயில்கள்ல இந்த விசேஷ அமைப்பு இருக்கும்..
திருவலஞ்சுழில பிள்ளையார் தனிக் கோயில்ல இருப்பார்.. ஆனாலும், உள்ளே இருக்கற அஷ்ட புஜங்க துர்க்கை மகா வரப்ரசாதி… ராஜராஜ சோழன் எந்தப் போருக்குப் போனாலும் அவள் பாதத்துல வாளை வெச்சுக் கும்புட்டுத்தான் போவானாம்… அந்தக் கோயிலுக்குள்ள இன்னொரு கோயிலாகத் தான் பிள்ளையாரோடது இருக்கு.
திருப்புறம்புயம் தேன் குடிச்ச பிள்ளையார்.. கோயிலுக்கு வெளீல குருபகவான் தனிக் கோயில்..
இது மாதிரி சிவபுரத்துல பைரவர் தனிக்கோயில் தெற்கைப் பாத்து.. ரொம்ப விசேஷம்” என்றார்.
பைரவர் என்றதும் மனம் விழுந்து விட்டது. பத்து வருடங்களாக பைரவர் கோயில்களைத் தேடித்தேடி போய்க் கொண்டு இருக்கிறான். காசி, தில்லி எல்லாம் எல்லாத் திக்குகளிலும் பார்த்தாகி விட்டது. பிலாயில் ஒருத்தருமே கேள்விப்படாத இடங்களில் தேடிப்போய் அவரைப் பார்த்து இருக்கிறான்.
இங்கே கும்பகோணத்தில் திருவீசநல்லூர் சதுர்கால பைரவர், ஆவூர் பஞ்ச பைரவர், கோமுக்தீஸ்வரர் இரட்டை பைரவர், க்ஷேத்ரபாலபுரம் பைரவர் தனிக்கோயில், அம்மாசத்ரம் மூன்று பைரவர் என்று முக்குக்கு முக்கு பைரவரை விரட்டி விரட்டி, ஏன் தாடிக்கொம்பு போய் பெருமாள் கோயிலில் இருக்கும் பிரம்மாண்ட ஸ்வர்ண பைரவரைப் பார்த்தாகி விட்டது. இங்கு கூப்பிடு தூரத்தில் சிவபுரத்தில் அதுவும் நாளை கும்பாபிஷேகம் பார்க்காமல் எப்படி விடுவது.
சோமேஸ்வரன் லோக்கல். ஓடியா போய் விடுவார்? எப்பொழுது பார்த்தால் என்ன?
“கண்டிப்பா போயிட்டு வந்துடறோம்” என்றான். மனம் நிறைவாக இருந்தது.
அவர் கணேசனை அருகில் அழைத்தார்.
அவன் மண்டியிட்டு அவர்முன் அமர்ந்தான். அவர் அவன் தலைமேல் தன் உள்ளங்கையை பலமாக அடித்த மாதிரி அழுத்தி கைமூடி ஏதோ முணுமுணுத்தார்.
கணேசன் குனிந்தவாறு கண்களை மூடிக் கொண்டான்.
சற்று நேரம் கழித்து, அவர் கையை எடுத்து விட கணேசன் எழுந்து கொண்டான்.
அவர் அவன் கையை நீட்டச் சொன்னார். அவனும் நீட்டினான்.
“கையை விரிச்சு நீட்டுங்கோ” என்று தன் கையை விரித்துக் காட்ட விரித்து நீட்டினான்.
அவர் தன் கையைக் கவிழ்த்து அவன் உள்ளங்கைமேல் வைத்து, அவர் விரல்களால் அவன் விரல்களை மடித்து, தன் கையை எடுத்து “கையைப் பிரிச்சுப் பாருங்கோ” என்றார்.
கணேசன் பிரித்துப் பார்த்தான்.
அதில் ஒரு சிறிய முத்து இருந்தது.
“எடுத்து பாருங்கோ”
அதில் பிள்ளையார் உருவம் செதுக்கப் பட்டு இருந்தது.
உங்க பேருக்கும் நட்சத்திரத்துக்கும் ஏத்த மாதிரி வந்துருக்கு என்றார்.
இத்தனைக்கும் கணேசன் அவரிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. தன் உத்யோகம் தவிர்த்து எதையும் சொல்லவில்லை. அவன் சொந்த நட்சத்திரம் எல்லாம் அவனுக்கே அவ்வப்போது தடுமாறும்.
இதே போல் அப்பாவுக்கும் சிவப்பு நிறத்தில் ஒரு கல் வரவழைத்துக் கொடுத்தார்.
வீட்டுக்குப் போனதும் முதல் காரியமாக இன்டர்நெட்டில் தன் நட்சத்திற்கான கல் எது என்று பார்த்தான். முத்து என்று இருந்தது.
இந்த மாதிரி ஆச்சர்ய‌ உணர்வுகளால் உந்தப்பட்டு சிவபுரம் செல்வது என்று தீர்மானித்து, அப்பாவிடம் கஷ்டப்பட்டு புரிய வைத்தான்.
சோமேஸ்வரன் போலாம்னு சொன்னியே?
சிவபுரம் இன்னும் விசேஷம். அதைத் தவிர நாளைக்கு கும்பாபிஷேகம்.
சோமேஸ்வரன் தானே? இன்னொரு நாள் பாத்துக்கலாம்..
சரியென்றார் அவர். அவரைப் பொருத்தவரை ஏதோ ஒரு கோயில் புதிதாக. பொழுது போகவில்லை. குழந்தை மாதிரி வெளியே செல்வதில் அவருக்கு எப்பவுமே ஒரு உற்சாகம்.
அப்போது தான் மூர்த்தியை வரவேண்டாம் என்று சொன்னது ஞாபகம் வந்தது.
வண்டியை வேறு உபயோகம் இல்லாமல் வைத்து இருக்கிறோம். வாரம் ஒருமுறை தான் வெளியே எடுப்பது. கும்பகோணம் வீதிகளில் சுயமாக வண்டி ஓட்டுவது அநாவசிய பிரச்சினை. அதனால் தான் மூர்த்தி.
இரண்டு மூன்று முறை மூர்த்தி ஃபோன் எடுக்கவில்லை. விடாமல் அடித்ததில்,
“பொறையார்ல இருக்கேன் சார்.. அக்கா பொண்ணுக்கு காதுகுத்து”
“ஆஹா.. அப்படியா.. ஒண்ணும் பிரச்சினை இல்லை.. நான் வேற ஆளைப் பாத்துக்கறேன்”
மறுபடியும் இவர்கள் அலுவலகத்தில் இவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்‌ டிரைவரைக் கூப்பிட்டான். அவரும் எடுக்கவில்லை. அதனால் அவரையே கூப்பிட, அவர் கணேசனிடம், “சாரி சார்.. உங்ககிட்ட சொல்லலை.. ரொம்ப எர்லி மார்னிங் கிளம்பி சீர்காழிக்கு போயிண்டுருக்கோம் சார்.. கிட்டத்தட்ட வந்தாச்சு.. ஏதாவது அர்ஜன்டா”
“பரலால்ல சார்.. உங்க டிரைவரை வரச்சொல்லலாம்னு நெனச்சேன்.. நான் வேற‌ ஏற்பாடு பண்ணிக்கறேன்”
அப்பா இதை ஓரளவு யூகித்து, ரொம்ப மெனக்கெடாதே.. போய் டிஃபன் வாங்கிண்டு வா.. அப்பறம் யோசிச்சுக்கலாம்”
அப்படி இப்படி பதினோரு மணி‌ ஆகிவிட, வெய்யில் தலைக்கேற விட்டு விட்டார்கள். எங்கும் போகவில்லை.
சாயங்காலம் ஆனதும் மனம் நமநமவென்று அரிக்க‌வாரம்பித்தது.
முதல் முறையாக ஒரு முழு ஞாயிற்றுக்கிழமை வீணாகி விட்டது.
அப்பாவிடம் கேட்டபோது “போயிட்டுப் போறுது போ.. தெருக்கோடி வரை வேணும்னா நடந்துட்டு வரலாம்”
இவர்கள் இருவரும் பக்கத்தில் இருக்கும் காந்தி பார்க் வரை போகலாம் என்று கிளம்பினர். அதற்கடுத்த தெருவில் தான் சாரங்கபாணி கோயில் முகப்பு. இந்த முனையில் இருந்தே கோபுரத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வது என்றுதான் பௌனது.
அப்பா தான் கேட்டார்.
“ரொம்ப நடக்க முடியாது.. இவ்வளவு தூரம் வந்துட்டோம்.. சாரங்கபாணி வேணா பாத்துட்டு வந்துடலாம்”
“சரி வா.. வரும்போது ஆட்டோல வந்துடலாம்”
அடுத்த ஐந்து நிமிடங்களில் சாரங்கபாணி கோயில் வாசல் நாலுகால் மண்டபம் வரை வந்தால், ஏதோ உற்சவம் போலிருக்கிறது. ஒரே கூட்டம்.
“அடக் கஷ்ட காலமே… சரி போறது போ… திரும்பிப் போயிடலாம்”
கணேசனுக்கு மனது கேட்கவில்லை. இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது. இதோ அருகில் இருக்கும் உச்சிப்பிள்ளையாரையாவது பார்த்து விட்டுப் போகலாம் என்று அப்பாவிடம் சொல்ல அவர் யோசித்தார்.
“என்னால படியேற முடியுமான்னு தெரியலையே”
“பரவால்லப்பா.. கீழேருந்தே பாத்துட்டு வரலாம் வா”
போனால் பூட்டி இருந்தது.
“அடச்சே” என்று கிரில் வழியாக அவர் முகத்தைப் பிரயத்தனப்பட்டுத் திரும்பும் போது நேரெதிராக சோமேஸ்வரன் கோயில் தென்பட்டது.
நூறடி தூரம் தான் இருக்கும். என்னவோ மனதில் அந்தக் கோயிலுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
அவனருளாளே அவன் தாள் வணங்குவதை விட இவர்கள் தரிசனம் சோமேஸ்வரனுக்குக் கிட்டவில்லை என்பது தான் உண்மை.
அலுப்பும் அசுவாரஸ்யமும் அவரோடு இவர்களை அல்லது கணேசனை ஒட்டவில்லை என்பது தான் காரணம்.
“இப்படி நேராப் போனா சோமேஸ்வரன். லெஃப்ட்ல போனா நாகேஸ்வரன். நாகேஸ்வரன் கொஞ்சம் பெரிய கோயில். பாடகச்சேரி ஸ்வாமிகள் திருப்பணி பண்ணினது”
பாடகச்சேரி ஸ்வாமிகள் என்றால் அப்பாவுக்குப் பிடிக்கும். கணேசன் அம்மா வழிப் பாட்டனார் வீட்டுக்கு பாடகச்சேரி ஸ்வாமிகளும் மௌனம் ஸ்வாமிகளும் அவ்வப்போது வருவது வழக்கம்.
அவன் அம்மாவின் சித்தப்பா பேசினார் என்றால் இன்றளவும் உட்கார்ந்து கேட்கலாம்.
அவர் மாமனார் பேரளத்தில் பெரிய மிராசு. அவர்கள் வீட்டில் ஒரு பெண்மணிக்கு சித்தப்ரமை. ஒரு சித்தர் அருள்வாக்குப்படி சாதுக்களுக்கு அன்னதானம் செய்தால் சித்தப்ரமை அகன்று விடும்.
பல வருடங்களாக அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். அதனால் நிறைய சாதுக்கள் அவர்கள் வீட்டில் எப்போதும்.
பாடகச்சேரி ஸ்வாமிகள் தனியாகவும் வருவார். சமயங்களில் மௌனம் ஸ்வாமிகள் கூடவும் வருவார்.
இன்ன நேரம் என்றில்லாமல் கால் போன போக்கில் வருவார். அவர் வந்தவுடன் சமையல் செய்து சுடச்சுட ஒரு பாத்திரத்தில் சாதம் போட்டு குழம்பு ஊற்றி, திண்ணையில் வைத்து விடுவார்கள்.
பாடகச்சேரி ஸ்வாமிகள் அதை நன்றாகப் பிசைந்து ஒரே அளவில் உருண்டைகளாக உருட்டுவார். தனக்கு ஒரு உருண்டை எடுத்துக் கொள்வார்.
மிச்சம் இருக்கும் ஒரே அளவான உருண்டகளை வரிசையாக திண்ணைக் குறட்டில் வைப்பார்.
சிலநாள் பத்து உருண்டைகள். சிலநாள் இருபது. சிலநாள் நான்கு.

கடைசி உருண்டையை வைத்த உடன் சொல்லி வைத்தாற்போல எங்கிருந்தோ நிறையத் தெரு நாய்கள் வரும்.
எத்தனை உருண்டைகள் உண்டோ மிகச்சரியாக அத்தனை நாய்கள்.
பாடகச்சேரி ஸ்வாமிகள் உம்மென்று ஒரு ஓங்காரத்தில் குரலெழுப்ப, சொல்லி வைத்தாற் போல ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு உருண்டையைக் கவ்விக் கொண்டு போகும்.
இந்த நிகழ்வைக் காண பெருங்கூட்டம் கூடும்.
இதை அலுக்காமல் சித்தப்பா ஒவ்வொரு முறையும் கூறுவார். கணேசனே நிறைய முறை மானசீகமாக அவர் வைத்த உருண்டைகளைப் பிரசாதமாகக் கவ்விக் கொண்டு போயிருக்கிறான்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் குடந்தை நாகேஸ்வரன் கோயில் இரண்டும் பாடகச்சேரி ஸ்வாமிகள் சம்பந்தப் பட்டவை.
கிண்டி ஸ்டேஷன் ஒட்டி அவரது சமாதி கோயில் உள்ளது. திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் அவர் சமாதி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதனால் அப்பாவுக்குப் பாடகச்சேரி ஸ்வாமிகள் மீது அபார பக்தி.
அதனால் தான் நாகேஸ்வரன் போலாமா என்று கேட்டது.
“அதான் ஏற்கெனவே பாத்துருக்கமே… சோமேஸ்வரன் தான் ரொம்ப நாளா சொல்லிண்டு இருக்கோம்.. போலாம் வா”
அந்த நூறடிக்குள் முராரியில் நுழைந்து காப்பி குடித்து விட்டு கோயில் வாசலுக்கு வந்து விட்டனர்.
ஒரு கதவுதான் திறந்து இருந்தது.
ஈ காக்காய் இல்லை. பொதுவாக கோயில் வாசல்களில் தென்படும் பிச்சைக் காரர்கள் கூட இல்லை. வருமானம் இல்லாத இடத்தில் யார் கடை விரிப்பார்கள்.
கோபுரத்தை இருவரும் ஏக காலத்தில் நிமிர்ந்து பார்த்தனர். பழைய கோபுரம். சிதிலமடையவில்லை. கடைசியாக எப்போது புனரமைக்கப் பட்டதோ?
“நூறடி உயரம் இருக்குமா?” என்றார் அப்பா.
“இருக்காது”
வலது பக்கம் அநிச்சையாக சாரங்கபாணி கோயில் கோபுரம் மீது பார்வை திரும்பியது.
எப்பேற்பட்ட கோபுரம்?
பழைய வைணவக் கோயில் கோபுரங்களில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்திற்கு அடுத்த பெரிய கோபுரம். நூற்றி எண்பத்திரண்டு அடி.
வில்லிப்புத்தூர் கோபுரம் மாதிரி மொழுக்கென்று இல்லாமல் சாரங்கபாணி கோபுரம் மதுரை கோபுரம் மாதிரி பூராவும் சிற்பங்கள்.
அந்த உயரத்தை வைத்துப் பார்த்தால் இது பாதிதான் இருக்கும்.
தொண்ணூறு இருக்கலாம் என்றான்.
வாசலில் செருப்பைக் கழட்டிப் போடத் தயக்கமாக இருந்தது. தன் சொத்தையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர் செருப்பைக் காபந்து பண்ணுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பாதிக்கு மேலாகப் பறி போனதில் கோயில் அகலம் குறுகி ஆனால் நீளமாக உள்ளே நடக்க வேண்டும்.
பேபார்ஸான கொடி மரத்தையும் நந்தி மண்டபத்தையும் தாண்டி ரொம்ப தூரம் நடந்தால் சந்நிதிக்கு வரலாம்.
இந்தக் கோவிலிலும் கோயிலுக்கு கோபுரத்திற்கு உள்ளே ஆனால் மெயின் சந்நிதிக்கு வெளியே வேறொரு கோயில்.மாலீஸ்வரர் என்று தாட்டியாக ஒரு சிவன், அவர் கன்சார்ட்டுக்கு அவரை ஒட்டிய இன்னொரு சந்நிதி.
கோயிலுக்குள் கோயில்.
ஆனால் மாலீஸ்வரர் படு அழகு.
உள்ளே சோமேஸ்வரன் மிக மிகப் பழமையானவர்.
லிங்கமே வசீகரம். அம்பிகை சூட்டிகையாக இருக்க, அர்ச்சகர் தீபாராதனை காட்ட முயலவே இல்லை.
கடவுள் ஆரம்பித்து பக்தன் வரை எல்லோரும் அலுப்புடன் இருப்பதாகப் பட்டது.
இவர்களைத் தவிர ஒரு வயதான மாமி உள்ளே இருந்தார்.
அங்கேயே விற்றுக் கொண்டிருந்த பால் வாங்கி அங்கிருந்த பாத்திரத்தில் ஊற்றினார்.
சுவாமி அபிஷேகத்திற்கு இப்படி ஒரு வழியில் சேகரிக்கிறார்கள் என்று தோன்றியது.
கோயில் சுத்தமாகவும் அதி புராதனமாகவும் இருந்தது.
வழக்கம் போல கோஷ்டத்தில் சந்நிதிகள் சிலைகள் தேய்மானம் கண்டு.
ஒரு சுற்று முடிந்து எங்கு நமஸ்காரம் என்று தேடியபோது கோபுரத்திலிருந்து வரும் வழியில் இருக்கும் நந்தி மண்டபத்தில் பண்ணலாம் என்று அப்பா சொன்னபோது தான் அந்த மனிதரைப் பார்த்தான்.
அம்பாள் சந்நிதிக்கு நேராக இருந்த தெற்கு வாசலில் கோயிலுக்கு உள் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்.
வயதானவர் என்று தெரிந்தது. காந்தி மகான் தரையில் கிராமஃபோன் தட்டு போல சுற்றும் இராட்டையில் நூல் நூற்பது போல சரிபாதியாக மடிந்து இருந்தார்.
ஒரு பழைய மூங்கில் தடி தரையில் கிடத்தி இருந்தது.
கையில் ஒரு பித்தளை தம்ளரும் எவர்சில்வர் தம்ளரும் வைத்து இருந்தார்.
சிறு துணிமூட்டை ஒன்று அவர் பக்கத்தில் இருந்தது.
அவருக்கு ஏதாவது அளித்தால் என்ன என்று தோன்றியதை அடக்கிக் கொண்டான்.
அப்போது திரும்ப எத்தனித்த இவர்களை அர்ச்சகர் நிறுத்தி அம்பாளுக்கு தீபாராதனை காட்டறேன், பார்த்துட்டுப் போங்கோ என்று சொல்லி தீபாராதனை காட்டினார்.
கணேசனுக்கு தீபாராதனையில் மனம் லயிக்கவில்லை.
வாசலில் இருந்த செருப்பு களவு போகாமல் இருக்க வேண்டும். இந்த மனிதர் யாராக இருக்கும்? யாசகம் வாங்குபவரா?
இதற்குள் அப்பா அர்ச்சகரிடம் அதன் பழைமை பற்றிக் கேட்க அவரும் சுவாரஸ்யமாக சொல்லவாரம்பித்தார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களோடு வழிபட்ட அந்த வயதான மாமி சென்று அவரிடம் ஏதோ குனிந்து பேசி, கையில் இருந்து சில்லறைக் காசை அவர் கையில் கொடுத்தார்.
கணேசனுக்கு மிகவும் துக்கமாகி விட்டது. எவ்வளவு வயதான மனிதராக இருக்கிறார். ஏற்கனவே ஏழையாக இருக்கிற வரும்படி இல்லாத கோயிலில் யாசகம் கேட்கிறார்.
அவர் கேட்கிறாரோ இல்லை இவர்களாகக் கொடுக்கிறார்களோ? வேறு கோயில்களில் உள்ளே வரை அனுமதிக்க மாட்டார்களா இருக்கும்.
அப்பா தலபுராணம் கேட்டுக் கொண்டிருக்கும் இடைவெளியில் கணேசன் அவரை அணுகி, பாக்கெட்டில் கைவிட்டு கிடைத்ததை எடுத்தான்.
ஏதோ ஒரு பெரிய ரூபாய் நோட்டு.
அவரைக் கூப்பிட்டு, அதை அவர் கையில் “இந்தாங்க” என்று கொடுத்தான்.
அவர், அதைப் பிரித்து இன்னொரு கையால் தடவி, குத்து மதிப்பாக கணேசனைப் பார்த்து, “இதுல எவ்வளவு இருக்கு” என்று கேட்டார்.
முழுப் பார்வையும் இல்லாதவர்.
வயிற்றை என்னவோ செய்தது.
எவ்வளவு என்று சொன்னான் கணேசன் கூச்சத்துடன்.
அவர் உடனே, “இவ்வளவு கொடுத்து இருக்கீங்களே.. நீங்க யாரு? ஜாகை எங்கே” என்று கேட்டார்.
தான் இந்த ஊருக்குப் புதிதாக மாற்றலாகி வந்திருப்பதைக் கூறினான்.
“அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. எனக்கு சாயங்கால அனுஷ்டானம் இருக்கு.. பத்து நிமிஷம் ஆகும்.. நீங்க எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்…”
“சொல்லுங்க”
“ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வர முடியுமா.. உங்க கிட்ட பேசணும்”
சரி என்று சொல்லி விட்டு வந்தான்.
“யாரு அது ” என்று கேட்டார் அப்பா.
சந்நிதிக்கு வெளியே வந்து அப்பாவிடம் எல்லாவற்றையும் சொன்னான்.
“பத்து நிமிஷம் கழிச்சு பாக்கப் போறியா”
“தெரியலைப்பா… வீட்டுக்குப் போறதுன்னா போயிடலாம்”
“ஏதாவது பணம் கேப்பாரா இருக்கும்.. பாத்துக்கோ… ரொம்ப இழுத்து விட்டுக்காதே.. முடிஞ்ச வரை செய்யலாம்”
கணேசனுக்கும் அதுதான் சரியென்று பட்டது.
மாலீஸ்வரர் சந்நிதியை நேரம் கடத்துவதற்காக மறுபடியும் வலம் வந்தனர்.
மனம் அவர் எதைக் கேட்கப் போகிறார் என்பதிலேயே சுற்றி வந்தது.
கோயிலுக்குள் யாசகம் கேட்கும்‌ வயதானவர். இரண்டு கண்களிலும் பார்வை இழந்தவர். எப்படி சமாளிப்பது?
எந்த அளவிற்கு தன்னால் உதவ முடியும் என்பதே இவனுக்குத் தெரியாது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அவன் மனைவிதான் பார்த்துக் கொள்வாள்.
அவள் பூமியின் எதிர் பக்கத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருப்பாள். எழுப்பி இதையெல்லாம் கேட்க முடியாது.
அப்பாவை மாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பாக உட்கார வைத்தான்.
அவரிடம் மறுபடியும் சென்றான்.
அவர் தனது கடமைகளை முடிக்கும் தருவாயில் இருந்தார். பொறுமையுடன் அவர் முன்னால் நின்றான்.
அவர் தனது கிழிந்த உத்தரீயத்தால் உதடுகளைத் துடைத்துக் கொண்டார்.
அவரால் கொஞ்சம் கூட நிமிர முடியாத படி அப்படி ஒரு கூன் போட்டு இருந்தது. எவ்வளவு வருடங்களாக இப்படி இருக்கிறாரோ?
கணேசன் தொண்டையைக் கனைத்து “நமஸ்காரம்” என்றான்.
அவர், சொல்லுங்கோ என்றார்.
கணேசனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“இல்லை, நீங்க தான் பத்து நிமிஷம் கழிச்சு வரச் சொன்னீங்க”
“ஓஹோ.. நான் சொன்னேனா.. எதுக்காக சொன்னேன்?”
கணேசனுக்கு தர்ம சங்கடமாகப் போய் விட்டது.
“நான் ஒரு ரூபாய் நோட்டு குடுத்தேன்.. நீங்க எவ்வளவுன்னு கேட்டீங்க.. நான் சொன்னேன்.. நீங்க பத்து நிமிஷம் கழிச்சு வரச் சொன்னீங்க”
“ஓ… ஆமாமாம்.. சட்டுன்னு மறந்து போயிடறது… நீங்க கொஞ்சம் தயவு சேஞ்சு என் முன்னாடி உட்கார முடியுமா? என்னால நிமிர முடியாது”

கணேசன் உட்கார்ந்து கொண்டு “உங்காந்துட்டேன்”
“சந்தோஷம்… இப்போ சொல்லுங்கோ… எனக்கு என்ன வயசு இருக்கும்?”
கணேசனுக்கு குழப்பமாக இருந்தது. என்ன விளையாட்டு இது. இன்னிக்கு என்ன ஆச்சு? எல்லாமே விசித்ரமா நடக்கிறது?
“எண்பத்தஞ்சு இருக்கும்னு நினைச்சேன்”
அவர் மந்தஹாசமாக சிரித்தார்.
மறுபடியும் துண்டால் உதட்டைத் துடைத்துக் கொண்டார்.
“எனக்கு தொண்ணூத்தெட்டு ஆறது”
“அடேங்கப்பா” என்று சொன்னவன் அப்படி சொல்லி இருக்கக் கூடாதோ என்று யோசித்தான். சொன்னபிறகு என்ன‌ செய்வது?
“நான் தொண்ணூறு வருஷமா இந்தக் கோவிலுக்கு வரேன்”
“மை காட்”
“ஆமாம்.. இந்த சோமேஸ்வரன் இருக்கானே… இவன் ஏழை சோமேஸ்வரன் கிடையாது… இவன் குருவோட அம்சம் இங்கே… அதனால, இவனுக்கு “வியாழ சோமேஸ்வரன்னு தான் பேரு..”
“ஓஹோ”
” இந்த முட்டாள் ஜனங்க, சாரங்கபாணி எல்லாத்தையும் புடுங்கிண்டுட்டான்.. சோமேஸ்வரன் போண்டி ஆயிட்டான்.. அதுனால அலன் ஏழை சோமேஸ்வரன்னு சொல்லி சொல்லி எல்லாரும் அதையே பிடிச்சிண்டு சொல்லிண்டு இருக்காங்க”
கணேசனுக்கு மறுபடியும் என்னவோ செய்தது.
“என்ன பேச்சையே காணும்?”
“இல்லை.. கேட்டுண்டு தான் இருக்கேன்”. தான் வாயடைத்துப் போய் இருப்பதை அவரிடம் சொல்லக் கூச்சமாக இருந்தது.
“இப்போ நீங்க எனக்கு ஒரு உபகாரம் பண்ணனும்”
“கண்டிப்பா செய்யறேன்”
“பெரிசா ஒண்ணும் இல்லை.. கும்பகோணத்தில் இருக்கற வரைக்கும் அல்லது வரும்போதெல்லாம் முடிஞ்சவரைக்கும் இந்தக் கோயிலுக்கு வரணும்.
இவன் சாதாரணமானவன் இல்லை… மஹாசக்தி உள்ளவன்..
அதுனால, இனிமே “அட.. சோமேஸ்வரன்தானேன்னு அலட்சியமா நினைக்கப்படாது.
இவன் சாதாரண சோமேஸ்வரன் இல்லை.. இவன் (இரண்டு கைகளை அத்தனைக் கூனிலும் அகல விரித்து) “சோசோசோமேமேமேஸ்..வரன்.. கும்பேஸ்வரனுக்கெல்லாம் பாட்டன்.. சரியா” என்றார்.
கணேசனிடத்தில் பேச்சு திரும்ப கொஞ்ச நேரம் ஆனது.