
பால் க்ளியின் ஓவியங்கள் குறித்து டெல்யூஜ், கத்தாரி எழுதிய ஆயிரம் பீடபூமிகள் நூலில் குறிப்பிடுவது: பால் க்ளியின் ஓவியத்தில் இருக்கும் கருந்துளையை ‘சாம்பல் புள்ளி’ என்று அவர் குறிப்பிடுவார். அதற்குக் காரணம் அந்த ஓவியத்திற்குரிய சில காரணங்கள் இருந்தன. அந்த சாம்பல் புள்ளி எந்த ஒரு இடம் சார்ந்தோ, பரிமாணம் சார்ந்த ஒழுங்கின்மையாகவோ, அந்த ஒழுங்கின்மையின் ஆற்றலாகவோ, சிக்குவிழுந்த பிறழ் கோடுகளின் குவியம் என்றோ தொடங்கும்.
அது போல்தான் ஜெகேயின் ஓவியங்களில் காணப்படும் வரிகள் மரபானவையாகவும் ஒழுங்கற்றும் அதில் குவியும் ஆற்றல் பல இணைவைக்கும் பொருள்களைச் சார்ந்தும் உள்ளன. கிளியும் குதிரையும் நாயும் மாடும் மனிதனும் நிலத்திலிருந்து பறந்து நினைவுகளின் அடுக்குகளில் படிந்த மரபின் பக்கங்களில் நிறைந்துவிடுகிறார்கள். அந்த நினைவும் பூமியின் ஆற்றலிலிருந்து விடுபட்ட வேறொரு பரிணாமத்தினைக் குறியீடாகச் சொல்கிறது.
இந்தப் படைப்புகள் எல்லாம் சுற்றியுள்ள உலகத்தின் எல்லா இயற்கையையும் உள்வாங்கி தனக்கான இயற்கையை படைத்துக் கொள்கின்றன. அதன் பின் உலகம் சார்ந்த அர்த்தங்களை நோக்கிப் பயணிக்கின்றன. குதிரையின் பல தோற்றங்களாகட்டும் தோளில் மீனைச் சுமக்கும் பெண்ணாகட்டும் குடுவையில் நிறைந்த மீனாகட்டும் தூங்கும் பெண்ணைப் பார்க்கும் மயிலாகட்டும் இவை எல்லாமே நுட்பமான மூலக்கூறில் அணுக்களில் துகள்களில் இன்னும் பல நுண்ணிய பொருள்களில் உள்ளார்ந்திருக்கும் இயக்கத்தைக் கிரகித்தவை. அந்த இயக்கம், பார்வைக்குள் நுழைந்து அதற்கு இணையான இயக்கத்தை உருவாக்கி படைப்பின் இன்பத்தைத் தொடர்வதற்கு உதவுகிறது.
பூமி என்ற கிரகத்தின் இயக்கத்தை அவை சார்ந்திருந்தாலும் இயல்பான எளிமையான கோடுகள் போல் தென்பட்டாலும் அதன் மூலம் உருவாகும் படைப்புகள் அன்றாடம் காணுகின்ற உயிருள்ள உயிரற்ற பொருள்களைப் போலச் செய்தாலும் அவற்றில் பிரபஞ்ச அணுக்கம் வேறொரு பரிமாணத்தை நிகழ்த்துகிறது.
இது வரை பார்த்திருந்த மீன், குதிரை, பெண், மயில் எல்லாம் இதுவரை பார்க்காத தோற்றத்தை, இயக்கத்தை, ஒழுங்கை இந்தப் படைப்புகளுக்குள் நிகழ்த்துவதுதான் இவற்றின் புதுமையாக உள்ளது. அது மரபுசார் கோடுகள் வினைபுரியும் நவீன கித்தானாகப் பார்வையை மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக,
இந்தக் கிளி. இது கிளி என பார்த்தவுடன் தெரிகிறது. ஆனால் இயற்கையான கிளியுடன் இந்தப் படத்தில் இருக்கும் கிளிக்குள்ள தொடர்பும் உறவும் கிளியாக

ஏற்பதிலும் இதுவரைப் பார்த்த கிளிகளுடன் இதனைப் பொருத்துவதிலும் உருவாகிறது. இந்தப் படத்திலுள்ள கிளி பல கோடுகளால் ஆனது. அந்தக் கோடுகள் இதுவரையில் பார்த்த ஓவியங்களிலிருந்து கிளைத்து வளர்ந்தவை அல்ல. இயற்கையை வரையும் மரபான கோடுகளிலிருந்து மாறி ஒழுங்கற்ற ஒழுங்கைக் கொண்ட கோடுகளால் உருவானது இந்தக் கிளி. இதைக் குறியியல் கொண்டு விளக்கலாம். கிளி என்ற சொல் தரும் பொருள் இயற்கையான கிளியாக உள்ள ஓர் உயிரைக் குறிக்கும். அதே சமயம் பல ஓவியங்களில் காணும் கிளிகளையும் குறிக்கும். கிளி என்ற சொல்லுக்குள் நிகழும் இந்த இடுகுறித் தன்மையை ஓவியர்கள் தங்களுக்குச் சார்பாக மாற்றி பல பொருள் அடுக்குகளை உருவாக்குவார்கள். அப்படித்தான் ஜெகேயும் இந்தக் கிளியை மரபுப் பார்வையிலிருந்து பெயர்த்தெடுத்து நவீன கோடுகளுக்குள் பொருத்தி இருக்கிறார்.
டெல்யூஜும் கத்தாரியும் ஓவியங்கள் குறித்தக் கோட்பாட்டைத் தவிர்த்தல் என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஜெகேயின் ஓவியங்களில் ஒன்றைக் காணலாம்.

இந்தப் படத்தில் இருக்கும் குதிரை. இயல் வாழ்வின் குதிரை ஒன்றைப் பிரதிபலிக்கிறது. இது எப்படிப் பார்க்கப்படுகிறது? இயல்வாழ்வின் குதிரை என்ற பிம்பத்தைத் தவிர்த்து இந்தப் பிம்பம் குதிரை என்ற பெயருடன் பொருந்திக் கொள்கிறது. இயல்வாழ்வின் பிம்பமும் இந்தப் பிம்பமும் குதிரை என்ற பொருளின் பிம்பத்தைப் பார்வை மொழி உருவாக்கியிருக்கிறது. இப்போது இயல்வாழ்வின் குதிரை, ஜெகேயின் குதிரை, குதிரை என்ற பொருள் ஏற்படுத்தியிருக்கும் அகம்சார்ந்த பிம்பம் என்ற மூன்று அடுக்குகளில் ஒன்றில் மட்டுமே பார்வையின் அர்த்தம் நிலைத்திருப்பதில்லை.
ஜெகேயின் பிம்பத்தைக் காணுகையில் அதனைத் தவிர்த்து இயல்குதிரையின் பிம்பத்தைக் கற்பனையில் பார்வை அடைந்துவிடும். இயல்குதிரையைக் காணுகையில் அதனைத் தவிர்த்து ஜெகேயின் பிம்பத்தைப் பார்வை கற்பனை செய்துகொள்ளும். குதிரைகள் பற்றிய கற்பனையில் இயற்கையான குதிரை, ஜெகேயின் குதிரை இரண்டையும் தவிர்த்து புதிய ஒரு குதிரையை அறிவின் அகம் உருவாக்கிக் கொள்ளும். இந்தத் தவிர்த்தல்தான் பிம்பமாக நிலைத்திருக்கும். அதன் பொருளாம்சம் மாறிக் கொண்டே இருக்கும்.
ஜெகேயின் பிம்பத்தைக் காணுகையில் இயற்கை குதிரையின் பிம்பத்தைப் பதிலி செய்துகொள்வதாகவும் இயற்கைக் குதிரையைக் காணுகையில் ஜெகேயின் குதிரையைப் பதிலி செய்துகொள்வதாகவும் குதிரைகளைப் பற்றி சிந்திக்கையில் எல்லா பிம்பங்களையும் உள்ளிணைத்ததாகவும் தவிர்த்ததாகவும் பொருளாம்சம் மாறிக் கொண்டே இருக்கும் என்பதுதான் தவிர்த்தல் என்ற கோட்பாடாக டெல்யூஜ், கத்தாரி குறிப்பிடுகிறார்கள்.
ஓவியங்களைத் தொடர்ந்து பல பொருளாம்சங்களில் வரையறுக்கலாம். ரோலண்ட் பார்த் ஆசிரியன் இறந்துவிட்டான் என்று அறிவித்ததன் பொருள் படைப்புக்கும் அதனை உருவாக்கியவருக்கும் அதன் பொருளாம்சத்துடன் தொடர்பில்லை என்பதைச் சொல்வதற்காகவே ஆகும். அப்படிப் பார்த்தால் ஓவியர்களுக்கும் அது பொருந்தும். படைப்பில் உருவாக்கப்படும் பிம்பங்கள் பார்வையாளனுக்கு எண்ணற்றப் பொருளாம்சங்களைப் படைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஓவியர்கள் முயற்சிக்கிறார்கள். அதுதான் ஜெகேயின் கை வண்ணத்திலும் காணக்கூடிய அற்புதமாக இருக்கிறது.
பயன்பட்ட நூல்கள்
1.Deleuze, Gilles and Gauttari, Felix. A Thousand Plaeteaus- Capitalism and Schizophrenia, Tr.Brian Massumi, University of Minnesota Press, 1987.
