போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவாகவிதை/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, தன் சொந்தப் பெயரில் எழுதிய கவிதைகள். பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித். தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி; ஓவியம்: சி.டக்ளஸ்

ஒன்றுமில்லை

ஆஹ், அந்த மென்மையான, மென்மையான வாசிப்பு

யாரோ இதோ இப்போது அழ இருக்கிறார் என்பது போல

கலைப்பொருளும் நிலவொளியும்

பின்னிப் பிணைந்ததாய் பாட்டு…

நம் வாழ்க்கையை நினைவுகூர

ஒன்றுமில்லை.

இணக்க நடத்தைகளுக்கான பீடிகை

அல்லது மறைந்து போன புன்னகை…

தூரத்தில் ஒரு குளிர்ந்த தோட்டம்…

அதன் ஆத்மாவில்

காலியான பறத்தலின் அபத்த எதிரொலி

——-

நான் யாரென்று எனக்கு இப்போது தெரியவில்லை. நான் கனவு காண்கிறேன்

———-

நான் யாரென்று எனக்கு இப்போது தெரியவில்லை. நான் கனவு காண்கிறேன்

நான் என்ற உணர்வில் ஆழ்ந்து நான் தூங்குகிறேன். இந்த அமைதியான மணி நேரத்தில்

எனது எண்ணம் அது சிந்திக்கிறது என்பதை மறந்து விட்டது

எனது ஆத்மாவுக்கு ஆத்மா இல்லை.

நான் இருப்பேனென்றால் அதை அறிவது தவறு

நான் தூங்கி முழிப்பேனென்றால் நான் தவறிழைத்துவிட்டதாக உணர்கிறேன்

எனக்குத் தெரியவில்லை

எனக்கு ஒன்றுமே வேண்டாம்

என்னிடம் ஒன்றுமில்லை

நான் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லை

எனக்கு இருப்போ விதிகளோ இல்லை

மாயைகளுக்கிடையே ஒரு கணப் பிரக்ஞை

என்னைச் சுற்றி பேயுருக்களால் சூழப்பட்டிருக்கிறேன்

தொடந்து தூங்கு, மற்றவர்களின் இதயங்களைப் பற்றியே உணர்வே இல்லாமல்

ஓ யாருக்கும் சொந்தமில்லாத இதயமே!

——

நான் இரவில் காற்று வீசுவதைக் கேட்கிறேன்

—-

நான் இரவில் காற்று வீசுவதைக் கேட்கிறேன்

வெகு உயரத்தில் யாரோ சாட்டையை வீசுவதைக் கேட்கிறேன்

யார் யாரை அடிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை

என்னதென்றும் எனக்குத் தெரியவில்லை

எல்லாமே கேட்கப்படுகிறது; எதுவுமே பார்க்கப்படுவதில்லை.

ஆஹ் எல்லாமே குறியீடு, ஒப்பீடு

வீசும் இந்த காற்று, இந்த குளிர்ந்த இரவு

காற்றையும் இரவையும் தவிர வேறெதுவும் இருக்கிறதா-

அவை இருப்பிற்கும் எண்ணத்திற்கும் நிழல்கள்

பொருட்கள் கதைகள் வழி நமக்கு எவற்றைச் சொல்லவில்லையோ அவற்றைச் சொல்கின்றன

நான் என்ன நாடகத்தை என் எண்ணத்தினால் கெடுத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை—

இரவும் காற்றும் சொல்லிக்கொண்டிருந்த நாடகம்

நான் கேட்டேன். அவற்றைப் பற்றி சிந்தித்து நான் கேட்டது வீணாகிவிட்டது

எல்லாமே மெதுவாக முணுமுணுத்துப் பாடுகின்றன, ஒன்றையேதான்

காற்று வீசுவது நின்றுவிட்டது, இரவு முதிர்கிறது

நாள் தொடங்குகிறது, நான் இருக்கிறேன், பெயரிலியாக.

ஆனால் என்ன நடந்ததோ அது இதைவிட அதிகமானது

May be art