காதலின் கண் திறப்பு

எஸ் வி வேணுகோபாலன்

கண் திறக்கவில்லை அவள். ஆனால் பார்த்துக் கொண்டே இருந்தாள் போல் உணர்ந்தான் ரவி.

இன்று மூன்றாவது நாள். அப்படியே இருக்கிறாள். அசைவில்லை.

மருத்துவர்கள் நம்பிக்கையும் தரவில்லை, மிரட்டவும் இல்லை. அவர்களும் வந்து பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்குப் புரியுமா, அவள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்பது?

மருத்துவம் அறிவியல் சாத்திரம் இவற்றுக்கு ஞானக் கண்கள் கிடையாது. அவற்றின் அளவுகோல்கள், சூடு குளிர்ச்சி மாற்றி மாற்றி அளக்கின்றன என்பாள் அவள்.

அந்த முதல் நாள் முத்தம் பெற்றுக் கொண்ட போது இப்படித் தான் கண்கள் மூடித் தென்பட்டாள். உள்ளுக்குள் திறக்கும் விழிகள் வேண்டும் காதலுக்கு என்பது அவளது காதல் விதி இரண்டு. முதலாம் விதி, புன்னகை. முற்றிய காதல் ஊர் தெரியும் சிரிப்பு என்பது முதலாம் விதியின் உட்பிரிவு ஒன்று.

பெருமூச்சு விட்டான் ரவி.

சன்னமாக அவள் பெயரைச் சொல்லி அழைத்தான். காத்திருந்தான். அப்படியான பொழுதுகளில் இலேசாக சிலிர்த்துக் கொள்ளும் அவள் கன்னங்கள். உதட்டில் மலர்விப்பாள் காதல் குறுநகை ஒன்று.

எதுவும் அசைவற்று இருக்கிறாள் அவள்.

காத்திருக்கும் அவனுள் இயங்கிக் கொண்டே இருக்கிறது அவளது மூர்க்கமான காதல்.

பார்த்துக் கொண்டிருக்கிறான். இன்றோடு மூன்றாவது நாள். முன்னூறு ஆனாலும் காத்திருப்பான்.

அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவன் தவிப்பை உள்ளாக.

5 Comments on “காதலின் கண் திறப்பு”

Comments are closed.