முடியாத ஓவியம்


நாகேந்திர பாரதி

தூங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தின் அழகை முழுமையாகத் தன் ஓவியத்தில் கொண்டு வர முடியாத தன திறமைக் குறைவைப் பற்றிக் கொஞ்சம் கவலை இருந்தாலும் அவள் தன்னுடையவள் என்ற பெருமையில் அந்தக் கவலை கொஞ்சம் தணிந்து போனது .

அவளுக்குப் பூசப் பிடிக்காத உதட்டுச் சாயத்தை அவள் ஓவிய உதடுகளில் தீட்டிக் கொண்டு இருக்கும் போது அவள் சற்றே புரண்டு படுத்தது , அந்தச் செய்கை அவளுக்குப் பிடிக்கவில்லை என்று உணர்த்தியது போல் இருந்தது . அவளை வரைவது அவளுக்குப் பிடிக்காது என்று அவனுக்குத் தெரியும் .

இனி இந்த ஓவியத்தை முடிக்க முடியாது என்றே அவனுக்குத் தோன்றியது . படிக்காத புத்தகம் போல் இந்த முடிக்காத ஓவியமும் ஒரு புதிராகவே இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான் .
மெதுவாகப் புரண்டு எழுந்து அமர்ந்தவள் நிமிர்ந்த நிலை அவனைக் கொஞ்சம் தடுமாறச் செய்தாலும் பின்னாலே கலைந்த கூந்தலை அவள் சுருட்டி ஒரு அவசரக் கொண்டையாய் முடிந்த விதம் அவனுக்கு இன்னொரு ஓவியக் காட்சி .

ஓரக் கண்ணால் அவனைப் பார்த்து முறுவலித்த அவள் கண்களில் பட்ட அந்த காகிதமும் பென்ஸிலும் அவள் முகத்தில் ஓர் அதிர்ச்சியை வரவழைத்தது .
‘எத்தனை தடவை சொல்லியாச்சு , இந்தப் பழக்கத்தை இன்னமும் விடலியா நீங்க ‘

‘இல்லேம்மா , சும்மா கொஞ்ச நேரம் ‘
‘ இப்படியே , படம் படம் னு வரைஞ்சுக்கிட்டு நல்ல சம்பளத்தில் கிடைச்ச எந்த வேலையும் ஒழுங்கா பார்க்காம , எத்தனை வேலை போயாச்சு .
படங்களா வரைஞ்சு தள்ளி ஓவியக் கண்காட்சி எல்லாம் வச்சுப் பார்த்தீங்க . என்ன காசு கிடைச்சுச்சு . செலவு பண்ணது தான் மிச்சம் . பிரமாதம் , சூப்பர் என்று சொன்ன யாராவது ஒரு படமாவது வாங்கினாங்களா சொல்லுங்க ’ என்று முறைத்தவளையே உற்றுப் பார்த்தான் .

வேகமாகப் பேசும்போது முட்டுவாயை லேசாக உயர்த்தி முகத்தை லேசாக ஆட்டியபடி அவள் பேசுவது ஒரு அழகு .
‘ என்ன யோசனை ‘ என்று அவனைப் புரிந்து லேசாகச் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு ‘ இதுக்கெல்லாம் மயங்கிடக் கூடாது , உலகத்தைப் புரிய வைக்கணும் இவருக்கு , கம்பியூட்டர் இன்ஜினியரிங் முடிச்சுட்டு இவர் கூடப் படிச்சவன் எல்லாம் நியூயார்க் , லண்டன்னு போயி குடும்பத்தோடு செட்டில் ஆயிட்டாங்க . இவரு மட்டும் ஓவியத்தை வச்சுக்கிட்டு கிடைக்கிற வேலை எல்லாம் ஒழுங்கா பாக்காம விட்டுட்டு விளையாடுறாரு . ரெண்டு புள்ளைங்க ஆச்சு . இவரைத் திருத்தவே முடியலே ‘ என்று யோசித்து யோசித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள் .

அன்று இரவு குழந்தைகள் தூங்கிய பின் அவனை அழைத்துச் சொன்னாள் .
‘ உங்க ஓவியத் திறமை எனக்குப் புரியுதுங்க . நான் வேண்டாங்கலே . ஒண்ணு பண்ணுங்க . இன்னையிலே இருந்து நான் உங்களுக்கு மாடல்லா இருந்து போஸ் கொடுக்கிறேன் . எனக்குத் தெரியும் உங்க டேஸ்ட் . இப்படி உதட்டைச் சுழிக்கணும் , இப்படி முட்டு வாயை உயர்த்திப் பார்க்கணும் , இப்படி ஓரக்கண்ணால் சிரிக்கணும் , அவ்வளவுதானே ‘ என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கேட்டான் . ‘எப்படி உனக்கு இதெல்லாம் ’ .

‘ அது தான் தெரியுமே , எப்பல்லாம் அசடு வழிய கொட்டக் கொட்டப் பார்க்கிறப்போ எல்லாம் மனசுக்குள்ளே நோட் பண்ணி வச்சிருக்கேனே ’ .
‘ஆனா ஒண்ணு ,எல்லாப் படங்களும் நம்ம பார்வைக்கு மட்டும்தான் . சரியா ‘

‘பகல்லே ஒழுங்கா , அங்கே வாங்கி வச்சிருக்கற ‘ஆரக்கிள் ‘ சாப்ட்வேர் புக் ‘ எல்லாம் ஒழுங்கா படிச்சு கம்ப்யூட்டர் வேலை ஒழுங்கா பார்த்து எங்களை எல்லாம் நியூயார்க் கூட்டிட்டிப் போற வழியைப் பாருங்க ‘ என்று செல்லமாக அவன் காதைத் திருகியபோது அவள் குறும்பு முகம் அவன் மனதில் ஒரு ஓவியக் காட்சியாகப் பதிந்தது .