
பிறந்த நாள் காலையில்
எங்காவது ஒரு செடியில்
வழக்கமாக பூப்பதைவிட
ஒரே ஒரு மலர் கூடுதலாக பூத்திருந்தால்
அதை எனக்குத் தாருங்கள்
அதோடு சம்பிரதாயமான
அணைப்புகள் நடுவே
ஒரு உண்மையான அணைப்பு
நிகழ வேண்டும்
மேலும்
ஒருவனது பிறந்த நாளில்
அவனது குற்றங்கள்
தற்காலிகமாக மன்னிக்கப்படவேண்டும்
எல்லாவற்றையும்விட
என் பிறந்த நாளில்
இந்தக் கால்வலி
சற்றே குறைவாக இருக்கவேண்டும் என்ற
குறைந்த பட்ச சலுகை
எனக்கு அளிக்கப்படவேண்டும்
சிநேகிதிகள்
பிறந்த நாள் பரிசாக வாங்கித் தந்த
அளவு குறைவான சட்டைகளின் பொருட்டு
நான் ஒரே நாளில்
இளைக்க முடிந்தால் நல்லது
மற்றபடி
என்னை நினைத்துக்கொண்டவர்களாலும்
பிடிவாதமாக மறந்துவிட்டவர்களாலுமான
இந்த நாள்
இப்போதுதான் துவங்குகிறது
சீக்கிரமே
அது போய்விடும்
15.3.2023
அதிகாலை 4.46
