
இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன.
பாலு தவறாது வருகிறார். நாளை வாருங்கள் என்று நாள்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறான் சங்கரன்.
பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் சிவன் ஆலயம். கிட்டத்தட்ட ஆயிரமாண்டு பழமையானது. அரசர்களும் அரசிகளும் வழிபட்ட தலம். பக்கத்தில் பெரிய குளம். நான்குபுறமும் படிக்கட்டுகள் அதில் கம்பளம் விரித்ததுபோல் அல்லிகள் மலர்ந்து கிடக்கின்றன. பச்சைத் தட்டில் பன்னீர்சொம்பை வைத்ததுபோல் அல்லிகளும் இலைகளும்.
சரஸ்வதி பூசை சமயங்களில் பறித்து வந்து மாலைக் கட்டி அழகு பார்த்தது உண்டு.
இப்போது அந்தக் குளத்தில் துணி வெளுப்பவர்கள் துணி துவைக்கப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆற்றிலிருந்துதான் அதற்குத் தண்ணீர் போகிறது. துணிகள் துவைக்கும் சப்தமும் அதற்கேற்ப அவர்கள் வாயிலிருந்து வரும் ஒலியும் இசைப்பதுபோலக் கேட்கிறது. குளக்கரைகளில் எதிரெதிர கம்புகளில் கட்டப்பட்ட கயிறுகளில் துவைக்கப்பட்ட துணிகள் காய்கின்றன குளத்திற்கு நன்றிசொல்வதுபோல அசைந்தபடி. அழகு.
ஒருசிலரின் முயற்சியால் அந்த ஆலயம் புதுப்பிக்கப்படுகிறது.
ஓய்வூதியம் வாங்குபவர்கள் தரும் ஓய்வூதியப் பணத்திலும், பலரிடம் வசூல் செய்தும் திருப்பணியை மேற்கொள்கிறார்கள். இதற்கானத் தொடக்கத்தைய உருவாக்கியவர் பாலு என்றாலும் இயல்பில் கை சுத்தம் இல்லாதவர். ஓயாமல் பேசுவார். தேவையில்லாத கதைகள் பேசுவார். கைசுத்தமும் வாய் சுத்தமும் இல்லாதவர் என்றாலும் சிவனின் பெயரைச் சொல்லிக் கேட்பதால் கொடுக்காமல் இருக்கமுடியாது. சங்கரன் கொடுத்துதான் தீரவேண்டும். சிவகாரியம். இருப்பினும் தள்ளிப்போடுகிறான்.
சங்கரன் மனைவி சொன்னாள்.. “இது நல்லா இல்லீங்க.. கோயில் காரியம் இழுக்கப்போடாதீங்க.. கொடுக்கலேன்னா இல்லன்னு சொல்லிடுங்க.. கொடுக்கறதா இருந்தா கொடுத்துடுங்க.. அவர் செய்யுற தப்ப அவன் பாத்துக்குவான்..”
பாலுவிடம் சட்டென்று சங்கரன் கொடுத்துவிட்டான்.
“சங்கரன்.. இதுல உங்க சார்புல நீங்க சொன்னமாதிரி மணி வாங்கிக் கட்டிடறேன்..”
“பரவாயில்லை,” என்றான் சங்கரன்.
அன்று சனிக்கிழமை. அந்தக் கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பிப்போனான் மனைவியுடன் சங்கரன்.
கோயிலில் எலக்ட்ரிசியன்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோயிலைச் சுற்றி வணங்கிவிட்டு வந்து உட்கார்ந்தான் சங்கரன். அப்போது ஒரு வயதான பெண்மணி சுமார் அறுபதுக்குமேல் வயதிருக்கும். முகமெங்கும் வியர்வைத்துளிகள். கருத்துப்போன உடம்பு. தளர்வு இருந்தது உடம்பில். நரையோடிய தலையும் மெலிந்த கைகளில் நரம்புகள் புடைத்தும் கிடந்தன.
கையில் ஒரு சிறிய சொம்பு இருந்தது. வந்து பாலுவிடம் நீட்டினாள்.
பாலு அந்த பால் சொம்பை வாங்கிக்கொண்டதும் அந்தப் பெண்மணி உட்கார்ந்தாள். பாலு கேட்காமலேயே சொன்னார்
“சங்கரா.. இந்தம்மா கோயிலுக்கு எதிரே குடிசை போட்டிருக்கு.. இங்கதான் ரொம்பநாளா வசிக்குது. கறவை மாடுங்க வச்சிருக்கு. கோயில் வேலை ஆரம்பிச்சதும் தவறாம தினமும் பால் கொடுத்துடும்.”. என்று சொல்லியபடியே உள்ளே போனார் பால் சொம்பை வைத்துவிட்டுத் திரும்பி வந்து உட்கார்ந்துகொண்டார்.
அந்தப் பெண்மணி ஒரு மஞ்சள் பை வைத்திருந்தாள். அதை பாலுவிடம் நீட்டினாள்.
“என்னம்மா இது?”
“இதுல கொஞ்சம் பணம் இருக்கு எண்ணிக் கொடுங்க” என்றாள்.
“அப்படியா.. “என்றபடி மஞ்சள் பையை அப்படியே தரையில் கவிழ்த்தார். ஐந்து ரூபாய்கள்.. பத்து ரூபாய்கள்.. ஐம்பது ரூபாய்கள்..நூறு ரூபாய்கள் அப்புறம் சில்லரை காசுகள்.. எல்லாவற்றையும் எண்ணத் தொடங்கினார்.. “சங்கரா நீ கொஞ்சம் எண்ணிக்கொடு” என்று கொஞ்சத்தை சங்கரனிடம் நகர்த்தினார்.
மொத்தம் 5675 ரூபாய் இருந்தது.
பாலு அவளிடம் நீட்ட.. அந்தப் பெண்மணி தடுத்து.. “ஐயா.. என்னால முடிஞ்சது.. இந்தக் கோயில் செலவுக்கு வச்சுக்கங்க..” என்றாள். சங்கரனுக்கு மனதுக்குள் அதிர்வு வந்தது.
அவள் சொன்னாள்.
“பால் விக்கற காசுல தினமும் அஞ்சு ரூபாய் கணக்கு வச்சி எடுத்து வச்சிடுவேன்.. ஒரு அய்யாயிரம் கொடுக்கணும்னு நெனச்சேன்.. முடியல.. மூவாயிரம்தான் சேந்துது.. கோயிலு வேலை முடிக்கறதுக்குள்ள கொடுக்கமுடியுமான்னு ஐயப்பாடு.. போனவாரம் கன்னுக்குட்டி உடம்புக்கு முடியாம கெடந்துபோச்சு.. செத்துப்போயிடும்னு நெனச்சேன்.. அப்புறம்வேண்டிக்கிட்டேன் இங்கதான்.. பொழச்சுக்கிடிச்சு.. இப்போ அந்தக் கன்னுக்குட்டிய வித்துப்புட்டேன்.. ரெண்டாயிரம் தேறுனுச்சி..சரின்னு சேத்து கொண்டாந்தேன்.. இப்போ அய்யாயிரத்த தாண்டுனது சந்தோஷமா இருக்கு.. கன்னுக்குட்டி செத்துப்போயிருந்தா நஷ்டந்தானே.. அவருதானே பொழக்க வச்சாரு.. சரி அது அவரோட சொத்துன்னு வித்துப்புட்டேன்.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு. காசு பணம் சேத்து நான் என்ன பண்ணப்போறேன் மாடிவீடு கட்டியா வாழப்போறேன்.. எனக்கு இதுபோதும்.. சாகும்வரைக்கும் அவரக் கும்பிட்டுட்டுப்போயிடுவேன்.. நான் வரேங்க ஐயா..” என்றபடி எழுந்து போனாள்.
சங்கரன் மனைவி சங்கரனை ஒரு பார்வை பார்த்தாள். பாலு எழுந்து உள்ளே போனார் மஞ்சள் பையை வைக்க. சங்கரனிடம் சொன்னாள் “நம்பிக்கைதான் எதுக்கும்.. வாங்க” என்றாள். எழுந்து சிவனை வணங்கிவிட்டு நடந்தார்கள் அமைதியாக ஓடும் மணிமுத்தாறைப் பார்த்தபடி.
