ஆஹூதி/பானு நட்ராஜ்

               

சங்கரின் அறையில் அவன் பெட்டியை இழுக்கும் சத்தம் கேட்டது. எங்கேயாவது ஊருக்குப் போகப் போகிறானா என்ன? சாப்பிடும் போது கூட ஒன்றும் சொல்லவில்லையே, அப்படித் திடீர்ப் பயணம் செய்ய வேண்டிய வேலையிலும் அவனில்லை. மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அவன் அலுவலகம். அங்கே எழுத்தராக வேலை பார்க்கிறான்; எந்தப் பதவி உயர்வும் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறான். அவன் ஊரோடு வீட்டோடு இருப்பது நன்றாகத்தானிருக்கிறது. அழகான, வசதிகளோடு, சின்னத் தோட்டத்தோடு கூடிய சொந்த வீடு. அவர்கள் இருவர் மட்டும் தான். திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். இருக்கட்டும், இருக்கட்டும் இப்போது இருவத்திமூன்று வயதுதானே, போகப் போக ஒத்துக் கொள்வான். ஆனால், அவன் கூட்டாளிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். சம வயதுக்காரர்கள். என்னென்னவோ படிக்கிறார்கள், பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், டென்னிஸ் ஆடுகிறார்கள், ராத்தூக்கமின்றி மொட்டை மாடியில் படுத்துக் கொண்டே அரட்டை அடிக்கிறார்கள். யார் வீட்டிலும் ஒன்றும் இவர்களைக் கேட்க மாட்டார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இந்த வீட்டில் சங்கருடன் தான் தங்கள் பிள்ளைகள் இருப்பார்கள் என்பதெல்லாம் நிச்சயமாகத் தெரியும். இந்த க்ருப்பில் உள்ளவர்கள் இந்த ஊர்க்காரர்கள் தான். வெவ்வேறு வேலை பார்ப்பவர்கள். சனிக்கிழமையன்று இரவு ஒன்பது மணிக்குச் சேரும் ஜமா விடிய விடியப் பேசும். காலை எட்டு மணிக்கு இவர்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் இழுத்துக் குளித்து விட்டு, பழைய ஆடையையே போட்டுக் கொள்ளும். இவரையும் கூட்டிக் கொண்டு பக்கத்து ஓட்டலில் காலை உணவை ஒரு கை பார்க்கும். மீண்டும் மூன்று மணிக்கு கூட்டுச் சேர்வார்கள். தடித்தடியாய் புத்தகங்கள், கலர் கலராய்த் தாள்கள், பேனாக்கள், குறிப்புகள்; அவர் அதை அறிய முயன்றதில்லை. அதெல்லாம் சரி, இப்போது எங்கே போகப் போகிறான் அவன்?
சங்கர் ஒரு பெரிய பெட்டியை எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தான். “அப்பா, குத்தாலம் போறோம்; மூணு நா லீவில்லையா? மது தான் திடீர்ன்னு சொன்னான், சரின்னு கிளம்பிட்டோம்.”
‘சீசனாச்சேடா, தங்க இடமெல்லாம் கிடைக்குமா?’
“நந்துவோட மாமா வீடிருக்குப்பா; அவா ஏதோ கல்யாணத்துக்காக ஒரு வாரம் மதுரைக்குப் போறா. தங்கறது, திங்கறது, குளிக்கறது, தூங்கறதுன்னு ஜாலிதான்.” என்று சிரித்தான் அவன்.
‘மூணு நாளக்கி இவ்ளோ பெரிய பெட்டி எதுக்குடா?’
“சந்துரு கேம்ப் ஆஃபிஸிலேந்து நேர வராம்ப்பா. என் ட்ரஸ் அவனுக்கு சரியா இருக்கும்.”
‘நீங்க அஞ்சு பேர் மட்டும் போறேளா?’
“ஆமாம்ப்பா, சரி, வரட்டா, மூணே நாள்தான், ஓடி வந்துடுவேன்.”
‘சரிப்பா, ஜாக்ரதையா போய்ட்டு வாங்கோ. எதுக்கு ரூம பூட்டிப் பூட்டி வக்கற? பாக்யத்தம்மா அதை பெருக்க முடியலேன்னு பொலம்பறா. சாவியக் கொடுத்துட்டுப் போ. க்ளீன் பண்ணச் சொல்றேன்.’
அவன் மௌனமாக சாவியை மேஜையில் வைத்துவிட்டு, அவரைப் பார்த்து தலையசைத்துவிட்டு பெட்டியுடன் கிளம்பினான்.
மூன்று நாட்கள் தனியாக இருக்க வேண்டும். அவருக்கும் அவர்களுடன் குற்றாலம் போக ஆசைதான். வெட்கத்தை விட்டுக் கேட்டிருப்பார். ஆனால், ஏதோ தடுத்தது. குற்றாலம் என்றாலே லா ச ராவின் நினைவு எழுந்துவிடும் அவருக்கு. முதன்முதலில் அந்த ஐந்தருவியைப் பார்த்ததை அவர் தான் என்னமாய்ச் சொல்லியிருப்பார்! ‘மலையின் மீது மூதன்னை தன் நரை மயிரை விரித்து ஆற்றிப் பரவவிடும் ஜீவத் துளிகள்.’ இப்படித்தான் அந்த அனுபவம் அவருள் தங்கியிருக்கிறது.
எப்போது தூங்கினார் என்பது நினைவிலில்லை. ஏதேதோ செய்தார்- பொழுது போகவில்லை. சங்கர் என்ன எப்போதுமா கூட இருக்கிறான்? அவன் படிக்கப் போகையில், பின்னர் வேலை பார்க்கையில் பகல் முழுதும் அவரை விட்டுப் பிரிந்துதானே இருக்கிறான்? வசு இருந்த போது இவர்கள் இருவருமே அவளைத் தனியாகத்தானே பகல் வேளையில் விட்டு விட்டார்கள். அவள் அப்போது என்னமாய்த் தவித்தாளோ? ஒரு நாள் சட்டென்று இறந்து போனாள்; கண்களில் உயிர்த் தாகம் நிரம்பித் தளும்பியது. அவர் கைகளைப் பற்றியிருந்த அவள் கைகள் அழுந்தின; பிடித்துக் கொள், விட்டுவிடாதே எனக் கெஞ்சின. பறந்து செல்லும் அந்த உயிரை அவரால் பிடிக்க முடியவில்லை. அவள் வாசனையை இங்கே கிடத்திவிட்டு மூச்சுக் காற்று சென்றதெங்கே? எதைத் தேடிச் சென்றது அது? இங்கில்லாதது வேறெங்கே கிடைக்கும் அதற்கு? உறவும், பிரிவும் வலியுமாக வாழும் இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சித் தருணங்கள் இருக்கிறதுதான். ஆனால், அவையெல்லாம் மணலில் செதுக்கிய பெயரை கடலலை அழிப்பது போலத்தான். பிரிவும், வலியும், கல்வெட்டுக்கள்.
அவர் தலையை உலுப்பிக் கொண்டார். பாக்கியத்தம்மா இன்னமும் வரவில்லை. காலை பத்து மணிக்குப் பிறகு அவள் வரமாட்டாள். பாவம், தள்ளாத வயதில் வீட்டு வேலைகள் செய்து அடிவயிற்றுத் தீயை அணைக்கிறாள்.
முதலில் பாத்திரங்களைத் தேய்த்துக் காய வைத்தார். வீட்டைப் பெருக்க ஆரம்பித்த போது சங்கரின் ரூமையும் நாமே சுத்தம் செய்துவிடுவோம் எனத் தோன்றியது. உடலுக்கு வேலை கொடுக்காவிட்டால், மனம் கண்டதை நினைக்கத் தொடங்கி விடுகிறது. ஓரளவிற்கு சுத்தமாக இருந்தாலும், மேலே, கதவிடுக்கிலே, பரணிலே, ஒட்டடை படிந்திருந்தது. பழைய ஒட்டடைக் குச்சியை போன வாரம் தூக்கி எறிந்த பிறகு புதிது வாங்கவில்லையே, என்ன செய்வது என யோசித்தார் அவர். சரி, துடைப்பத்தால் எடுக்க முடிந்த அளவு செய்வோம் என்று ஹாலிலிருந்து ஸ்டூலை எடுத்து வந்து பரணை சுத்தம் செய்யத் துவங்கினார். எக்குத் தப்பாகப் பட்டு கற்றைக் காகிதங்கள் கீழே விழுந்தன.
அவர் சிரித்துக் கொண்டார்- அப்படியே வசுவைப் போல எதையெதையோ சேர்த்திருக்கிறான். அவர் வம்படியாக பழைய பேப்பர்க்காரனை வீட்டிற்கு அழைத்து வந்து அதையெல்லாம் போட முயன்றால், அவள் அதை அட்டைப் பெட்டி கொண்டு வந்து அள்ளித் திணித்து சமையலறைப் பரணில் ஏற்றி விடுவாள். அவர் நாளிதழ்களை எடைக்குப் போட்டுவிட்டு அமைதியாகிவிடுவார்.
சங்கரும் அம்மாவிற்குத் தப்பாமல் காகிதங்களை, புக்ஸை சேமித்திருக்கிறான். சரி, அவன் தான் ஊரிலில்லை; தொலைக்காட்சியைப் பார்ப்போமென்றால் பயமாக இருக்கிறது. அதில் வரும் நிகழ்ச்சிகளில், பெண்கள் தயக்கமில்லாமல் காவல் நிலையம் போகிறார்கள், விஷம் வைக்கிறார்கள், இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார்கள், அதீத மேக்கப்புடன் இருக்கிறார்கள்; ஆண்களப் பற்றி கேட்கவே வேண்டாம்- புதராக தாடியும், மீசையும், இல்லையென்றால் மழு மழுவென்ற முகம், அரக்கி அரக்கி நடப்பதும், கொடூரங்களை அலட்சியமாகச் செய்வதும், எதிலுமே இயல்பான நடத்தைகள் இல்லை எவருக்கும். அவருக்கு மனம் கசந்தது. அப்படி என்ன தான் சங்கர் வைத்திருக்கிறான், படிப்போம் என்று தோன்றியது. அந்தப் பெட்டிகளை கூடத்தில் வைத்து விட்டு அவர் சங்கரின் அறையை சுத்தப்படுத்தி விட்டு மீண்டும் குளித்தார். மோரைக் கடைந்து பெருங்காயமும் சிறிது உப்புமிட்டுக் குடித்தார்.
பக்க எண்கள் இட்டு மணி மணியான கையெழுத்துக்களில் மூன்று கோப்புகள் இருந்தன. மற்ற இரண்டு பெட்டிகளிலும் இந்தக் கோப்புகளின் நகல்கள்.
“உத்கர்ஷன்” என்ற தலைப்பு அவரை மிரட்டியது. என்னதிது, ஏதேனும் நாடகம் போடப் போகிறானா? அதற்குத்தான் அப்படிக் கூடிக்கூடிப் பேசினார்களா?
“அவனை நாமெல்லாம் மறந்து வருடங்களாகி விட்டன. இருபத்தி ஐந்து வயது இளைஞன், இந்த நாட்டிற்காகத் தன்னை பலியிட்டான் என்றெல்லாம் யாரும் சொல்லக் காணோம். அவன் குடும்பம், அவனது இளம் மனைவி, அவள் அப்போது சுமந்து கொண்டிருந்த கரு, அவர்களெல்லாம் பின்னர் என்னவானார்கள்? இதையெல்லாம் நாம் ஏன் எண்ண வேண்டும்? அவன் பிணத்தை வாங்கி எரியூட்டி இறுதிக் காரியம் செய்ய அவன் தந்தையே முன் வரவில்லையே?” இந்த வரியைப் படிக்கையில் இவர் அதிர்ந்து போனார். பேசாமல் மேலே படிக்காமல் நிறுத்தி விடலாமா என்று கூட நினைத்தார். ஆனால், அவர் இதுவரை அறிந்திராத சங்கர் இந்தத் தாள்களில் இருக்கிறான். அதற்காகவாவது தொடர்ந்து படிக்கத் தான் வேண்டும்.
“அரசை எதிர்த்தால் ஆவது இதுதானே என்று எத்தனைச் சுலபமாகச் சொல்லி விடுகிறோம்!
சோழ அரசர்கள் கடற்பயணங்கள் செய்து பல நாடுகளை வென்று சரித்திரம் படைத்தார்கள் என்று பெருமைப் படுகிறோமே? நம் கடலில், நம் கப்பலில், நம் வணிகத்தைச் செய்யத் துணிந்த அந்த சிதம்பரம் பிள்ளையைக் கொண்டாடிய, அவருக்காகப் பழி வாங்கச் செயல்பட்ட இந்த இளைஞனை ஏன் பழிக்கிறோம்?
மூலம் திரு நாள் மகாராஜா கல்லூரியில் சிரிப்பும், விளையாட்டும், கல்வியில் சிறப்பும், ஒருங்கே அமைந்த அவன் எம் ஏ படித்துக் கொண்டிருந்த சமயம். அவனுக்கு பொன்னம்மாளுடன் திருமணமும் ஆகியிருந்தது அப்போது. பாரத மாதா சங்கத்தில் அவன், சுப்பையா என்ற சுப்ரமண்ய பாரதி, நீலகண்ட பிரும்மச்சாரி, வ வே சு ஐயர், க்ருஷ்ணன் சங்கரன் போன்றோர் அங்கத்தினர்களாக, திலகரைப் பின்பற்றுபவர்களாக, சிதம்பரத்திற்கும், சிவாவிற்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளால் கொதிப்படைந்தவர்களாக செயல்பட துடித்துக் கொண்டிருந்தனர்.
திருநெல்வேலியில் வரி வசூல் ஆட்சியராக இருந்தவன் ராபர்ட் வில்லியம் எஸ்கோ(ர்)ட் ஆஷ் என்ற கொடும் பாவி. அனைத்து விவசாயிகளும் அவனைக் கண்டு நடுங்கினார்கள். பயிர் விளைந்தாலும், இல்லாவிட்டாலும் கடும் வரி செலுத்த வேண்டும்- இல்லையேல் நிலம் பறிமுதல் செய்யப்படும். சொத்து வரி, உணவுப் பொருட்களின் மீது வரி அனைத்தும் பொது மக்களை வாட்டி வதைத்தன. ஏழைகள் மிக ஏழைகளாக, நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாக, பணம் படைத்தோர் நெற் களஞ்சியங்களை விற்று வாழ்பவராக உரு மாறினர். இரு வேளை உணவென்பது ஒரு வேளைக்குக்கூட போதும் போதமலாயிற்று. இந்த ஆஷைத் தான் நம் அறிஞர்கள் போற்றுகிறார்கள்- அதுவும் எப்படித் தெரியுமா? அவர், தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த கர்ப்பிணியைத் தன் பெட்டி வண்டியில் ஏற்றி மருத்துவ விடுதிக்கு அனுப்பினாரம். கேழ்வரகில் நெய் வடிகிறது, கேளுங்கள். செங்கோட்டைக்கும், திருநெல்வேலிக்கும், தென்காசிக்கும் இடையே உள்ள தூரத்தை அறியாதவர்கள் சொல்லும் கட்டுக் கதை அது. ஆறிழை நூலை இடது தோளிலிருந்து அணியும் குலத்தில் பிறந்தவன் நான் சொல்லும் இளைஞன் என்பதால் கட்டுக் கதைகளை கேள்வி கேட்பாருமில்லை; அப்படியே கேட்டுவிட்டாலும் அது சிலர் காதுகளுக்குக் கூடப் போவதில்லை.
சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கிய குற்றத்திற்காக மட்டும் ஆஷ், நம் சிதம்பரனாரைத் தொல்லை செய்யவில்லை. வ உ சி தொழிலாளர்களுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தார். அதுதான் ஆஷ் சிதம்பரத்தின் மீது கொண்ட வெறுப்பிற்குத் தூண்டுதல். ஹார்வி மில்லில் இந்திய, தமிழகத் தொழிலாளர்களைக் கடுமையாக வேலை வாங்கினார்கள்-ஆனால், ஊதியம் மிகவும் குறைவு. அந்த மில்லிற்கு ஆஷின் ஆதரவு அதிகம். சிதம்பரத்தை அப்புறப்படுத்த ஆஷ் செய்த சதியால் சிதம்பரம், சுப்ரமண்ய சிவா இவர்கள் கைதானார்கள். தந்திரக் குள்ள நரி போல, சுதேசிக் கப்பல் நிறுவனத்தையும் ஆஷ் கையகப்படுத்தினான்.
இவையெல்லாம் சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இளைஞனான வாஞ்சிநாதன், சங்கர் க்ருஷ்ணன் ஐயரால் போராட்ட வழிக்கு அறிமுகப்படுத்தப்பட்டான். சிதம்பரமும், சிவாவும் அனுபவித்த கொடுமைகள் அவன் இரத்தத்தைக் கொதிக்கச் செய்தன. காலம் அதற்கேற்றாற் போலக் கனிந்து வந்தது. நீலகண்ட பிரும்மச்சாரியுடன் நெருக்கம் அதிகமாயிற்று.
அவரைச் சந்திக்க புதுச்சேரிக்கு வாஞ்சிநாதன் வந்த போது அவர் ஊரிலில்லை; ஆனால், வ வே சு ஐயர் இவனின் வேகத்தை, விவேகத்தைக் கண்டு கொண்டார். மேடம் காமா இரகசியமாக அனுப்பி வைத்த துப்பாக்கிகளைக் கொண்டு, அதை இயக்கும் பயிற்சிகளை வாஞ்சிக்கு அவர் கற்றுக் கொடுத்தார். வாஞ்சி ஊர் திரும்புகையில் கையில் துப்பாக்கியோடு வந்தான்.
இங்கிலாந்தின் ஜார்ஜ் 5, இந்தியாவின் அரசராக முடி சூடி இந்தியா வருகிறார் என்ற செய்தி, விடுதலை வேள்வியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை மிகவும் பாதித்தது. யார் நாட்டை யார் ஆள்வது? நாம் காமதேனு என்றும், அன்னை என்றும் போற்றும் பசுவை வதைத்து அதன் மாமிசத்தை ருசிப்பவன் இந்தியாவின் அதிபதியா? எங்கே போயின நம் தர்மங்கள்? எப்போதிலிருந்து நாம் முதுகெலும்பற்றவர்களாக மாறிப் போனோம்?
நீலகண்ட பிரும்மச்சாரி ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி ஆஷை சுட்டுக் கொல்வதென்பதும், அதன் மூலம் பிரித்தானிய அரசை எதிர்ப்பதென்றும் முடிவானது. துப்பாகியால் சுடுவதில் தேர்ச்சி பெற்றிருந்த வாஞ்சி நாதன் இச்செயலுக்காகத் தேர்வு செய்யப்பட்டான்.
அன்று 1911 ம் வருடம் ஜூன் 17ம் தேதி. அயர்லாந்திலிருந்து வந்திருந்த தன் மனைவி மேரி வில்லியம் பேட்டர்சன்னுடன் இரயில் நிலையம் வந்த ஆஷ், கொடைக்கானல் செல்லும் இரயிலில், மணியாச்சியில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்தார். அவர்களது நான்கு குழந்தைகளும் கொடைக்கானலில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் வகுப்புப் பெட்டியிலிருந்து இருவர் ஆஷின் பெட்டிக்கு வந்தார்கள். முதலில் ஒருவர் உள்ளே வந்தார். இந்திய அடிமை தன் பெட்டியிலா என ஆத்திரமடைந்த ஆஷ், தன் தொப்பியைக் கழற்றி வீசினார். சரியாக அதே நேரத்தில், வேட்டி அணிந்த வாஞ்சிநாதன் ஆஷைக் குறி பார்த்து மிக நெருக்கத்தில் சுட்டான். இரு இந்தியர்களும் தப்பி ஓடினர். ஓடுகையில் வாஞ்சி நினைத்தான்-
‘உனக்கு நினைவிருக்கிறதா, இறந்து கொண்டிருக்கும் பேயே? 1802 பிப்ரவரி 11ம் நாள். எங்கள் தமிழ் நாட்டவரை, 73 சுதந்திரப் போராட்ட வீர்ர்களை, பெனாங்கில் சிறை வைத்து, மருது சகோதரர்களுக்கும், வீர பாண்டிய கட்டபொம்மனுக்கும் உதவி செய்ததால், இராஜத் துரோகம் செய்தவர்களென்று தூக்கிலிட்டதே உனது அரசு. அதற்கு நான் இன்னும் எத்தனைப் பேரை சுட வேண்டும் தெரியுமா? ஆனால், இப்போது என்னை சூழ்ந்து விட்டார்கள். நான் உன் அரசிடம் சிக்குவேனா, என்ன?’ தன்னையே சுட்டுக் கொண்டு அவன், அந்த வீர இளைஞன், வந்தே மாதரம் என முழக்கமிட்டுக் கொண்டே இறந்தான். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, சங்கரன்க்ருஷ்ணன், தர்மராஜ ஐயர், வெங்கடேஸ்வர ஐயர், நீலகண்ட பிரும்மச்சாரி, வ வே சு ஐயர் உட்பட 13 பேரின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. தர்மராஜ ஐயரும், வெங்கடேஸ்வர ஐயரும் தற்கொலை செய்து கொண்டனர். அந்தப் பதின்மூன்று பேரில் ஒருவரான மாடசாமிப் பிள்ளை புதுச்சேரிக்கு தப்பி ஓடினார். பாரதிதாசன் அவருக்கு உதவி செய்து மலேயா செல்லும் கப்பலில் அனுப்பி வைத்தார். நீலகண்ட பிரும்மச்சாரி கொல்கத்தாவில் சரணடைந்தார். சோமசுந்தரம் பிள்ளை சரணடைந்து ‘அப்ரூவர்’ ஆனார்.”
இவர் அறிந்திருந்த செய்திகள் தாம் இவை அனைத்தும். ஆனால், நாடகம் போலில்லாமல் ஒரு உரை போல ஏன் இதை எழுதியிருக்கிறான்? எங்காவது பேசப் போகிறானா? இரண்டாம் பகுதியை படிப்பதா அல்லது அப்படியே வைத்து விடலாமா?
‘யுவ உத்கர்ஷன்’ என்று இரண்டாம் பகுதி தொடங்கியது. முஷ்டியை உயர்த்தும் நான்கு கைகள் நான்கு திசையிலும் பாரத அன்னையை பாதுகாப்பாக அரவணைத்து நிற்க இமயம் முதல் குமரி வரையிலான பரப்பில் பல நூறு உயர்த்திய கரங்கள் காணப்பட்டன.
“ஆம், வேளை வந்து விட்டது. தெளிவு பெற, திருத்தி எழுத இது தருணம். வரலாற்றில் நிகழ்ந்த அனைத்திற்கும் பழி வாங்குவதென்பது இயலாதது- அது முட்டாள்தனமும் கூட. ஆனால், நம்மை நாமே ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும்? ‘பாரத நாடு பழம் பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’. கனலும் நெருப்புண்டு நம்மிடத்தில். பொய் சொல்லததால் மட்டுமே ஒருவன் யோக்கியனாக மாட்டான்; உண்மையைச் சொல்லாமலிருந்தால் அதுதான் பெரிய அயோக்கியத் தனம். நாமனைவரும் ஒருவரே. நம்மில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெரும்பான்மையினர் என்ற பிரிவுகள் இல்லை. ஆண், பெண் என்ற பேதங்களும் இல்லை. செயல், செயல் செயல் இதுதான் நமது குறிக்கோள். எப்படிச் செயல்படுவது என்ற கேள்வி இயல்பான ஒன்றே. முக்கிய ஆவணங்களைப் பாருங்கள், படியுங்கள், பிழையற்ற தகவல்தானா என மாற்றுக் குறிப்புகளைப் படித்து அறிந்து கொள்ளுங்கள். முச்சந்திகளில், உங்கள் பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் பேசுங்கள். விடாமல் இதழ்களுக்கு எழுதுங்கள். எழுதுகோலை விட கூர்மையான ஒன்றில்லை. சரித்திர எடுத்துக்காட்டுக்களைத் திறம்பட கையாளுங்கள். நம் அடையாளம், ஜாதி, மதம், மொழி ஆகியவை அல்ல; இந்தியர் என்ற ஒன்றுதான் அடையாளம்.
இந்த சமத்துவம் என்பதொன்றும் ஒப்பனையல்ல. நீங்களே பார்க்கிறீர்கள்- ஒதுக்கீட்டின் மூலம் பலன் பெற்றவர்கள் மேலும் மேலும் அதையே சாக்கிட்டு தம் பொருளாதார நிலையில் பல படிகள் ஏறி உச்சியில் இருப்பதையும், தம் இனத்தைச் சேர்ந்தவருக்குக் கூட சிறிதும் நிதி உதவி செய்யாமலிருப்பதையும். அப்படியிருக்க, உங்கள் பகுதியில் இப்படிப்பட்டவர்களைப் பற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள். இதில் நாம் பழி வாங்கப் படலாம். பொய் வழக்குகள் போடப் படலாம். துணிவுடன் எதிர் கொள்ளுங்கள்.
இன்னும் சிலவற்றையும் நாம் தற்சமயம் செயற்படுத்த வேண்டும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்களில் வழக்குரைஞர்கள் பலர் இருந்தனர். ஆனால், இன்று நிலைமை வருந்தத்தக்கதாக இருக்கிறது. எந்தக் கட்சியிலும் அங்கத்தினர்களாக இல்லாதவர்கள் தான் வழக்கறிஞர்களாக பணி செய்யலாம் என்று சட்டத் திருத்தம் கேளுங்கள். இது அவர்களின் உரிமையைப் பறிப்பது என நினைத்தீர்களென்றால், இந்திய நலனுக்காக அவர்கள் உரிமை பலியிடப்படட்டும். அனுதாபிகளாக இருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பீர்கள் என்ற கேள்வியும் வரும். நாலைந்து வழக்குகளைப் பார்த்தாலே தெரிந்து விடுமே.
நாடாளுமன்றத்திலும், சட்ட சபைகளிலும் தொழிலதிபர்கள் இடம் பெறக்கூடாது. பெட்டிக்கடை வைத்திருப்பவரோ, பெரும் நிறுவனத்திற்கு அதிபரோ அவர்களுக்கு இந்த அமைப்புகளில் என்ன வேலை? அவர்கள் சட்டங்களை எப்படிக் கொண்டு வருகிறார்கள், அதனால் என்ன ஆதாயம் அடைகிறார்கள் என்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
முக்கியமான ஒன்று கல்வி. கேடில் விழுச் செல்வம் அது. உங்களுக்குத் தெரியுமா கல்வி, நம் நாட்டில், நமக்கான தர்மத்தில், நம்முடைய வழிமுறைகளில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கல்விக்குக் கட்டணம் என்பது ஒரு நாட்டின் எதிர்காலத்தை முடக்குவதாகும். ஒரு உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள். அது இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நகரத்தில் இயங்கும் ஒரு பள்ளி. அதில் எல் கே ஜி வகுப்பிற்க்கான 2017-18-ம் ஆண்டின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை, மக்களே வெறும் ரூ2,02,000/- மட்டுமே! இதிலும் விநோதம் அவர்களின் எல் கே ஜியின் படிப்புத் திட்டம்- ஒரு பாடத்திட்டம் கூட இந்தியரைப் பற்றி, அவர்களின் பண்பாடு, வரலாறு பற்றி இல்லை. நம் செவ்வியல் இசையோ, நாட்டுப்புற இசையோ இல்லை. இதில் படிப்பவர்கள் எந்தளவிற்கு இந்தியராக வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? இன்னமும் இந்த மூளைச்சலவைகளை நாம் ஏன் ஏற்க வேண்டும்? இந்தத் தருணத்தில் நம் வடகிழக்கு மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்திய இறையாண்மைக்கு எதிராக நடந்து வந்த, தீவிரவாதப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்பட்ட பள்ளியை அந்த மதத்தைச் சேர்ந்த அந்த கிராமத்துவாசிகளே இடித்து தரைமட்டமாக்கினார்கள்; அந்த ஆசிரியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து தகுந்த ஆதாரங்களோடு காவல் துறையினரிடம் அவர்களையும் ஒப்படைத்தார்கள். அவர்களை நான் நெஞ்சாறத் தழுவிக் கொள்கிறேன்.
நாம் கேட்க வேண்டியது இதுதான்- அனைவருக்குமான பொதுக் கல்வி கட்டணமில்லாமல் வழங்கப்படவேண்டும்; மதக் கல்விகள் அவரவர் வழிபாட்டிடங்களில் வெளிப்படையாக ஞாயிற்றுக் கிழமைகளில் ஓரிரு மணி நேரங்கள் தரப்படலாம்- அதன் பாடத் திட்டங்கள் உள்ளூர் குழுவால் கண்காணிக்கப்பட வேண்டும்.”
இவர் நினைத்தார்- என்ன ஒரு பித்துக்குளித்தனம் இதெல்லாம். எதையாவது நடைமுறைக்குக் கொண்டு வர முடியுமா? இளமையின் வேகத்தில் விவேகம் என்பதே இல்லையே? சரி, இப்படியெல்லாம் வேடிக்கையாகச் சிந்திக்கலாம். அதை முத்து முத்துக் கையெழுத்துக்களில் எழுதவும் செய்யலாம். மேடைகளில் கூட பேசலாம். என்ன பலன் கிடைக்கப் போகிறது? இவர்களைக் ‘கிளர்ச்சியாளர்கள்’ என்று ஆளும் கட்சி சொல்லும்; இவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் என்று எதிர்க்கட்சி சொல்லும். இந்த அரசியல் இழுபறி, ஆட்சி மாறுகையில் காட்சியும் மாறும் ஒன்று. இதை இதுவரை நேர் செய்தவர் யார்? அப்படிச் செய்பவர்களும் வழக்குத் தொடுக்க வேண்டியிருக்கிறது. அதிலும் சார்புகள் இருக்கின்றன. நம் மீடியாக்கள் பெரும்பாலும் வெளி நாட்டினரை, அவர்களுடைய முதலீடுகளைச் சார்ந்திருக்கின்றன. சில சில்லறைப் பரபரப்புகளைத் தவிர அவற்றிடம் எதுவும் எதிர்பார்க்க முடியாது. அவர் நெட்டுயிர்த்தார்.
மூன்றாம் பகுதி ‘வாஞ்சி சேனை’ என்றிருந்தது. அதில் அங்கத்தினர்களின் பெயர்கள் இருந்தன. இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும், அணித் தலைவர்கள் இருந்தனர். மாவட்டக் குழுக்களில் உள்ளவர்களுக்கான பணிகளும், தலைவர்களுக்கான பணிகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைவரும் தங்கள் வலது கை பெருவிரலைக் கீறி ஒரு சொட்டு இரத்தத்தைப் பதிய வைத்து எண்களை மட்டும் எழுதியிருந்தனர். முப்பதைந்து வயது வரை திருமணம் செய்யப் போவதில்லை என்ற உறுதிமொழி வேறு காணப்பட்டது.
‘வாஞ்சி சேனையின்’ முதல் அரங்க நிகழ்வு: நீரிலையில். அந்த முக்கிய உறுப்பினரைக் கடத்தி, கைவிடப்பட்டுள்ள காட்டு பங்களாவிற்குக் கொண்டு வர வேண்டும். அப்பகுதியில் இன்னமும் மூன்று நாட்கள் நல்ல மழை பெய்யும் என்று நிலவரம் சொல்கிறது. மழை அதிகம் பெய்யும் காலங்களில் அவர் தன் இரகசியக் காதலியின் வீட்டிற்கு யாருடைய துணையுமில்லாமல் செல்வார் என்று பட்சி சொல்கிறது. மழை நம்மைக் கரைத்து விடாது. அவரை இதைப் பயன்படுத்தி கடத்த வேண்டும், தேவையானால், வன்முறையைக் கையாளலாம். அந்தக் காட்டு பங்களாவில் அவரிடம் காணொளியில், அவரின் சொத்து விவரங்களை அவர் வாய் மொழியால் சொல்லி, நாம் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள பட்டியலுடன் சரிபார்த்து அதில் கையொப்பமும் பெற வேண்டும். பின்னர் அவரை அந்தத் தொகுதி மக்களின் முன் நிறுத்தி அத்தனை சொத்துக்களையும் அவர் மொத்தமாக அரசுப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவ மனைகளுக்கும் சரிசமாக பங்கிட்டுக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். அத்தனையும் அரசாங்கப் பெட்டகத்தில் வைக்கப்பட்டு அரசு அதை நிர்வகிக்கும். அவர் நம்மைப் போல ஒரு சாதாரண வாழக்கையில் தான் இருக்க முடியும். எக்காலத்திலும் அவருக்கோ, அவர் குடும்பதிற்கோ, வாரிசுகளுக்கோ, நண்பர்களுக்கோ எந்தப் பதவிகளும், அதிகாரங்களும் கிடையாது. மக்கள் முன் நிறுத்திய பிறகு நம் அங்கத்தினர்கள் கலைந்து போய்விட வேண்டும்; இதில் எந்தச் சபலத்திற்கும் ஆசைப்படும் அங்கத்தினர்கள் எவராயினும் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். ஒருக்கால், நம் திட்டம் தோற்று விட்டால் முடிந்த வரை தப்பிக்கப் பார்க்க வேண்டும்; இல்லையெனில் வாஞ்சியைப் போல நாம் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். உயிர்பயம் உள்ளவர்கள் இதில் ஈடுபட வேண்டாம்- காட்டிக் கொடுக்காமல் இருந்தால் போதும். நாணயமாக குழுத் தலைவரிடம் சொல்லிவிட்டு நாகரீகமாக விலகிச் செல்லலாம்.
நீரிலையில் 101, 103 கடத்தலில் ஈடுபடுவார்கள். 205, 309 காணொளி மற்றும் அதைச் சார்ந்தவை. 1002 மக்கள் முன் நிறுத்துபவர். அனைவரிடமும் துப்பாக்கிகள் உள்ளன. முகமூடிகள் அவசியம்.
இவர் அதிர்ந்தார். சங்கருக்கு ஏன் இந்த விபரீத எண்ணம்? அவனும், அவன் நண்பர்களும் ஐந்து பேர்களாயிற்றே. கடவுளே, துப்பாக்கி வேறு வைத்திருக்கிறார்களே, பிடிபட்டால் என்னாவது? ஒருக்கால் தற்கொலை செய்து கொண்டால்…? குத்தாலம் என்று சொல்லிவிட்டு நீரிலைக்குப் போய் விட்டார்களா? போலீசிடம் சொல்லி இந்த விபரீதத்தைத் தடுக்க முடியுமா? தானே அவர்களை மாட்டி விட்டதாகி விடுமே. அவன் நண்பர்களின் பெற்றோர்களுக்கு ஏதாவது தெரிந்திருக்குமா? சங்கருக்கே ஃபோன் செய்வோம் முதலில் என்று கூப்பிட்டார்; அவன் தொடர்பெல்லைக்கு அப்பால் இருந்தான். மதுவின் தந்தையை ஃபோனில் அழைத்தார்; வாய் வரை வந்த விஷயத்தை விழுங்கி விட்டு, நேரே அவர் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார். அவர் இயல்பாகப் பேசவே அவரைப் பயமுறுத்துவதில் பலனில்லை எனத் தோன்றியது. மற்ற நால்வரில் ஒருவர் ஊரிலில்லை, ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை, மற்ற இருவரும் தாய்மார்கள். இவர் தவித்தார். குத்தாலம் போக இவருக்குத் தெரியும்; நீரிலை… அது எங்கிருக்கிறது; அதைக் கண்டுபிடித்துப் போனாலும், இவர்களை எங்கே எனத் தேடுவது? ‘மிஸ்டு கால்’ பார்த்தாவது அவன் தன்னைக் கூப்பிடுவானென இவர் நினைத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் காகிதக் கற்றைகளை எரித்து விட்டால் பெரும் சதியிலிருந்து இந்த இளைஞரணி தப்பிக்குமே என ஆசைப்பட்டார். இந்த ஐவர் மாட்டிக் கொண்டாலும், பிறரைப் பற்றிய ஆவணங்களை இங்கில்லாமல் செய்து விட்டால், பெரிய அளவிலான சதிப் பின்னலை யாராலும் கண்டு பிடிக்க முடியாமல் போகுமே என்ற எண்ணமும் ஓடியது. அதன் சரி, தவறுகளை இவரால் நினைக்க முடியவில்லை. ஆனால், காகித எரிப்பிற்கும், அவருக்குமான கசந்த வாசனை அவரில் கிளைத்தெழுந்தது.
வசு அப்போது உயிரோடிருந்தாள். அவள், புக்சை, காகிதங்களைச் சேர்ப்பது அவருக்குக் கட்டோடு பிடிக்காது. ஆனால், அவள் கேட்க மாட்டாள்.
ஒரு முறை கரப்பான் பூச்சிகள் அதிகமான போது அவருக்குக் கோபம் வந்துவிட்டது.
‘அப்படியென்ன உங்க அப்பா வீட்டு சீதனம் அதுல? கண்டக் கண்டக் குப்பைய ஏன் சேக்கற?’
அவள் பதிலொன்றும் சொல்லாமல் சிரித்தாள்.
‘அப்படியென்ன அழிச்சாட்டியம்? யாராச்சும் குடுத்த லவ் லெட்டரெல்லாம் அதுல இருக்கோ?’
மதுரையை எரித்த கண்ணகியைப் போலப் பார்த்தாள். பரணில் ஏறி பெட்டிகளை எடுத்து ஹாலில் தூக்கி வீசினாள். அவர் விக்கித்து நின்றார். அவளைப் பார்த்து, அவள் காதலன் எவனாவது எழுதிய கடிதங்களா எனக் கேட்டது தான் தானா? என்னவொரு வக்ரம் மனதிலிருந்தால், இப்படியொரு வார்த்தை வரும் தன் வாயிலிருந்து? பெண்களை வீழ்த்தும் சிறுமைக் கணையை எய்ய, தான் எங்கிருந்து கற்றுக் கொண்டோம்? அவர் தவித்தார்; அவளை என்ன சொல்லி சமாதானம் செய்ய முடியும்? ஒன்று செய்யலாம்- அத்தனையையும் அள்ளி பெட்டிகளில் போட்டு பரணில் வைத்து விடலாம்.
அவர் அள்ளி முடித்ததும், அவள் ஆவேசமாக அங்கு வந்தாள். தோட்டத்திற்கு அனைத்தையும் இழுத்துச் சென்றாள். அங்கே எருக்குழியில் போடப் போகிறாள் என்று நினைத்தார்; அவள் நெருப்பிட்டு அனைத்தையும் அழித்தாள். யாக குண்டத்தின் தீயில் ஆஹுதி போல அனைத்தும் அடங்கின. செந்தழல் அவள் முகத்தில் வீசியது. சாதாரணமாகச் சுருட்டப்பட்ட கொண்டைக் கூந்தல், அவிழ்ந்து காற்றில் அலைபாய்ந்தது. வேர்வையில் வகிட்டுச் சிந்தூரமும், நெற்றிக் குங்குமமும் கரைந்து செங்குருதிகளென வழிந்தது. அவளை அவ்வளவு ஆவேசமாகப் பார்க்க அவர் நடுநடிங்கினார்.
பெண் பார்த்தபோது கண்ட பெண்தானா அவள்? தன்னை மாப்பிள்ளைக் கோலத்தில் பார்க்கவும் அஞ்சியவள். இரு மாதங்கள் அவள் அவரை நெருங்கவே தயங்கினாள். பின்னரும் கூட சகஜமாகப் பழகினாலும் கூட ஏதோ ஒன்று அவளை முழுமையாக அறிய விடாமல் செய்வதாக அவருக்குப் பட்டது. கொடியுடன், செடியுடன், காகிதத்துடன், புஸ்தகங்களுடன் அவள் இயல்பாக இருப்பது போலப் பட்டது. அதுதான் தனது பொறாமையைத் தூண்டி அப்படி நடக்க வைத்திருக்க வேண்டும். உயிரற்ற பொருட்களின் மீது தனக்குப் பொறாமை ஏன் என்பது அவருக்குப் புரியவில்லை. அதனால் தானோ என்னவோ, அவர் நாளிதழ்களைத் தவிர வேறு எதையும் தொடுவதில்லை.
அவள் சமநிலைக்கு வர இரு வாரங்களாயின. அவரால் தான் இன்று வரை குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட முடியவில்லை. அவள் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எதையும் படிப்பதில்லை, அடிக்கோடிடுவதில்லை, காகிதம் என்ற ஒன்றைத் தொடக்கூடாதென்ற தவத்தில் இருப்பவள் போலிருந்தாள். தன்னையே ஏன் இப்படி எரித்துக் கொள்கிறாள் இவள்? இவள் இப்படிப் பொசுங்குவது அவரது சதையைத் தீய்த்தது. கண்ணாடியில் விழுந்த விரிசல்; அதை என்ன செய்ய முடியும்? அது ஒன்றை இரண்டாக்க் காட்டியது. அது மேலும் பலச் சிதறல்களாகாமல் அவர் கவனமாக இருக்க வேண்டும்.
அவர் தன் நிலைக்கு மீண்டார்; அவள் இறந்து போய் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவளது தனிமையை அதிகரித்த அவர் இன்று சொல்லப்படாத தனிமையில் தான் தவிக்கிறார். சங்கர் நல்ல பையன் தான். அவன் நண்பர்களும் அவருடன் பேசுவார்கள். அக்கம்பக்கத்திலும் சினேகங்கள் உண்டு. ஆனால், முழுதான நிறைவு என்பது எங்கே கிடைக்கும் மனிதனுக்கு? சங்கீதம், நடனம், ஆன்மீகம், பக்தி, கோயில், தொலைக் காட்சி, வீட்டு வேலைகள், செய்திதாள்கள்…. எத்தனையைப் போட்டும் அந்தப் பிலம் நிறையவில்லை.
அவருக்கு இருக்கும் ஒரே பற்றுக் கோடு சங்கர்தான். அவன் தான் நினைப்பது சரி என்ற எண்ணத்தில் செயல்படுகிறான். ஆயிரக் கணக்கானோர் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர் ஒற்றை ஆள். இந்த ஆவணங்களை அழிப்பது அவரைப் பொறுத்த வரை சரியான ஒன்று. ஆனால், அதன் நகல்கள் எங்கெங்கு இருக்கின்றனவோ? யாரார் மாட்டுவார்களோ? இவர்களின் நோக்கம் புனிதமானது- செயல்முறை சரியானதில்லை. நீரிலையில் இவர்கள் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து தப்பிக்க முடியுமா? அடிச்சீட்டை உருவிவிட்டால் சீட்டுக் கோபுரம் நிலைக்குமா? அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என நினைத்து விட்டார்களா? காந்தீய வழி முறைகளில் இளைய சமுதாயம் நம்பிக்கையில்லாமல் இருக்கிறதா? அப்படியென்றால், அதற்கு யார் பொறுப்பு? நம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தான் என்று இவர் நினைத்தார்.
நீரிலையில் சங்கர் குழு எதிர்பார்த்தது போலவே கன மழை பெய்தது. காரைத் தானே ஓட்டிக் கொண்டு வந்த அந்த நபர் ஒரு கட்டத்திற்கு மேல் தண்ணீரில் அதை ஓட்ட முடியாமல் அருகில் இருந்த பாழ் பங்களாவின் ஓரத்தில் நிறுத்தி விட்டு இறங்கி நடந்தார். அவரை அங்கேயே சட்டென்று இவர்களில் இருவர் பிடித்துவிட்டனர். துப்பாக்கி முனையில், அவரால் இவர்கள் சொல்வதைத்தான் கேட்க முடிந்தது. அனைத்தையும் ஒப்புக் கொண்டவர், இவர்களை பின்னர் கவனித்துக் கொள்ளலாம், இப்போது தப்புவது தான் அவசியம் என்று முதலில் நினைத்தார். அவரை அவர்கள் கண்ணியமாக நடத்தியதும், அவரை அடித்து துன்புறுத்தாததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த இளைஞர்களுடன், அவர்கள், யுவர்களாகத்தான் இருக்க வேண்டும், முகமூடி போட்டிருந்தாலும், குரலும், அவரைப் பிடித்த போது காட்டிய வலிமையும், இவற்றை அவருக்கு உணர்த்தின. பேரம் பேசிப் பார்த்தார்; நால்வருக்கும் தலா ரூ.இரண்டு கோடி தருவதாகச் சொன்னபோதிலும் அவர்கள் காட்டிய அலட்சியம் அவருக்குப் பிடித்தது- தானும் இவர்களைப் போல ஒரு காலத்தில் இருந்தது நினைவிற்கு வந்து அவரைத் தொந்தரவு செய்தது. அப்பங்களாவை காவல் துறை சுற்றி வளைத்தது. நால்வரைக் காணோம் என்று வந்த ஐந்தாவது நபரும் காவல் துறையினரிடம் மாட்டினான். இந்த ஐவரின் மீதும் எந்த சட்ட நடைவடிக்கைகளும் எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால், அந்தக் காணொளியை முற்றாக அழித்து, அவர் கையொப்பமிட்டக் காகிதங்களையும் எரிக்க வேண்டும் என்றார். இவர்கள் அனைவரும் இளைஞர்கள், களையெடுத்து நாட்டை சுத்தம் செய்ய நினைப்பவர்கள் எனப் புரிந்து கொண்ட காவல் துறை, உள்துறை அமைச்சரிடம் பக்குவமாகப் பேசி இவர்களை திரு நெல்வேலிக்கு அழைத்துச் சென்றது. அங்கே ஐவரை விடுவிக்கலாம் என்று அமைச்சர் சொல்லி விட்டார். அமைச்சரின் கட்டளையின் படி காணொளியும், ஆவணங்களும் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையில் திருநெல்வேலியில் சங்கரின் அப்பா சிந்தித்து சிந்தித்து ஓய்ந்தார். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் அவருக்கு. இதற்கான பரிகாரமென்ன? காவல் நிலையம் போவதுதான்; தன்னை இதன் மாஸ்டர் மைன்டாக நிறுவுவதுதான். இந்த வேள்வியில் தானே தான் ஆஹூதிப் பொருள். அவர் மீண்டும் ஒருமுறை புத்தகங்களால் மகனுடன் விரிசலை ஏற்படுத்திக் கொள்வாரோ? நீரிலை நிகழ்ச்சியை காவல் துறை தடுத்து நிறுத்திவிடும். தான்தான் தலைவர் என நம்ப வைப்பது அப்படியொன்றும் கடினமில்லை. இவர் இப்படி முன் வந்தால், சங்கர் உள்ளிட்ட அத்தனை பேரும், அற வழியில் சமுதாயத்தைச் சீர் திருத்துவார்கள்.
இன்ஸ்பெக்டர் முதலில் சிரித்தார். பிறகு துரிதமாகச் செயல்பட்டார். திருநெல்வேலியிலிருந்து ஐவரும் கொண்டு வரப் பட்டனர். அந்த முக்கிய நபர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. சங்கர் இவரை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவன் தன்னை வெறுக்கிறானோ என பயப்பட்டார். ஐவரும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நின்றிருந்தனர். முதல் வால்யூமை மட்டும் சங்கரிடம் தந்த இன்ஸ்பெக்டர் ‘நாடகமாகப் போடுங்கள், தம்பி; மற்ற இரண்டும் என்றுமே உங்களுக்குக் கிடைக்காது. எனக்கும் கொஞ்சம் சம்ஸ்க்ருதம் தெரியும்; உத்கர்ஷனில்லை- உத்திஷ்டம்- அப்பாவை கூட்டிப் போங்கள்’ என்றார்.
வட மாநிலம் ஒன்றில் ‘வாஞ்சி சேனை’ ஒன்று அதற்குக் கொடுக்கப்பட்ட திட்டத்தை செயலாக்கக் களமிறங்கியது.
பூர்ணிமா

One Comment on “ஆஹூதி/பானு நட்ராஜ்”

  1. நல்ல முயற்சி. இட ஒதுக்கீடு சம்பந்தமான அவதானம் சிறப்பு. பொதுவாக தம்மை முற்போக்காக காண்பிக்க நினைப்பவர்கள் சௌகரியமாக தவிர்க்கும் சமாசாரங்களில் இதுவும் ஒன்று. வாழ்த்துகள்.கடைசி வரி பூர்ணிமா.. அச்சுப்பிழையா?

Comments are closed.