தா நா குமாரசாமி எழுதிய “இது சகஜம் தானோ” சிறுகதை — ஒரு பார்வை/கலாவதி பாஸ்கரன்

இந்த சிறுகதையில் கதை நாயகன் , கமலா என்ற பெண்ணை காதலித்து, விதி வசத்தால் ஆனந்தவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவனைப் பிரிந்தால் விஷம் தின்று இறந்து விடுவேன் என ஆணையிட்ட கமலாவை, வேறு இடத்தில் பிள்ளை பார்த்து அவள் அப்பா விவாகம் செய்து கொடுத்து விடுகிறார்.திருமணத்திற்குப் பின்னும் தங்கள் உறவை கடிதம் மூலம் தொடர்கின்றனர் இருவரும். அவளுக்கு ஒரு தோழி போல கடிதம் எழுதுகிறான்.

இவன் மனைவியுடன் மனம் ஒட்டாமல் வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் அவன் மனைவிக்கு போஸ்ட் ஒன்று வருகிறது. அதை பிரித்துப் பார்க்க ஆசை. பெண்டாட்டியிடம் இல்லாத உரிமையா என நினைத்து அதைப் பிரித்து படிக்கிறான். ஒரு ரகசியம் வெளி வருகிறது. அது அவன் மனைவியின் காதலன் எழுதிய கடிதம், நேரிடையாகவே, தன் காதலை வெளிப் படுத்தி எழுதிய கடிதம்.வெகு நேரம் அவன் ரத்தம் கொதிக்கிறது. சட்டென்று கமலாவிற்கும் தனக்கும் உள்ள உறவை நினைத்து மனம் குளிர்ந்து விடுகிறது. தன் மனைவி பாதகி என்றே படவில்லை. நாடகமே இந்த உலகம். நம் கடமை ஆட வேண்டியதே தவிர அனாவசியமாக மூளையை குழப்பிக் கொள்ளக் கூடாது என நினைத்தவன் , கடிதத்தை ஒட்டி மனைவியிடம் கொடுத்து விடுகிறான்.

மறுநாள் ஆபீஸுக்கு கமலாவின் கடிதம் வருகிறது. அவள் கணவன் வேறொருத்தி மீது மையல் கொண்டுள்ளானாம். அதை வெளிப்படையாக சொல்லி விட்டானாம். இவனுக்கு தட்டாமாலை சுற்றுகிற மாதிரி இருக்கிறது. கமலா ஏன் இன்னும் விஷம் தின்று சாகவில்லை? என் மனைவி வேறு ஒருவனுடன் அன்பு கொண்டிருப்பது அறிந்தும் நான் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன்? இதற்கெல்லாம் விடை இல்லாமல் போகவில்லை. நம் தேசத்தில் ஆதிகவி வால்மீகி இட்ட சாபம் இன்னும் வேலை செய்கிறது என்கிறார் ஆசிரியர்.

இணை பிரியாத கிரெளஞ்ச பட்சிகளில் ஒன்றை வேடன் கொன்றிட, வேடனுக்கு சாபமிடுகிறார் முனிவர். இதிலிருந்து ராமாயணம் தோன்றியது. ராமன் கிரெளஞ்சம், ராவணன் வேடன்.

இன்று ஒவ்வொருவரும் ஒரு கிரெளஞ்ச பட்சியே. வேறு நோக்கில் பார்த்தால் ஒவ்வொருவரும் வேடனே. நான் கமலா என்ற என் பேடையை இழந்து, இன்னொருவனின் இனியவளான என் மனைவியைப் பறித்ததால் வேடன் ஆகிறேன். நான் ராமன், கமலா என்ற சீதையை தேடி திக்கு தெரியாத காட்டில் அலைகிறேன். இன்னொரு விதத்தில் ராவணன், மாற்றான் மனைவியான கமலாவை மனதுக்குள் அபகரித்து வைத்திருப்பதால். இந்த பாழும் சம்சாரத்தில் மூழ்க வேண்டியதுதானா?

இளையவர்களை ஒருவரோடு ஒருவர் பழகவும் , காதலிக்கவும் இந்த சமூகம் அனுமதிக்கிறது. ஆனால் தாமே தேர்ந்து மணந்து கொள்ளப் பெரியவர்கள் உரிமை அளிக்காததுதான் மிகப் பெரிய அநியாயம் என்று முடிக்கிறார் ஆசிரியர்.

இந்தக் கதை விறு விறு என்று சுவாரஸ்யமாக, இயல்பாகச் செல்கிறது. தலைப்பு மிகப்பொருத்தம், ஆம் இதெல்லாம் சகஜமாகி விட்டது. இந்தக் கதை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னல் எழுதப் பட்டிருக்க கூடும். தற்கால நிலை வேறு. பெரியவர்கள் பொதுவாக திருமண விஷயத்தில் கண்டிப்பு காட்டுவதில்லை. இள வயதினர் தங்கள் துணையைத் தானே தேடிக் கொள்கிறார்கள். கதை நாயகன் நினைப்பது போல் தொடர் கதையாக இந்த உறவுகள் சென்று கொண்டு இருக்க வேண்டிய நிலை இன்று இருக்கும் என்று தோன்றவில்லை.

என்னை மிகவும் கவர்ந்தது, ஆசிரியர் விவரிக்கும் “ரோல்ப்ளே” ஒருவனே கிரெளச பட்சி, வேடன், ராமன், ராவணன் அனைவருமாகிறான், ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும் போதும். ஆசிரியர் கூறிய உலகம் ஒரு நாடக மேடை என்பது மிகச் சரியே. அதில் ஒருவரே அனைத்துப் பாத்திரங்களையும் செய்வது போன்ற ஒரு மாயை.

3 Comments on “தா நா குமாரசாமி எழுதிய “இது சகஜம் தானோ” சிறுகதை — ஒரு பார்வை/கலாவதி பாஸ்கரன்”

Comments are closed.