
ஆன்டன் செகாவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது படைப்புகள் நம்மை வசீகரிக்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் காரணம், அவற்றில் உள்ள எளிமையும் யதார்த்தமுமாகும். அவர் ஒரு மருத்துவர். மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பிற்காகும் செலவைச் சமாளிக்க நகைச்சுவைப் பத்திரிகைகளுக்கு படைப்புகளை எழுதத் தொடங்கினார். தனது கருத்துக்களைத் தயங்காமல் தெரிவிக்க, அவருக்கு எள்ளல் நடையும், நகைச்சுவையும் பெரிதும் உதவின! இவரது படைப்புகளின் தன்மையைச் “செக்காவிய பாணி” என்று முதன்முதலில் பெயரிட்டு அழைத்தவர் திரு சுந்தர ராமசாமி.
‘ஆன்டன் செகாவ் சிறுகதைகள்’ (ஆங்கிலத்தில் கான்ஸ்டன்ஸ் கார்னெட்) தமிழில் சந்தியா நடராஜன் மொழிபெயர்த்துள்ளார் (சந்தியா பதிப்பகம்). ‘ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்’ சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் மொழிபெயர்த்துள்ள மற்றொரு புத்தகம் (தடாகம்).
ஒரே கதை ‘சொற்பொழிவாளர்’ (சந்தியா) என்ற பெயரிலும், ‘பேச்சாளர்’ (சு.ஆ.வெ.சுப்புராய நாயகர்) என்ற பெயரிலும் கிடைக்கின்றன. விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் 50 வது நிகழ்வில் இக்கதை பற்றிப் பேசியதிலிருந்து…
வருமானவரி ஆய்வாளர் கிரில் இவாநோவிச் வாவிலோனோ இறந்து, இறுதிச் சடங்குகள் நடப்பதில் தொடங்குகிறது கதை. இறப்பிற்குக் காரணமாக செகாவ் கூறும் இரண்டு வியாதிகள் – குடிப்பழக்கம் மற்றும் மோசமான சண்டை பிடிக்கும் மனைவி! இறுதிச் சடங்கில் பேசுவதற்கு, அவருடன் பணிபுரியும் பாப்லாஸ்கி தன் நண்பன் கிரிகோரி
பெட்ரொவிச் சாப்போய்க்கினை அழைக்கச் செல்கிறான். திருமணம், பிறப்பு, இறப்பு, இறுதிச் சடங்கு என எந்த நிகழ்ச்சியிலும் முன்னேற்பாடின்றி சொற்பொழிவாற்றும் திறமையுடையவன் சாப்போய்க்கின்!
“எங்கள் அலுவலகத்தின் தூண் போன்றவர், காரியதரிசி. நல்லதொரு சொற்பொழிவில்லாமல் அவரை அனுப்புவது முறையல்ல; உடனே கோட்டை போட்டுக்கொண்டு கிளம்புங்கள்” என்கிறான் பாப்லாஸ்கி.
“ஓ, அந்தக் குடிகாரன்தானே? அவன் ஒரு தந்திரக்கார அயோக்கியன், மிருகன்” என்கிறான் சாப்போய்க்கின். இறந்த ஒருவரைப் பற்றி இப்படிப் பேசுவது சரியல்ல என்கிறான் பாலாஸ்கி. அதற்கு, “சரிதான், இறந்தவரைப் பற்றி நல்லவைதான் பேச வேண்டும்; அல்லது பேசாமல் இருக்க வேண்டும். ஆனாலும் அவன் அயோக்கியன்தான் என்பது மாறிவிடாது” என்று கூறி, உடை மாற்றி, முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கிளம்புகிறான் சாப்போய்க்கின்!
மெதுவாகச் செல்லும் இறுதி ஊர்வலத்தில் சேர்ந்துகொண்டு, கல்லறை அடையும் முன் மூன்று முறை மது அருந்திச் செல்கிறார்கள்! அவ்வளவு மெதுவாக ஊர்வலம் செல்கிறதாம்…
இறுதிச் சடங்குகள் நடக்கும்போது உறவினர்கள் சம்பிரதாயப்படி அழுதுகொண்டிருந்தார்களாம்! ‘நானும் அவரோடு சென்று விடுகிறேன்’ என்று அழும் மனைவியைப் பற்றி செகாவ் இப்படிக் குறிப்பிடுகிறார்- அனேகமாக அவளுக்கு வரவிருக்கும் ஓய்வூதிய அனுகூலங்களை எண்ணிப் பார்த்திருக்க வேண்டும், அதனால் அவ்வாறு செய்யவில்லை!
இரங்கல் உரையில் இறந்தவரைப் பற்றி மிக உயர்வாகப் பேசுகிறான் சாப்போய்க்கின். ஆனால் இறந்தவரின் பெயரை ‘புரொகோபி ஓசிவிச்’ என்று மாற்றிச் சொல்லிவிடுகிறான். மேலும், “ அவர் தனித்துவமானவர். நேர்மையாகக் கடமை ஆற்றியவர். லஞ்சத்துக்கு மசிய மாட்டார். தன் குறைவான வருமானத்தை ஏழை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டார். வீட்டு வாழ்க்கை மகிழ்ச்சியைத் துறந்து, இறுதி வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்! அவரது மழித்த முகம் நம்மை நோக்கிச் சிரிப்பதையும், மென்மையான தோழமை கூடிய குரலையும் நம்மால் மறக்க முடியாது. புரோகோபி ஓசிவிச்சின் ஆன்மா அமைதியாய் உறங்கட்டும்” என்று பேசிக்கொண்டே போகிறான்!
இறந்தவரை விட்டு, உயிருடன் கல்லறைக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் மனிதரின் பெயரைக் குறிப்பிட்டு இரங்கல் உரை ஆற்றுவதைக் கேட்டுக் கூடியிருந்தவர்கள் முணுமுணுக்கிறார்கள்! உரை நன்றாக இருக்கிறது, ஆனால் பல விஷயங்கள் விநோதமாக இருக்கின்றன. கிரில் இவானோவிச்சை ஏன் புரோகோபி ஓசிவிச் என்று ஏன் குறிப்பிட்டார்? மனைவியுடன் இறுதிக் காலம் வரை எலியும் பூனையுமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தவரை, ‘பிரம்மச்சாரி’ என்கிறாரே? ஒரு போதும் முகம்மழித்ததே இல்லை – தாடி வைத்திருந்தரே? என எல்லோருக்கும் குழப்பம்.
பாப்லாவ்ஸ்கி, இரகசியக் குரலில் புரோகோபி ஓசிவிச் உயிருடன் நின்றுகொண்டிருப்பதைக் காட்டி, இறந்தவன் கிரில் இவானோவிச் என்கிறான். சாப்போய்க்கின் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, நிலமை தர்மசங்கடமாகிவிடும் என்று அப்படியே உரையைத் தொடரச் சொல்கிறான் பாப்லாவ்ஸ்கி!
சக குமாஸ்தாக்கள் ‘உன்னை உயிரோடு கல்லறையில் புதைத்து விட்டான்’ என்று கேலி செய்ய, முகம் மழித்த புரோகோபி, சாப்போய்க்கினை முறைக்கிறார். “இறந்தவனுக்கு ஒரு நல்ல உரையாக இருக்கலாம். ஆனால் இது உயிருடன் இருப்பவனுக்கு ஒரு கேலிப் பேச்சாகவே இருக்கும்” என்று சொல்லி, “எதிலும் நாட்டமில்லாதவன், லஞ்சம் வாங்காதவன் என்றெல்லாம் உயிருள்ள ஒருவனைப் பார்த்து சொல்வதெல்லாம் கேலியாகத்தான் தோன்றும். என் மழித்த முகம் பற்றி வேறு கூறி என்னை அவமானப் படுத்திவிட்டாய்” என்று கோபமாகச் சொல்கிறார்.
1886 ல் வந்த கதை! அப்போதிருந்த சமூக, பொருளாதார, தனி மனித உறவுச் சிக்கல்களை மிக எளிமையாக, நகைச்சுவையுடன் சொல்கிறார் செகாவ். ’இறந்தவர்களைப் பற்றி உயர்வாகப் பொய்களைச் சொல்வதுதான் வழக்கம்’ என்பதை எள்ளலுடன் சொல்கிறார். பேச்சாளர் ஆரம்பத்தில் இறந்தவரைப் பற்றி சொல்வதும், பின்னர் கல்லறையில் பேசுவதும் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருப்பதுதான் கதையின் அடிநாதமாக இருக்கும் செய்தி.
உயிருடன் இருக்கும் போது, இறந்துவிட்டதாக நினைத்து இரங்கல் சொல்வது நம்மூரிலும் நடந்துள்ளது – எழுத்தாளர் சாலிவாஹனன் இறந்தபோது, இரங்கற் கட்டுரையை உயிருடன் இருந்த எழுத்தாளர் சார்வாகனுக்கு, வல்லிக்கண்ணன் எழுதிவிடுகிறார். கவிஞர் கண்ணதாசன், தான் இறந்துவிட்டதாகத் தானே பொய்ச் செய்தி பரப்பி, அவரது நண்பர்கள் எம் எஸ் விஸ்வநாதன் போன்றோர் அழுவதைப் பார்த்து சிரித்தாராம். ‘நான் இறந்து போனால் நீங்கள் எப்படி அழுவீர்கள் எனப் பார்க்க ஆசைப்பட்டேன்’ என்றாராம் கவிஞர்!
