
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 7. உண்மை
————
ஜென் பௌத்தத்திலும் தாவோயிசத்திலும் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்கான வழியை பாஷோ அடையாளம் கண்டுகொண்டார். தியானமும், கூரிய அவதானமும், உணர்வுகள் செழுமைப்படுத்தப்பட்ட தினசரி வாழ்க்கையும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான கூரிய மொழியும் அவருக்கு வாய்த்திருந்தன. பாஷோவின் கவி வாழ்வை ஜப்பானிய மொழியில் fūgo என்றழைக்கிறார்கள். அதை உணர்வுகளின் செழுமை மிகுந்த வாழ்வு எனத் தமிழ்ப்படுத்தலாம். தன்னுடைய கவி வாழ்வில் என்ன தேடினார் பாஷோ? இயற்கையின் பகுதியான ( கவனிக்க இயற்கையிலிருந்து வேறுபட்ட அல்ல) மனித மனதின் நிரந்தர உண்மைகள் என்ன என்பதை பாஷோ தேடினார் என்று சொல்லலாம். பாஷோவின் கவித்துவ உண்மைகள் என்ற தலைப்பில் ஒரு முழு நீள புத்தகமே எழுதலாம். பாஷோவின் பார்வையின் சில அம்சங்களை மட்டும் கவனப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
பாஷோவின் கவிதை ஒன்று ஜப்பானிய மரபான நாடகமான நோ அரங்கத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வசனம் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறது:
ஓஹ் எனக்கு ஒன்றுமே நடந்திருக்கவில்லை!
நேற்று கடந்து சென்றுவிட்டது
ஃபுகு சூப்
ஃபுகு என்பது மிகவும் சுவையான, ஜப்பானில் கிடைக்கக்கூடிய மீன் வகைகளுள் ஒன்று; அது ஆளை உடனடியாகக் கொல்லக்கூடிய விஷமும் நிரம்பியது. விஷம் சரியாக நீக்கப்படாத ஃபுகு மீனின் சூப்பை அருந்தினால் மரணம் நிச்சயம். வாழ்க்கையின் ஒவ்வோரு நாளும் அருஞ்சுவையும் விஷமும் சமமான அளவில் கலந்தவையே; அதைப் பற்றிய தன்னுணர்வு இல்லாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் உயிர் பிழைத்துக்கிடப்பதென்பதே ஆச்சரியத்திற்கும் நன்றியுணர்வுக்கும் உரியது என்று பாஷோவின் இந்தக் கவிதை சொல்கிறது.
உண்மையைக் காண்பதற்கு நம்முடைய விழிப்படலங்களை விருப்பு வெறுப்புகள் மறைக்காமலிருக்க வேண்டும். இதற்காகவே திபெத்திய பௌத்த தியான மரபுகளில் நிர்வாணமாகிய கண்களோடு பார்த்தல் என்ற தியான முறையை உண்டாக்கினார்கள். பார்க்க: “Naked Seeing” by Christopher Hatchell, The Great Perfection, the Wheel of Time and Visionary Buddhism in Renaissance Tibet Oxford University Press 2014. பாஷோவின் கவிதை ஃபுயுஜி நகரை மூடுபனி இல்லாமல் பார்க்கப்படுவதன் அழகை (அது ஒரே ஒரு முறை லபிக்குமென்றாலும் கூட) வியக்கிறது:
எத்தனை இனிமை-
ஃபுயுஜியை ஒரே ஒரு முறை
மூடுபனி வழியே பார்க்காதிருப்பது
உண்மையை எப்போதும் பல்லாயிரக்கணக்கான விழிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. பாஷோவின் கவிதை:
இங்கே கியோட்டோ நகரில்
பூத்திரள்களைப் பார்க்க, வெளியே
தொண்ணூற்று ஒன்பதாயிரம் மக்கள்
உண்மை என்பது பருவகாலங்களைப் போலவே பல்வேறு காரண காரிய தொடர்புகளாலும், உணர்வுப் பிணைப்புகளாலும் ஆனது; பாஷோவின் கவிதை:
பிரிந்து செல்லும் வசந்தம்
பறவைகள் அழுகின்றன, மீன்களின்
கண்கள் கண்ணீரால் நிரம்பியிருக்கின்றன
பார்க்கப்படக்கூடிய கோணத்திலிருந்து உண்மை என்னவாக இருக்கிறது என்ற விவரணை மாறக்கூடியதாக இருக்கும். பாஷோவின் கவிதை:
வசந்தம் வந்ததா
அல்லது வருடம் கடந்து சென்றதா
இரண்டாவது கடைசி நாள்
இதில் ‘இரண்டாவது கடைசி நாள்’ என்பது ஜப்பானிய மரபான நாட்காட்டியில் அபூர்வமாக, ( லீப் வருட ஃபெப்ருவரி 29, தமிழ் நாட்காட்டியில் சில வருடங்களில் வரும் ஆடி 32 ஆகியன போல) வரும் ஒரு கூடுதல் நாளைக் குறிப்பது. பாஷோ அந்த நாட்காட்டி நாளைப் பயன்படுத்தி புனைவின் கணக்குகள் நம் அளவிடலைத் தீர்மானிப்பதை சுட்டுகிறார்.
பாஷோ உண்மையை இயற்கையில் தேடினார், தன் தேடலைத் தொடர்ந்து பதிவு செய்தார். உண்மைக்குக் கடப்பாடு உடையதே இலக்கியம் என்பதை பாஷோவின் கவிதைகள் நமக்குக் காட்டித் தருகின்றன.
