ஓர் இனிமையான இயல், இசை விழா!/ஜெ.பாஸ்கரன்

18.03.2023 மாலை 5.30.

சென்னை மியூசிக் அகாதமி அரங்கம் வி.ஐ.பி. க்களால் நிரம்பி வழிந்தது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் மிகச் சிறந்த படைப்பு (Magnum Opus) “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” (Knit India Through Literature). 2004 ல் முதற்பதிப்பு. இப்போது மீண்டும் ஶ்ரீராம் குழுமக் கம்பெனிகளினால் மறுதொடக்கம் (Relaunch) காண்கின்றது. இந்தியா முழுவதிலும் உள்ள 400 க்கும் அதிகமான நூல்நிலையங்கள், பல்கலைக் கழகங்களில் அனைவரும் வாசிக்கும் வகையில் இந்த நூலினைக் கொண்டு செல்லும் ஶ்ரீராம் குழுமம் பாராட்டுக்குரியது.

16 வருடங்கள் ஒரு தவம் போல சிவசங்கரி உழைத்திருக்கிறார். இந்தியாவின் 18 மொழிகளில் புகழ்பெற்ற 102 இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் குறித்த ஓர் ஆவணமாக, அவர்களில் சிலரின் நேர்காணல்களுடன் சிறப்பாக எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு பாகங்களாக இந்தியாவின் மொழிகள், இலக்கியங்கள் மூலம், நமது கலை, கலாச்சார விழுமியங்களை ஒருங்கிணைக்கின்றார். “இந்தியர்களுக்கே இந்தியாவை முழுமையாக அறிமுகம் செய்யும்” வகையில் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இப்படைப்பு, ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் இந்தியாவின் இலக்கியச் செழிப்பை, கலாச்சாரச் சிறப்பை முன்னெடுத்துச் செல்லும் விதமாக எழுதியுள்ள சிவசங்கரி அவர்கள் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிகளின் இலக்கியம், “தெற்கு” பாகத்திலும், பெங்காலி, மணிப்புரி, ஒரியா, அஸ்ஸாமீஸ், இந்திய நேபாளி இலக்கியம் “கிழக்கு” பாகத்திலும், மராத்தி, குஜராத்தி, கொங்கணி, சிந்தி இலக்கியம், “மேற்கு” பாகத்திலும், இந்தி, உருது, பஞ்சாபி, காஷ்மிரி, சமஸ்கிருத இலக்கியம், “வடக்கு” பாகத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீராம் குழுமத்தைச் சேர்ந்த திருமதி அகிலா ஶ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். இந்தப் புத்தகம் அதற்குரிய நியாயமான அங்கீகாரம் பெற வேண்டும், எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே இந்த விழாவிற்கான காரணம் என்றார். மேலும் இலக்கியமும், இசையும் இந்தியாவை ஒன்றிணைக்கும் முக்கியமான சாதனங்கள் என்பதால், சிவசங்கரி அவர்களின் புத்தக மறுவெளியீடும், திருமதி அருணா சாய்ராம் அவர்களின் இந்திய மொழிகளில் இசைக் கச்சேரியும் ஒன்றாக, ‘இயல், இசை’ விழாவாகக் கொண்டாடப் படுவதாகக் கூறினார்.

புத்தகம் பற்றிப் பேசிய சிவசங்கரி, நெட் வசதிகள், மொபைல், மின்னஞ்சல் போன்றவை இல்லாத நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்திய இலக்கிய ஆளுமைகளையும், அவர்களது படைப்புகளையும் சேகரிப்பது சிரமமாக இருந்தாலும், தான் மிகவும் விரும்பிச் செய்த ‘மெகா ப்ராஜெக்ட்’ இது என்றார். மிகவும் நெகிழ்ந்து, இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். சிறப்பு விருந்தினர்களான திரு தாமோதர் மாஸோவையும் (ஞானபீடம் விருது பெற்ற கோவா எழுத்தாளர்), திருமதி டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களையும் வரவேற்றார்.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்டுப் பேசினார். நூலின் நோக்கத்தையும், அது எழுதப்பட்டிருக்கும் விதத்தையும் பாராட்டினார். வங்காள மொழியில் ஒரு கவிதையை ஸ்லாகித்தவர், ரன்வீர் சவுத்ரி என்ற எழுத்தாளர் தனது நேர்காணலில் தான் சாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகத்தை மீண்டும் மாற்றங்களுடன் எழுதியதைப் பற்றிக் குறிப்பிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ‘ஒரு படைப்பாளியின் கருத்துக்கள் மாறுபடலாம்; அது என்னுடைய புத்தகம், அதை மாற்றி எழுத எனக்கு உரிமை இருக்கிறது’. இதே கருத்தை பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தம் அவர்களும் கூறி, “நான் வளரக் கூடாதா?” என்றாராம். நாட்டை ஆளும் அரசனின் எண்ணங்களில் பழுதிருந்தால், நாட்டின் வளமை குன்றும் என்பதற்கொரு குட்டிக்கதையைக் கூறினார். டாக்டரின் பேச்சு, சுவாரஸ்யம் மற்றும் ஆத்மார்த்தம்.

‘Knit India Through Literature’ புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய திரு தாமோதர் மாஸோ, சிவசங்கரியின் இடைவிடாத, தளராத முயற்சியையும் உழைப்பையும் வியந்து பாராட்டினார். தமிழ்நாட்டில், தமிழ் வளர்ச்சிக்கு அரசு பெரிதும் துணையாக இருப்பதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்த திருமதி அருணா சாய்ராம் அவர்களின் பன்மொழிக் கச்சேரி, விழாவிற்கு மகுடமாய் அமைந்தது.
ஜெ.வைத்தியநாதன் மிருதங்கம், பத்மா சங்கர் வயலின், ப்ரவீன் தபலா, ஆகாஷ் புல்லாங்குழல், நிஹாரிகா தம்புரா என வித்தியாசமான பக்க வாத்தியக் குழுவுடன் சுமார் 90 நிமிடங்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி, காஷ்மீரி என இந்தியாவின் பல மொழிகளிலும் சிறப்பாகப் பாடினார். இந்துஸ்தானி, அபங்க், குர்பானி, நாம சங்கீர்த்தனம், தமிழிசை என இசைப் பிரவாகம். நேயர் விருப்பமாக ‘மாடு மேய்க்கும் கண்ணே’ – முதல் 25 நிமிடத்தில், ஜகதானந்தகாரகா வில் ஆரம்பித்து, கன்னடம்(புரந்தரதாசர்), தெலுங்கு (நகுமோ),பெங்காலி, உத்தர்பிரதேஷ், குர்பானி(குருநானக்),குஜராத்தி, மஹராஷ்ட்ரா (அபங்க்), தமிழ் (பாருக்குள்ளே நல்ல நாடு) என முடித்த இசைக் கோர்வை சிறப்பு. ஆபோகியில் ‘சபாபதிக்கு’, ராகி தந்திரா (புன்னாகவராளி), ஏகநாதன் எழுதிய அபங்க் (ரேவதி), வித்தியாசமான தில்லானா என அசத்தினார் அருணா சாய்ராம். அவருக்கு 70 வயதாமே …. நம்பமுடியவில்லை!

மிக இனிமையான மாலை – இலக்கியம், இசை எனும் இருபெரும் தங்க இழைகளால் கட்டப்பட்ட அழகிய இந்தியா ஒளிர்ந்தது! இந்தியாவின் ஒருங்கிணைந்த உணர்வுகளைக் காட்ட, பல மொழிகளில் உள்ள இலக்கியங்களும், இசையும் அத்தியாவசியம் என உணர்த்திய மாலை!

One Comment on “ஓர் இனிமையான இயல், இசை விழா!/ஜெ.பாஸ்கரன்”

Comments are closed.