பேசும் ஓவியம்

ஜெ.பாஸ்கரன்

அட… என்னைப்போலவே இருக்கிறதே நீ வரையும் ஓவியம்….

வளைந்து நீண்டிருக்கும் ஒற்றைக் கோட்டில், அலையெனப் புரளும் என் கூந்தலை மறைத்துக் காட்டிவிட்டாயே…பலே..

புருவங்களுக்கு மத்தியில் அழகிய இடைவெளி – ஆனால் புருவங்களை மட்டும் சீராகத் தீட்டவில்லை இன்னும் … பரவாயில்லை, அருகிலேயே இருக்கிறது அழகு நிலையம், புருவத்தை ‘வில்’லிக்கொள்ள…

எப்போது உன்னிடம் சொன்னேன், நான் ஜப்பான்காரியென்று? மூக்கு நுனியை இன்னும் கொஞ்சம் கூராய்த் தீட்டியிருக்கலாம்… ஆனாலும் சப்பை மூக்குக்கென்று ஓர் அழகிருகிறதல்லவா? கோபத்தில் சிவக்கும்போது சின்ன செர்ரியை நினைவுறுத்துமே! வாசம் அறிய நீளம் முக்கியமில்லை… அதனால் பரவாயில்லை..

உருண்டை முகம் என்பதை, அரை வட்டக் கோட்டில் தாடையாய்க் காண்பிக்கும் உன் கற்பனை நயம் என்னை வீழ்த்துகிறது…

இதழ்களுக்கு மட்டும் எப்போதுமே தனி அழகு – தடித்துப் பாதி விரிந்த கீழுதடின் மேல் கவிழ்த்து வைத்தக் காகிதக் கப்பலாய் மேலுதடு! கொவ்வைச் செவ்வாய் என்பதற்காக, அதற்கு மட்டும் சிவப்புப் பூச்சு – சிவப்பானாலும், இந்த உதடுகளுக்குக் கம்யூனிஸம் தெரியாது!

மூடிய கண்களின் இமைகள் எவ்வளவு அடர்த்தி – ஆனாலும் செயற்கையாகப் பொருத்தாத இமைகள் அழகுதானே…

சிலைகளுக்குக் கண் திறப்பு என்பது ஒரு பெரிய சாங்கியம் என்று கேள்விப்படுகிறேன் – என் ஓவியத்திற்கும் அப்படி ஏதேனும் உண்டோ? இருக்கட்டும்…. திறக்கும் என் கண்களின் முன் என்னைப் படைத்த உன்னையே முதலில் காண ஆசைப்படுகிறேன் – திறக்கும் முன் ஒரு வார்த்தை சொல்லி விடு….

முதல் முறையாக ஓவியன் பேசினான்….

மனிதர்கள் படைப்பில் அழகில்லாத கடவுளை நீ காணவே முடியாது. உன்னைப் படைத்த நான் உங்கள் கடவுளரைப் போல அழகில்லை. என்னைப் பார்த்த மாத்திரத்தில் உன் கண்களை மீண்டும் மூடிக்கொள்ள அல்லது நீயே காற்றில் கரைந்துவிடக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என்று என் உள்மனது சொல்கிறது.. அதனால் ….

உன் கண்களை நான் திறவாமலே விட்டு விடுகிறேன் – மூடிக்கிடக்கும் இமைகளுக்கென்றும் ஓர் அழகு உண்டல்லவா?

ஓவியன் எழுந்து சென்றான்…

3 Comments on “பேசும் ஓவியம்”

  1. அருமை டாக்டர்
    அழகான சொற்சித்திரம். சிறப்பு.

    கம்யூனிசம் உள்ளத்திற்குத் தெரிந்தால் தான் நல்லது…

    வேணு

  2. ஓவியம் கண்டவுடன்
    உயிர் பெற்றது
    உம் கவிதை,
    வரிவரியாக
    அழகான வர்ணிப்பு
    ஆகா… அருமை

    சுரேஷ் ராஜகோபால்

  3. அட! இள முகம்!
    சுருக்கங்கள் இல்லை
    எண்ணக் கோடுகள் உண்டு
    விலகிக் கொள்!
    வரைந்தவன் எழுதி
    விடப் போகிறான்
    ஒரு காதல் கவிதை
    உன் கன்னத்தில்!
    ##
    சிறகு இரவி.

Comments are closed.