கண்ணாடி

சௌவி

முகம் பார்த்துக்கொண்டிருந்த கண்ணாடி
உடைந்துவிட்டது
தவறுதலாய்க் கீழே விழுந்து

அத்தனை தோழமையாயிருந்த
கண்ணாடி
சட்டென அந்நியமாகிவிட்டது

எப்போதோ தாத்தா
சந்தையில் வாங்கி வந்த கண்ணாடி
எல்லோருடைய வளர்ச்சியையும்
படிப்படியாய்ப்
பார்த்துக்கொண்டேயிருந்தது
வீட்டினுள்ளிருந்தபடி

சற்றே சங்கடமாகத்தானிருக்கிறது
காலங்காலமாய் நின்றிருந்த கண்ணாடி
கீழே விழுந்து
ஒழுங்கற்ற வடிவங்களாய்ச்
சிதறிக் கிடப்பதைப் பார்க்கையில்

கூட்டிப் பெருக்கி
அப்புறப்படுத்தப்பட்ட கண்ணாடி
முறத்திலேறி
வீட்டை விட்டு வெளியேறுகிறது
அதன் ஒவ்வொரு சில்லிலும்
கவனிக்கப்படாத கண்ணீர்த்துளிகள்

அடுத்தொரு கண்ணாடி வந்து
இடத்தை ஆக்கிரமிருக்கும் வரை
உடைந்த கண்ணாடியின் நினைவுகள்
சுவற்றில் ஒட்டியிருக்கும்