விலை மதிக்க முடியாத மனித உயிர்கள்/சோ.தர்மன்

காலையில் பத்திரிக்கை செய்தியை படித்ததிலிருந்து மனசே சரியில்லை.காஞ்சிபுரம் பட்டாசுத் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 9பேர் உயிரிழந்த செய்தி.விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் நொடிப் பொழுதில் கருகி கரிக்கட்டையாய் உருக்குலைந்து போகிற சோகம்.
சிவகாசி,கோவில்பட்டி,சாத்தூர் பகுதிகளில் இதுமாதிரியான செய்திகள் அடிக்கடி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.என்னால் இதை ஒரு விபத்து என்றோ ஒரு சோகமான செய்தி என்றோ கடந்து போக இயலவில்லை.காரணம் இதே போன்ற ஒரு விபத்தில் ஆறுபேர் மரணமடைந்த போது நொடியில் தப்பித்தோடி உயிர் பிழைத்தவன்.
அது கோவில்பட்டியில் நடந்த மோசமான விபத்து.நான் பட்டாசுத் தொழிலாளியாக வேலை பார்த்தேன்.கடலையூர் செல்லும் சாலையின் இடது புறம் இருக்கும் வரிசையான கல்லறைகளை பார்த்தால் இன்றும் அழுது விடுவேன்.
அந்த அனுபவத்தை தான் “நசுக்கம்”என்ற பேரில் சிறுகதையாக எழுதினேன்.கோமல்ஸ்வாமிநாதன் ஆசிரியராக இருந்த”சுபமங்களா”என்கிற இதழில் வெளியானது.அக்கதை அந்த மாதத்தின் சிறுகதையாகவும் பின்னர் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு”இலக்கியச் சிந்தனை”விருதை பெற்றுத் தந்தது.பின்னர் அதே கதைஇந்திய அளவில் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு”கதா”விருதைப் பெற்றது.
ஆங்கிலத்தில் “பயர்ஒர்க்ஸ்”என்ற பேரிலும்,ஹிந்தியில்”பிசாய்”என்கிற பேரிலும், மலையாளத்தில் “கரிந்திரிகள்”,என்ற பேரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.அந்தாண்டு “கதா”,விருது பெற்ற இந்திய மொழிக்கதைகள் அனைத்திலும் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து டெல்லி “எக்னாமிக்ஸ்”பத்திரிக்கை என் புகைப்படத்துடன் ஒரு பக்கம் ஒதுக்கி அகில இந்தியப் பதிப்பில் பிரசுரித்தது.
மலையாளத்தில் “மாத்ரு பூமி”தென் மொழிகள் சிறப்பிதழ் வெளியிட்ட போது அக்கதையை மறுபிரசுரம் செய்தது.தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கான சிறப்புத் தமிழ் புத்தகத்திலும் இக்கதை இடம் பெற்றுள்ளது. அந்தக் கதையில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கான காரணங்கள் கதை வடிவில் செதுக்கியிருப்பேன்.கடைசியில் செத்து கருகிக் கிடக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகளைப் பற்றி எழுதும் போது ஞானக்கூத்தனின் கவிதை வரிகளை இணைத்திருப்பேன்.
பட்டாசுத் தொழில் என்பது நல்ல பாம்புடன் பழகுவது மாதிரி.ஒரு சிறு தீப்பொறி போதும் .அனைத்தும் பஸ்பமாகிப் போகும்.இந்த மாதிரியான விபத்துக்களுக்கு உயிழந்த பின்பு மத்திய மாநில அரசுகள் இழப்பீடு கொடுத்தால் மட்டும் போதாது.அந்தந்த பகுதியில் உள்ள ஆலைகளை கண்காணிக்க பொது மக்களில் சமூக அக்கறை உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.அவர்கள் சோரம் போகாதவர்களாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் அரசு அதிகாரிகளை விலைக்கு வாங்குவது மாதிரி இவர்களையும் முதலாளிகள் தன் வசப்படுத்திக் கொள்வார்கள்.இவர்கள் தொழிற்சாலைகளை ஆராய்ந்து பாதுகாப்பு விதிகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகிறதா என்கிற விபரத்தை ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அல்லது தொழிலாளர் நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.ஓரளவு விபத்துக்களை கட்டுப்படுத்தலாம்.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை.
விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி.