அசோகமித்திரனின் நினைவுநாள் இன்று…/அழகியசிங்கர்

23.03.2023

இன்று அசோகமித்திரனின் நினைவுநாள்.  2017 இதே நாளில் அவர் இறந்து விட்டார்.  அவர் மரணம் யாரும் எதிர்பார்க்காமல் நடந்து விட்டது. 

இது குறித்து அசோகமித்திரனும் நானும் என்ற கட்டுரைத் தொகுப்பில் இப்படி எழுதி இருந்தேன்.

"23ஆம் தேதி மாலை சாதாரணமாக மாலை 7 மணிக்குச் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார். ஸ்பூனில் உணவை எடுத்து விழுங்கும் தறுவாயில் ஸ்பூன் தவறி விழுந்துவிட்டது. அசோகமித்திரன் இறந்து விட்டார். அவர் குடும்பத்திற்கே சிறிது நேரம் கழித்துத்தான் தெரிந்தது. இவ்வளவு சுலபமாக மரணத்தை அணைத்துக்கொண்டவர் அசோகமித்திரனாகத்தான் இருக்க வேண்டும்."
நான் ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போது மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு போய் பார்ப்பேன்.  என் நண்பர்கள் சிலர் நான் மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு செல்வதைக் கிண்டல் செய்தார்கள்.
உண்மையில் மிளகாய்ப் பஜ்ஜி ஒரு காரணமே தவிர இதைச் சாக்காக  வைத்துக்கொண்டு அவரைச் சந்தித்தேன் என்பதுதான் முக்கியம்.
பொதுவாக அவர் அதிக நேரம் பேச எடுத்துக் கொள்ள மாட்டார்.   அவர் கருத்தெல்லாம் துண்டு துண்டாகத்தான் இருக்கும்.
ஒருமுறை அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு நாடகம் எழுதிக் கொண்டிருந்தார்.   கஸ்தூரி பாய் கதாபாத்திரமாக வைத்துக்கொண்டு.  இந்த வயதில் எல்லாவித முயற்சிகளிலும் ஈடுபடுகிறாரே என்று தோன்றும்.
இந்த நாடகத்தை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பப் போகிறீர்கள் என்று கேட்டேன்.
உங்களுக்குத்தான் என்றார் அவர்.
அதேபோல் எனக்கு அனுப்பினார்.”நானும் மகிழ்ச்சியுடன் பிரசுரம் செய்தேன்.
தொடர்ந்து அவர் விருட்சத்திற்குக் கட்டுரை எழுதி  அனுப்புவார்.  நானும் விடாமல் பிரசுரம் செய்து கொண்டிருப்பேன்.    விருட்சத்தில் நாலைந்து பக்கங்களுக்குள் அவர் கட்டுரை முடிந்து விடும்., 
ஒரு சமயம் அவர் உடனே கட்டுரை எழுதி அனுப்பி விடுவார்.  ஆனால் விருட்சம் கொண்டுவர நான் அதிகமாகக் காலம் எடுத்துக்கொள்வேன்.  அவரைப் பார்க்கும்போது எனக்கு வெட்கமாகக் கூட இருக்கும்.”  
அவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம் அவருக்கு எதாவது உதவி செய்துகொண்டே இருப்பேன்.
ஒரு முறைப் பேனா சரியில்லை என்று பேனாவைக் கொடுத்தார்.  நான் பேனாவை ரிப்பர் செய்து அவரிடம் கொடுத்தேன்.  
ஒரு புகைப்பட நெகடிவ் கொடுத்து புகைப்படம் எடுத்து வரச் சொன்னார்.  நானும் எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்தேன்.  ஆனால் அவரைப் பார்ப்பதற்குள் அந்தப் புகைப்பட பிரதிகளை எங்கேயோ வைத்து விட்டேன்.  

திரும்பவும் பிரதி எடுத்து அவரிடம் கொடுத்தேன். எதோ ஒரு நோட்டைத் திருப்பும்போது அந்தப் புகைப்படம் கிடைத்து விட்டது. அவருடைய 60வது வயது கொண்டாட்டின் போது எடுத்த படம் போல் தோன்றுகிறது. அவர் அருகில் இருப்பார்கள் அவர் உறவினர்கள் என்று நினைக்கிறேன்.
பெரும்பாலும் அவரை வங்கிகளுக்கு அழைத்துப் போவேன். அவருக்கு உதவி செய்வதில் நான் பெரிய விருப்பம் கொண்டவன்.
அலமேலு கல்யாண மண்டபத்தில் நானும் கோவிந்தராஜும் ம் சேர்ந்து நடத்திய இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் கலந்து கொள்வார். மாடிப்படி ஏறும்போது அவருக்கு மூச்சிரைக்கும். எனக்கு ஏன்டா இவரைத் தொந்தரவு செய்கிறோம் என்று தோன்றும்.


ஒருமுறை பெங்களூருக்கு அவருடன் சென்றேன். சரஸ்வதி ராமநாதனுக்கு நடந்த கூட்டம். எல்லா இடங்களுக்கும் துணையாகச் செல்வேன்.
ஆல் இந்தியா வானொலிக்கு அவர் கதை படிப்பதற்காக அழைத்துக் கொண்டு போனேன். அங்குள்ள முக்கிய அதிகாரிகளிடம், என்னைச் சுட்டிக் காட்டி, இவரும் கதை எழுதுவார். இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று சிபாரிசு செய்தார். அதன்பின் எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
சமீபத்தில் பழைய தடம் இதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் அசோகமித்திரனை ஒரு பேட்டி எடுத்துப் போட்டிருந்தார்கள். உங்களுக்குப் பிடித்த நண்பர் யார் என்ற கேள்விக்கு, அசோகமித்திரன் என் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவரிடம் உள்ள எதாவது புத்தகத்தைக் கொடுத்துக்கொண்டிருப்பார்.
பெரும்பாலும் அவர் புத்தகங்களும், மற்றவர்கள் புத்தகங்களும் கொடுத்துக்கொண்டிருப்பார்.
6.3.2017 அன்று எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அதுதான் அவர் எனக்குக் கடைசியாகக் கொடுத்த புத்தகம். அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016) என்ற ரூ.1450 விலையுள்ள புத்தகத்தை கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். 23ஆம் தேதி அவர் இறந்து விட்டார். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும்போது எனக்கு அவர் ஞாபகம் வந்து கொண்டிருக்கும்.
தி.நகரில் ரவி வீட்டில் அவர் வசித்து வந்தார். தி.நகரில் கண்ணதாசன் சிலையிலிருந்து இடது பக்கம் திரும்பி அவர் இருக்கும் இடத்திற்கு அடிக்கடிச் செல்வேன்.
இப்போது கூட கண்ணதாசன் சிலையைக் கடக்கும் போது அவர் ஞாபகம் வராமல் இருக்காது.