இனிக்கும் தமிழ் – 176/டி வி ராதாகிருஷ்ணன்

பூவில் பூத்த பூ

தமிழில் பலவகைப் பாடல்கள் உண்டு.அவற்றில் நமது புத்திக்கு வேலை
கொடுக்கும் பாடல்களும் உண்டு.

உதாரணத்திற்கு, காளமேகப் புலவரின் இப்பாடலைக் காண்போம்..

பூனைக்கு ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால்
ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே – மானேகேள்
முண்டகத்தின் மீது முழு நீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்

இதற்கான அர்த்தம்…

பூவிலே அமர்ந்து தேனை நக்கிக் குடிக்கின்ற வண்டுகளுக்கு (பூ நக்கி) ஆறு கால்கள்
புள் எனில் பறவை.பறவைகளுக்கு ஒன்பது கால்…அதாவது 9 x1/4 = இரண்டே கால் அல்லவா?
அதுபோல யானைக்கு 17x 1/4 =நாலே கால்..

கணக்கு சரிதானே!

இனி அடுத்த வரிகளுக்குச் செல்வோம்….

தாமரை மலரின் மீது முழு நீல மலர்கள் பூத்ததைப் பார்த்தவர் உண்டு
கேட்டவர்கள் இல்லை…இதுவே கடைசி இரு வரிகளுக்கானப் பொருள்..
ஆனால்…இன்னமும் விளங்கவில்லை அல்லவா? அது என்ன பார்த்தவர்..கேட்டவர்
என்கிறீர்களா?

முண்டகம் என்பது தாமரை
முழுநீலம் என்பது குவளை மலர்கள்
தாமரைப் பூவின் நடுவே குவளைப்பூக்கள் பூத்திருப்பதைப்
பார்த்திருக்கிறோம்! ஆனால், இதைக் கேள்விப்படுபவர் நம்புவார்களா?
தாமரைப் பூவில் கருநீலப் பூக்கள் எப்படிப் பூக்கும்?
இங்கு தாமரை மலர் என்பது பெண்ணின் முகத்தைக் குறிப்பதாகும்
கருநீல குவளைப்பூக்கள் அம்முகத்தில் உள்ள கண்களைக் குறிக்கின்றன
பெண்கள்..பூவிலே பூத்த பூக்கள்…
அடடா…என்ன ஒரு கற்பனை?

                       -