லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

——-
40
தாவோவின் இயக்கம் திரும்பிவருதல்

தாவோவின் இயக்கம் திரும்பிவருதல்
இணங்குதல் தாவோவின் வழி
எல்லா பொருட்களுமே இருப்பிலிருந்து பிறக்கின்றன
இருப்பு இருப்பற்றதிலிருந்து பிறக்கிறது
—-

41
சிறப்பானவர்கள் தாவோவைப் பற்றிக் கேள்விப்படும்போது
——

சிறப்பானவர்கள் தாவோவைப் பற்றிக் கேள்விப்படும்போது
உடனடியாக அதை முன்மாதியாகப் பின்பற்றுகிறார்கள்
நடுவாந்திரமானவர்கள் தாவோவைப் பற்றிக் கேள்விப்படும்போது
அதைப் பாதி நம்புகிறார்கள் பாதி சந்தேகிக்கிறார்கள்
முட்டாள்கள் தாவோவைப் பற்றிக்கேள்விப்படும்போது
அவர்கள் அதைப் பார்த்து நகைக்கிறார்கள்
அப்படி அவர்கள் நகைக்கவில்லையென்றால
அது தாவோவாக இருப்பதில்லை
ஆகையால் இவ்வாறாகச் சொல்லப்படுகிறது:
ஒளியினூடான பாதை இருளடர்ந்து இருப்பதாக பாவனை கொள்கிறது
முன்செல்லுதல் பின்னோக்கிச் செல்வது போலத் தோன்றுகிறது
நேரடியான பாதை நீளமாக இருக்கிறது
உண்மையான சக்தியும் அதிகாரமும் பலவீனமாய் இருப்ப்தாய் தோன்றுகிறது
உண்மையான தூய்மை களங்கப்படுத்தப்பட்டதாய் தோன்றுகிறது
உண்மையான உறுதி மாறக்கூடியதாய் தோன்றுகிறது
உண்மையான தெளிவு கலங்கியதாய் தோன்றுகிறது
ஆகப்பெரிய கலை நுட்பமற்றதாய் தோன்றுகிறது
ஆகப்பெரிய காதல் அலட்சியத்தால் நிரம்பியதாய்த் தோன்றுகிறது
ஆகப்பெரிய ஞானம் குழந்தைத்தனமாய் தோன்றுகிறது
தாவோவை எங்கேயும் காணமுடிவதில்லை
ஆகப்பெரிய நிகழ்வு வடிவமற்றதாய் இருக்கிறது
அதன் வழி மறைந்திருக்கிறது
அது பெயரற்றது
இருப்பினும் அதுவே அனைத்திற்கும் ஊட்டமளித்து முழுமையாக்குகிறது
—-

42
தாவோ ஒன்றைப் பிறப்பிக்கிறது
—-

தாவோ ஒன்றைப் பிறப்பிக்கிறது
ஒன்று இரண்டைப் பிறப்பிக்கிறது
இரண்டு மூன்றைப் பிறப்பிக்கிறது
மூன்று எண்ணற்ற இருப்புகளை பிறப்பிக்கிறது
எண்ணற்ற இருப்புகள்
யின்னைத் தாங்கியிருக்கிறன
யாங்ஙைப் பிடியில் வைத்திருக்கின்றன
நடு நிலையான சக்தி இரண்டையும் பிணைக்கிறது
சாதாரண மனிதர்கள் ஏகாந்தத்தை வெறுக்கிறார்கள்
ஆனால் குருவானவர் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்
ஏகாந்தத்தைத் தழுவி அவர்
முழுப் பிரபஞ்சத்தோடும் ஒன்றாய் இருப்பதாய்
உணர்ந்தறிகிறார்

43
உலகில் மிக மிக மென்மையானது
—-

உலகில் மிக மிக மென்மையானது
மிக மிகக் கடினமானதை வென்றுவிடுகிறது
எது தன்னளவில் உள்ளீடற்றதாய் இருக்கிறதோ
அது வெளியற்ற இடத்திலும் நுழைந்துவிடுகிறது
அதுவே செயலின்மையின் மதிப்பையும் காட்டித் தருகிறது
சொற்களற்று உபதேசம் செய்தல்
செயல்களற்று நிகழ்த்திக் காட்டுதல்
அதுவே குருவின் வழி