பிறந்த நாள் பரிசு/ஹரணி

வியாழக்கிழமை விடிந்தவுடனே செண்பகா குமாரவேலை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

        அடுத்த வியாழக்கிழமை நம்ப பிள்ளைக்குப் பிறந்த நாள் மறந்துடாதீங்கள். இந்த வருஷம் புள்ள முதமுதல்ல காலேஜிக்கு போவப்போறான்.. சட்டை பேண்ட்டோட அவனுக்கு ஒரு பிரேஸ்லெட்டும் எடுத்துடுங்க மதிப்பா இருக்கும்.

        காலேஜிக்குதானே போறான்.. இல்ல கல்யாணம் பண்ணிக்கப் போறானா?

      நல்லா பாருங்க.. தோளுக்கு ஒசரம் வளந்துட்டான்.. ஏதாச்சும் ஒரு தங்கமாச்சும் அவன் உடம்புல இருக்கா.. பேசாம பிரேஸ்லெட் வாங்கிகொடுங்க..

       இன்னிக்கு பவுன் விக்கற விலையிலே பிரேஸ்லெட் என்ன விலைன்னு உனக்குத் தெரியுமா?

        என்ன விலையா இருந்தா என்ன? வாங்கிக்கொடுங்க.. நான் குழுவுலேர்ந்து பணம் வாங்கி வச்சிருக்கேன். மிச்சத்தைப் போட்டு அவனுக்கு ஒரு பவுன்ல எடுத்துக்கொடுங்க..

        சரி பார்ப்போம் என்று சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிப்போனான்.

        மாலையில் பையன் ராகவனை அழைத்தான் குமாரவேலு.

        டேய் தம்பி வாடா.. நகைக்கடைக்குப் போயிட்டு வரலாம்.

        எதுக்குப்பா?

        உனக்கு பிரேஸ்லெட் எடுக்கலாம்னு அம்மா சொன்னா. அடுத்த வாரம் பிறந்தநாள் வேற வருதுல்ல.

        எனக்கு வேண்டாம்பா. இதெல்லாம் பிடிக்காது.

        காலேஜிக்கு போவப்போற.. அம்மா உனக்கு வாங்கித்தரேன் போட்டுக்கடா என்றாள் செண்பகா.

        வேண்டாம்மா.

        ஏண்டா முதமுதல்ல வாங்கித்தரேன் வேண்டாங்கறே..

        இல்லம்மா.. அப்பாவுக்கு ஒருதடவ அவசரம்னு பெரியப்பா கடன் வாங்கி கொடுத்தாரு பணம். இன்னிவரைக்கு அப்பா அதப்பத்தி கவலைப்படலே.. பெரியப்பாவும் அப்பா கஷ்டப்படுறாருன்னு கேக்கலே.. இதே வேற இடத்துல வாங்கியிருந்தா கொடுத்திருப்பீங்க.. கடன் வச்சிக்கிட்டு இப்போ பிரேஸ்லெட் எதுக்கும்மா? ஒவ்வொரு பர்த்டேக்கும் பெரியப்பா பணம் வச்சிகொடுக்கறாரு ஆனா இந்தப் பணத்தப் பத்தி கேக்கறதுல்ல. பேசாம பெரியப்பாக்கிட்ட பணத்தை கொடுங்க.. அவருக்கும் குடும்பம் இருக்குல்ல. பிரேஸ்லெட் அப்புறம் வாங்கிக்கலாம்.

        செண்பகாவிற்கும் குமாரவேலுவிற்கும் என்னவோ போலிருந்தது.

       ராகவனிடமே பணத்தைக்கொடுத்து நீயே போய் பெரியப்பாக்கிட்ட கொடுத்திட்டு வந்துடு என்றார்கள்.

        என்னடா தம்பி என்றார் பெரியப்பா.

        அப்பா கொடுத்திட்டு வரச்சொன்னாங்க பெரியப்பா என்று பணத்தை நீட்டினான்.

        இது எதுக்குடா? உங்க அப்பாவே கஷ்டப்படுறான்.. நீ வேற காலேஜ் படிக்கப்போறே.. அதுக்கு கொடுத்ததா இதை நீயே வச்சுக்க.. என்னால முடிஞ்சது இதான்.

        இதுதான் உண்மையான பிறந்தநாள் பரிசாக ராகவன் நினைத்தான்.