மன்னிக்க வேண்டுகிறேன்/பிரேம பிரபா

என் வயதையொத்த, என்னை விட இளயவர்களின் மரணச் செய்தியைக் கேட்டவுடன், பாரமாக ஏதோ ஒன்று மனதை அழுத்துகிறது. இவ்வளவுதான வாழ்க்கை. இதற்குத்தானா நாம் இவ்வளவு மெனக்கெடவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. இது போன்ற நிகழ்வை என்னால் அவ்வளவு எளிதாகக் கடந்து போகமுடியவில்லை. நான் இப்போது கடந்து வரும் ஒவ்வொரு நொடியும் எனக்கானதில்லை என்று உணரும் போது, சீரிப்பாய்ந்த ஒரு எரிமலையின் அடிவாரத்தில் மென் சூட்டுடன் சாம்பல் மேடுகளைக் கடப்பது போலத் தோன்றுகிறது நிகழ் வாழ்க்கை. என் சுய சமாதானங்களுக்கான காரணங்கள் எனக்குப் போதுமானதான திருப்தி அளிக்கவில்லை என்ற அந்த ஒரு நொடியில், நான் இது வரை சந்தித்த பலரிடம் ஒரு சிறிய மன்னிப்பு கோரினால் என்ன என்று தோன்றுகிறது. நான் தெரிந்தோ இல்லை தெரியாமலே செய்த பிழைகளை மன்னித்தருள ஒரு பட்டியல் தயார் செய்கிறேன்.

முதலில் இருந்து ஆரம்பிக்க, அம்மாதான் முதலில் வந்தாள். அளப்பறிய அன்பானவளாய் இருந்தாலும் அந்த அன்பை காட்டத் தெரியாமலேயே வாழ்ந்து முடித்தவள். என் முதல் மன்னிப்பு அவளிடம்தான் கேட்டேன். அடுத்து என் வாழ்க்கையை பல முறை நெறிப்படுத்தியிருக்கிறது பாட்டியின் அன்பான கண்டிப்பு. அவளின் எதையும் எதிர்பார்க்காத பக்தி, அம்மாவால் நியாயமான விளக்கங்களால் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அதை அப்படியே என் மகனிடம் நான் மீள் பதிவு செய்துவிட்டேன்.

அடுத்து என் மனைவி. அவளுக்கும் கடவுளுக்குமான இடைவேளி நேர்கோட்டில் இருந்தது. கடவுள் உயரத்திலும், சற்றே குறைந்த உயரத்தில் அவளும் இருக்கிறாள். அந்த இடைவேளியை பக்தியால் நிரப்ப அனுதினமும் முயற்சிக்கிறாள். அதுவே அவளுக்கு மனசமாதானம் கொடுத்தது. ஆனால் எனக்கும் கடவுளிற்குமான இடைவேளி கை கொடுக்கும் தூரத்தில் ஒரு இடைக்கோடாகத்தான் இருந்திருக்கிறது.

அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாகிவிட்டது. கடைசியில் கடவுளிடன் மன்னிப்பு கேரினால் என்ன என்ற குழப்பத்தில் நான் கைபிசைந்து தடுமாறி நிற்க “ உன்னை எப்போதோ மன்னிச்சிட்டேன், போ!” என்று என் தேளினைத் தட்டி சமாதானப்படுத்தும் போது அவரை தயக்கத்துடன் முதன் முறையாக ஒரு அடி மேலே வைத்தேன். இல்லை இரண்டு அடி. இல்லை மூன்று அடி…. அண்ணாந்து பார்க்க கடவுள் நம்மை விட வலிமையானவாராகத் தெரிந்தார். இந்த உண்மை தெரியும் போது மீண்டும் ஒரு சுற்று வாழ மனம் ஏங்குகிறது.