நானும் ஒரு HIKIKOMORI/பிரேம பிரபா

நியாயத் தீர்ப்பு நாள்

எனக்கும் ஒரு காலத்தில் ஏராளமான நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். வீடு என்பது பசியாற்றவும், படுக்கவும் என்றாகிப்போன வாழ்க்கை. எதையும் முட்டித் தள்ளி, புரட்டிப் போட்டுப் பார்க்கும் சுறுசுறுப்பு. ஆனால் இப்போதெல்லாம் எனக்கான வாழ்க்கை ஒரு பத்தடிக்கு பத்தடிக்கான ஒரு சிறிய அறையில் கைபேசியுடனும் மடிக்கணினியுடனும் முடங்கிப் போய்விட்டது என்று நினைக்கும் போது இது எப்படி சாத்தியமாயிற்று என்று நானே கேட்டுக்கொள்கிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் பலருக்கு நான் இப்படி வாழ்வது மிகவும் பிடித்திருக்கிறது. ஏதோ ஒரு நிரந்தர கண்காணிப்பு வளையத்தில் இருப்பதான நிர்வாணம் என்னை அதிகம் நெளிய வைக்கிறது.

கூடுதல் மகிழ்ச்சியை யாருடனும் அதே மகிழ்ச்சியுடன் பகிர்தல் சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் வேண்டிய அளவு துக்கித்து அதைப் பன்மடங்காக ஊதிப் பெருக்கி கவலைப்பட்டு முடங்க முடிகிறது. உறவுகள் சார்ந்த பெரும் சலிப்பு தனிமையைத் தேட வைக்கிறது. வாழ்க்கையை சாட்சிக் கூண்டில் நிற்கவைத்து ஒரு நீதிபதி போல குறுக்கு விசாரணைக்குட்படுத்தி கேள்விகளால் கேட்டு திணரவைக்க மனம் ஏங்குகிறது. எனக்கான வாழ்க்கை இன்னும் சிறிது எஞ்சி இருக்கிறது. எனக்கு இப்போதைய அவசரத் தேவை திட்டமிடல் இல்லாத ஒரு நீண்ட பயணம். மீண்டும் புதிய நண்பர்கள், புதிய தேடல்கள் என்று அடுத்த அத்தியாயத்தை தொடங்க வேண்டும். Otherwise I am afraid I will become one more HIKIKOMORI