
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
புனைவாளனின் மூளை வெடிக்கிறது
புழுக்கள் பேசிக்கொண்டு வெளியேறுகின்றன
கடந்து தான் செல்ல போகிறோம்
கசிந்து உருகித் தேங்காதே
காட்டாற்று வெள்ளமாய் பிரவகித்திடு
நொடி மணியாக விரைகிறது
மணி பெருகி நாளாய் வழிகிறது
நாள் கடந்து கடந்து மரணமாய் முடிகிறது
நிறங்களின் உடைவில் சிறகுகள்
துளிர்க்கின்றன
விரிவோடுகிறது வானம்
பெருங்களிப்பின் உற்சவ
சீழ்க்கையொலி தெறிக்கிறது
நீலப்பளிங்காய் மிளிர்கிறது
நீருக்குள் கிடக்கும் வாளாய் ஒளிர்கிறது
முப்பாட்டனின் முகச்செழுமையாய்
மரக்கா மலை
உடைந்த நீர்க்குமிழியாக மறைந்து போனது
தானியங்கள் கொழித்த காலங்கள்
பேரன்பின் சுடருள் கருமை படர்கிறது
நிலங்கள் வழியாக வாழ்க்கை நகர்ந்தது
தாவரங்களாகவே மனிதர்கள்
வேரற்று காற்றோடு அலைபடுதல்
நீங்கா சாபம்.
🦀
