பயணங்களும் பாதைகளும்/பிரேம பிரபா

நமக்கான பயணங்களை நாம் ஒரு போதும் தீர்மானிக்க முடியாது. வழி நெடுக இருக்கும் பாதைகள்தான் நம் பயணத்தைத் தீர்மானிக்கிறது.”

என்னைப் பொறுத்த மட்டில் இதுதான் உண்மை. வாழ்வியலில் நாம் எப்போதாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்ட பரிசுத்தமான உண்மை. நான் இது வரை கடந்து வந்த பாதை நேரான பாதையென்று என்னால் ஒட்டு மொத்தமாகக் கூறமுடியாது. ஒவ்வொரு திருப்பத்திலும் ஏதோ ஒன்று என் ஆர்வத்தை அதிகம் கிளற என் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன். என் கால்களின் ஒத்திசைவான முன்னேற்றத்தை இந்தப் பாழும் பாதைகள்தான் தீர்மானிக்கிறது என்பதை இதுநாள் வரை என்னால் நம்பவே முடியவில்லை.

இனி நான் கடக்க வேண்டிய தூரத்தை எட்டிப் பார்க்கிறேன். இதோ முடிந்துவிட்டது என்ற என் ஆசுவாசத்தை அப்படியே ஒரு அரக்கன் போல மொத்தத்தையும் விழுங்கிவிட்டு துளியும் இரக்கம் இல்லாமல் அந்தப் பாதை நீண்டு கொண்டே போகிறது. தளர்ந்த என் கால்கள் பாதைகளின்தொடர் முத்தங்களால் வலுவிழந்து தன்னிலை மறக்கிறது. மரங்களின் கிளைகளை அசைத்துப் பார்க்கும் சராசரி விசையுடன் வீசும் காற்று என் பயணத்தின் பெருமூச்சாகக் கரைந்து போகிறது.

இப்பொழுதெல்லாம் என்னால் ஒரு நெருஞ்சி முற்களைக் கூட மிக நெருக்கத்தில் ரசிக்க முடிகிறது. தடித்த அடிப்பாகத்தின் செழிப்பான பசுமையுடன் உலர்ந்து காயத்தொடங்கும் முன்னறிவிப்புடன் அதன் நுனிகள் மெல்லிய சென்னிறப் புள்ளிகளை ஒரு கிரீடம் போல பெருமையுடன் சூட்டிக்கொண்டு கடந்து போவோர்களை அலட்சியத்துடன் பார்ப்பது போல எனக்கு பலமுறை தேன்றியதுண்டு. நெருஞ்சி முற்கள் தங்களை அலட்சியத்துடன் விரைவாகக் கடந்து போகும் காற்றினை ஒரு ரண சிகிச்சை மருத்துவரின் நுட்பத்துடன் இரண்டாகக் கிழித்து அதன் ரகசியங்களை ஆராய்ந்து பார்க்கிறது. அது போல நானும் ஒரு கூறிய நெருஞ்சி முள்ளாக உருமாறி பாதைகளைக் கீறி அதன் ரகசியங்களைக் கண்டறிய வேண்டும்.

ஒரு சில இடங்களில் இந்தப் பாதைகள் மூங்கில் பாயைப் போல ஒரு சுருள் வில்லின் விரைப்புடன் சுருண்டு எனக்கான கடக்கும் தூரத்தை குறைத்து வேகு அனுசரனையுடன் நடந்து கொள்கிறது. பல சமயங்களில் முருங்கை மரத்தண்டில் ஒரு சிறிய புள்ளியாகத் துளிர்க்கும் பசைத் திரள் நீள் கோடுகளாக கீழே வழிந்து நெடிய பாதைகளை படைப்பது போல நீண்டு கொண்டே போகிறது. இத்தகைய பாதைகள் என்னை அதிகம் களைப்படைய வைத்திருக்கிறது. உங்களின் ஒவ்வொருவரின் முயற்சியையும் திட்டமிடலையும் ஒரே நொடியில் மேம்படுத்தவோ அல்லது பாழ்படுத்தவோ இந்தப் பாதைகளுக்கு மட்டுமே தெரிந்த குரூர ரகசியங்கள்.

களைப்பின் மிகுதியால் தடுமாறிக்கொண்டே சாலையோரத்தில் இருக்கும் ஒரு சிறிய குன்றின் மேல் ஏறி நின்று கொண்டு அடிவானத்தைப் பார்க்கிறேன். ஒரு சர்ப்பமென நீண்டு கொண்டே போகும் அனைத்து பாதைகளும் முடிந்து அந்த இடம் ஒரு பாலைவனம் போல வெற்றிடமாக வெறித்துக் கிடந்தது.