ஞாபகமிருக்கிறதா?

சௌவி

நேற்று சொன்னது ஞாபகமிருக்கிறதா
எனக்கேட்டுவிட்டு
அலைபேசியை அணைத்துவிட்டாய் நீ

நான் நேற்றுக்குள் இறங்கி
நேற்றைய அத்தனை சொற்களையும்
அலசிக்கொண்டிருக்கிறேன்
ஞாபகமிருக்கிறதா எனக்கேட்டதற்கான
சொற்கள் கிடைத்துவிடுமென

நேற்றைய நாளெல்லாம்
எனக்கென விழுந்த
ஏராளமான சொற்களுக்குள் நடக்கின்றபோது
இன்றைய எனக்கான சொற்கள்
அங்கங்கே ஏமாந்து நிற்கின்றன

இறந்த காலத்துக்குள்
இறங்கி நடக்கையில்
நிகழ்காலம் கோபித்துக்கொண்டு
தொலைந்து போகிறது
தொலைந்தது மறுபடியும் திரும்ப வருவதில்லை

மறுபடியும்
உன்னிடமிருந்து அழைப்பென்று
அலைபேசி ஒலிக்கிறது

சற்றே பொறு..
சொற்களுக்குள் இறங்கி
அவசர அவசரமாக
நீ கேட்ட சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

ஒரு நாளின் அத்தனை சொற்களுமென்பதால்
இரைச்சல் அதிகமாகவேயிருக்கிறது
இவ்வளவு இரைச்சலூடே
தேடுதல் அவ்வளவு எளிதல்ல

நம்பிக்கையோடு தேடுகிறேன்
கொஞ்சம் பொறுத்துக்கொள்
சொற்களைக் கண்டுபிடித்தவுடன்
நானே அழைக்கிறேன்

One Comment on “ஞாபகமிருக்கிறதா?”

  1. கவிஞரின் அற்புதமான சொற்களில் மூழ்கி விட்டேன். வெளியே வர முடியவில்லை! அற்புதமான கவிஞர். இன்னும் அவரது ஹோட்டல் பையன்களையே மறக்க முடியாத நிலை. அதற்குள் இது வேறு!

Comments are closed.