தோகை மா மயில்

கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 7

அன்று முழுநிலவு. அதை அனுபவிக்க ஒரு மங்கை உப்பரிகைக்கு வருகிறாள். அன்று கிரகணம்; ஆதலால் நிலவை விழுங்க வந்த இராகு இப்பெண்ணின் முகத்தைக் கண்டு இவள் தான் நிலவோ என்று மயக்கம் கொள்கிறான். அப்போது அப்பெண் மீண்டும் உள்ளே செல்கிறாள். அவள் நடையழகைக் கண்ட இராகு அவள் நிலவு இல்லை மயில் என்று முடிவு செய்து அவளை விழுங்காமல் விட்டு விடுகிறான்.

இறுதிவரை இராகு அவளைப் பெண் என எண்ணாமல் சென்று விடுகிறான் என்பது இந்த விவேக சிந்தாமணிப் பாடலுக்கு சுவையூட்டுகிறது

“மாகமா மேடை மீதில்
மங்கைநின் றுலாவக் கண்டு
ஏகமா மதியென் றெண்ணி
யிராகுவந் துற்ற போது
பாகுசேர் மொழியினாளும்
பற்றியே பாதம் வாங்கத்
தோகைமா மயிலென் றெண்ணித்
தொடர்ந்தரா மீண்டதன்றே”